- பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மக்களவையை ‘காமன்ஸ் சபை’ என்றும் மேலவையை 'பிரபுக்கள் சபை' என்றும் அழைப்பார்கள். அதே மாதிரியில் உருவாக்கப்பட்டதுதான் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்.
- மக்களவைக்குப் பிரதிநிதிகள் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த உறுப்பினர்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். அதற்குள் ஆட்சி கவிழ்ந்தாலோ, அரசே பதவிக் காலம் முடிவதற்குள் மீண்டும் பொதுத் தேர்தலைச் சந்திக்க முற்பட்டு மக்களவையைக் கலைத்துவிடப் பரிந்துரைத்தாலோ மக்களவை உறுப்பினர்கள் பதவி இழப்பார்கள். ஆனால், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 6 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள்.
- மக்களவை தற்சமயம் 543 இடங்களைக் கொண்டது என்றால், மாநிலங்களவை 245 இடங்களைக் கொண்டது. இவற்றில் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு என்று துறைசார் சாதனையாளர்கள் 12 பேர் ஒன்றிய அரசின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். இப்படியான நியமன உறுப்பினர்கள் மாநிலங்களவை விவாதத்தில் பங்கேற்கலாம். ஆனால், வாக்குரிமை கிடையாது. ஏனையோர் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களின் வழியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- மாநிலங்களவை என்றுமே காலியாவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சுழற்சிமுறையில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- மாநிலங்களவை உறுப்பினர்களைச் சட்டமன்ற உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப இத்தனை உறுப்பினர்கள் என்ற கணக்கு உண்டு. உதாரணமாக உத்தர பிரதேசத்துக்கு 31. சிக்கிமுக்கு 1.
அதிகாரத்தில் ஒரு படி கீழே!
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதிகாரத்தில் சமமானவை என்பதுபோல மேலோட்டத்தில் சொல்லப்பட்டாலும், மக்களவை ஒரு படி மேலேயே வைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். அதேபோல, 'நிதி மசோதா'வில் மாநிலங்களவைக்கு அதிகாரம் கிடையாது.
- முக்கியமான மசோதாக்கள் இரு அவைகளிலும் விவாதிக்கப்படுவதும், நிறைவேற்றப் படுவதும் அவசியம் என்றாலும், அங்கேயும் மக்களவைக்குக் கூடுதல் சக்தி உண்டு.
- ஒரு சாதாரண மசோதா மாநிலங்களவையில் தோற்றால், மீண்டும் ஒரு முறை மக்களவைக்குக் கொண்டுசென்று அதற்கு ஆதரவைப் பெற்று, அங்கே இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுவிட்டால் மீண்டும் மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை.
- இதற்கெல்லாம் சொல்லப்படும் ஒரே காரணம், மக்களவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், எனவே மக்களவை என்பது செல்வாக்கு மிக்கது என்பதுதான்.
மாநிலங்களவையின் சிறப்பு
- ஆனால், மாநிலங்களவைக்கு வேறு சில சிறப்புகள் உண்டு. குறிப்பாக நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கவல்ல அரசமைப்புச் சட்டம் சார்ந்த மசோதாக்கள் எதையும் மாநிலங்களவைக்குக் கொண்டுவராமல் நிறைவேற்ற முடியாது.
- இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 249வது பிரிவின்படி, மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள ஓர் அம்சத்தை, ஒன்றிய அரசின் அதிகாரப் பட்டியல் அல்லது கூட்டு அதிகாரப் பட்டியலுக்கு குறிப்பிட்ட சில காலத்துக்கு மட்டும் மாற்றும் சிறப்பு அதிகாரம் மாநிலங்களவைக்கு இருக்கிறது.
- அனைத்திந்திய (அரசுப் பணி) சேவைகளில் புதிய பிரிவை உருவாக்கும் அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தின் 312வது கூறின்படி மாநிலங்களவைக்கு இருக்கிறது.
- மக்களவை கலைக்கப்பட்டிருந்தால், நெருக்கடிநிலை அறிவிப்பை ஏற்று குறிப்பிட்ட சில காலத்துக்கு அதை அனுமதிக்கும் அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தின் 352வது பிரிவின் கீழ் மாநிலங்களவைக்குத் தரப்பட்டிருக்கிறது.
அரசமைப்பு நிர்ணய சபையில் விவாதம்
- மாநிலங்களவைக்குக் கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று இன்று பேசுகிறோம். ஆனால், மாநிலங்களவையே தேவை இல்லை என்ற விவாதம் நம்முடைய அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் வலுவாக நடந்திருக்கிறது.
- மக்களவை மட்டுமே இருந்தால் போதும், அரசு சட்டமியற்ற முடியாமல் முட்டுக்கட்டை போடவே மாநிலங்களவை உதவும் என்று மாநிலங்களவையை எதிர்த்தவர்கள் அதிகம். ஆனால், மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையோடு வரும் ஒரு கட்சி தன்னுடைய நினைப்புக்கேற்ற படி ஆட்டம் போடாமல் இருக்க அதற்கு ஒரு கடிவாள அமைப்பு தேவை என்பதாலேயே மாநிலங்களவை யோசனை ஏற்கப்பட்டது. மேலும், எல்லா மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத்தில் ஒரு முறையான பிரதிநிதித்துவம் இருக்க இது அவசியம் என்றும் உணரப் பட்டது.
- மாநிலங்களின் பிரதிநிதிகள் வெவ்வேறு அரசியல் இயக்கங்களையும் கொள்கைகளையும் சார்ந்து தேர்ந்தெடுக்கப்படுவதே இந்திய ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கிறது. ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடிவுகளைத் திணிக்க முடியாமல் தடுக்கிறது. மக்களுடைய நலன் சார்ந்த சட்டங்கள் தவிர மற்றவைக்கு இரு அவைகளின் ஆதரவையும் ஆளும் கட்சி அல்லது கூட்டணியால் பெற முடியாமல் தடுக்கப்படுகிறது. உண்மையான கூட்டாட்சிக்கு மாநிலங்களவை இந்த வகையில் பயன்படுகிறது என்று மாநிலங்களவைக்கு ஆதரவாகப் பேசப் பட்டது.
- மக்களவை கலைக்கப்பட்டாலும் மாநிலங்களவை கலைக்கப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை. ஒன்றிய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று பதவியை இழந்திருந்தாலும், பொதுத் தேர்தல் முடிந்து அடுத்த அரசு பதவியேற்கும் வரையில் இடைக்கால அரசாக நீடிக்க முடியும். நிர்வாகத்தில் நிரந்தர விளைவுகளை ஏற்படுத்தும் முடிவுகளை அப்போது அதனால் எடுக்க முடியாது.
- நிதி நிர்வாகம் தொடர்பாக செலவு அனுமதி கோரிக்கை மசோதாக்களை மட்டுமே தாக்கல் செய்ய முடியும், நிரந்தர ஏற்பாடாகக் கருதப்படும் வரவு – செலவு அறிக்கையை முற்ற முழுக்க தாக்கல் செய்ய முடியாது. இவ்வாறு மக்களவை செல்வாக்கு பெற்ற அவையாக இருந்தாலும் அது செயல்படுவதற்கு சில சட்டரீதியான கட்டுப்பாடுகளையும் அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.
முக்கியத்துவம்
- கூட்டாட்சியில் ஈரவை ஜனநாயகமுறை அவசியம்.
- இது மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை மாநிலங்களவை மூலம் வழங்க உதவுகிறது. இப்போதிருப்பதைப் போல இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே அதிக தொகுதிகளைக் கைப்பற்றி ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துவிட முடியும். ஆட்சி மொழி தொடங்கி வரிச் சீர்திருத்தம் வரையில் ஆளும் கட்சியின் ஒரு நோக்கு திட்டங்களுக்குக் கடிவாளம் போடவும் சரியான பாதையில் திருப்பிவிடவும் மாநிலங்களவை மிகவும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் அரசு நிர்வாகம், சட்டமியற்றும் நாடாளுமன்றம், சட்டங்களுக்கு விளக்கம் தரும் நீதி நிர்வாக அமைப்பான நீதித் துறை ஆகிய மூன்றும் அவ்வவற்றின் வரம்புக்குள் செயல்படுவதை விவாதங்கள் மூலம் வலியுறுத்த மாநிலங்களவை அவசியம்.
- மக்களுக்கு வாக்குறுதி தந்து ஆதரவு பெற்றுவிட்டோம் என்றோ மக்களுடைய நன்மைக்காக இது என்று கூறியோ சில வேளைகளில் தேச நலனுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய சட்டங்களை அல்லது திட்டங்களை ஆளும் கட்சி அல்லது கூட்டணி அமல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும். அதை மறுபரிசீலனை செய்யுமாறு கூறவும் அந்த மசோதாக்கள் மீது நேர்மையாக விவாதம் நடத்தி, அவசரம் கூடாது என்று உணர்த்தவும் மாநிலங்களவை அவசியம்.
- நாடாளுமன்றம் என்பது சட்டம் இயற்றுவதற்கான அவை மட்டுமல்ல, மக்களுடைய பிரச்சினைகளை விரிவாகப் பேசவும் தீர்வுகளைக் கூறவும் ஏற்பட்டது. இந்த வேலையை மக்களவையை விட மாநிலங்களவை விருப்பு – வெறுப்பு இல்லாமல் நடுநிலையுடன் செய்ய வாய்ப்புகள் அதிகம். ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கை அடையாளம் கண்டு எச்சரிக்கவும் மாநிலங்களவை அவசியம்.
- பொதுத் தேர்தலில் சாதி, மதம், பண பலம் ஆகியவற்றை அதிகம் கொண்டவர்கள்தான் வெல்ல முடிகிறது என்பது வெளிப்படையான உண்மை. இப்படி ஏதும் இல்லாத நல்லவர்கள், வல்லவர்கள் உறுப்பினர்களாக மாநிலங்களவை அவசியம். பிரதிநிதித்துவம் பெறாத சமூகங்கள், பழங்குடிகள், சிறுபான்மை இனத்தவர், மகளிர், நலிவுற்றவர்கள் பிரதிநிதித்துவம் பெறவும் மாநிலங்களவை ஒரு வழி.
மாநிலங்களவையில் தேவைப்படும் சீர்திருத்தம்
- அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற ஜனநாயக நாடுகளில் அனைத்து மாநிலங்களுக்கும் மேலவையில் சமமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையிலே மாநிலங்களவைக்கான இடங்களும் தீர்மானிக்கப்படுகின்றன. விளைவாக உத்தர பிரதேசத்துக்கு 36 இடங்கள் என்றால், சிக்கிமுக்கு ஒரு இடம்தான். இது பிராந்திய சமநிலைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது. இதை மாற்ற வேண்டும்.
- முன்பெல்லாம் ஒரு மாநிலத்தில் பிறக்காதவராக இருந்தாலும், குறைந்தபட்சம் அந்த மாநிலத்தின் வாக்காளராக இருந்தால்தான் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த நிபந்தனை நீக்கப்பட்டு, நாட்டின் எந்தப் பகுதியில் வசிப்பவரும் எந்த மாநிலத்திலிருந்து வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தேர்தல் விதிகள் திருத்தப்பட்டன.
- தேசியக் கட்சிகள் தங்களுக்குப் போதிய மக்களவை உறுப்பினர்கள் கிடைக்காத மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக்கூட மாநிலங்களவை மூலம் தேர்ந்தெடுத்து அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய இதைப் பயன்படுத்திக்கொள்கின்றன. விளைவாக மாநிலங்களவை எந்தக் காரணத்துக்காக உருவாக்கப்பட்டதோ - அந்தந்த மாநிலங்களின் குரல்கள் ஒலிக்க வேண்டும் - அந்த நோக்கம் சிதைகிறது. இதற்கு மாற்றாக மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவோரை அந்தந்த மாநிலங்களைச் சார்ந்தோரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
- நாட்டின் முக்கியமான முடிவுகள் எது ஒன்றும் மாநிலங்களவையின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்படக் கூடாது எனும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
- இவையெல்லாம் மாநிலங்களவை சார்ந்து தொடர்ந்து வலியுறுத்தப்படும் சீர்திருத்தங்கள் ஆகும்.
- எப்படியும் மாநிலங்களவை என்பது அவசியமான அங்கம். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அதன் பங்களிப்பு மேலும் கூர்மைப்படுத்தப்பட வேண்டும்.
நன்றி: அருஞ்சொல் (13 – 06 – 2022)