TNPSC Thervupettagam

மாநிலங்களவையிலும் பெரும்பான்மை: எல்லையற்றதா மத்திய அரசின் அதிகாரம்?

May 30 , 2019 2006 days 1140 0
  • தற்போது மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றிபெற்றிருக்கும் பாஜக, கூட்டணிக் கட்சிகளின் இடங்களையும் கூட்டினால் 353 இடங்களைப் பெற்றிருக்கிறது. மக்களவையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு இன்னும் 10 இடங்களே தேவை. தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் தனது கூட்டணியை விரிவுபடுத்திக்கொள்ளும் என்றால் 2/3 பெரும்பான்மையும் சாத்தியமே.
  • இந்நிலையில், அடுத்து மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு இடங்கள் அதிகரிக்கவிருக்கின்றன. மாநிலங்களவையில் 2019-ன் இறுதியில் 10 இடங்களும், 2020-ல் 72 இடங்களும் காலியாகின்றன. அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கும் மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக பெரும்பான்மை பெற்றால், அடுத்த ஆண்டின் இறுதியில் மாநிலங்களவையிலும் பாஜக பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருக்கும்.
  • மாநிலங்களவையில் ஒரு சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதற்கு 123 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் 65 பேர் மட்டுமே இருக்கின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 102 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • என்றாலும், இவ்விரண்டு அணிகளிலும் சேராத மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் 73 பேர் உள்ளனர். தற்போதைக்கு, மாநிலங்களவையில் தனக்கிருக்கும் பெரும்பான்மையை மட்டும் வைத்துக்கொண்டு பாஜகவால் எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியாது. ஆனால், அடுத்த ஆண்டின் இறுதியில் பாஜக மக்களவையில் மட்டுமின்றி, மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பெற்றிருக்கும்.
பண மசோதா
  • நரேந்திர மோடி பிரதமராகப் பதவி வகித்த முதலாவது ஆட்சிக்காலத்தில் பாஜகவுக்கு மக்களவையில் மட்டுமே பெரும்பான்மை இருந்தது. மத்திய அரசால் இயற்றப்படுகிற சட்டங்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அரசமைப்புச் சட்ட விதிகளால் சட்டமியற்றுவதில் நெருக்கடிகளையே சந்தித்தது பாஜக.
  • முத்தலாக் சட்டத்தை மக்களவையில் நிறைவேற்ற முடிந்ததேயொழிய மாநிலங்களைவையில் முடியவில்லை. எனவே, அதை அவசரச் சட்டமாக இயற்றியது. ஆதார் சட்டத்தைப் பண மசோதா என்று குறிப்பிட்டு, மக்களவைப் பெரும்பான்மையோடு நிறைவேற்றியது.
  • மாநிலங்களவை பெரும்பான்மையைத் தவிர்ப்பதற்காக, பண மசோதா என்று குறிப்பிட்டு, மக்களவையிலேயே சட்டங்கள் இயற்றிக்கொள்வதைக் கடந்த ஆட்சிக்காலத்தில் ஒரு உத்தியாகவே கையாண்டது பாஜக. அரசமைப்புச் சட்டக் கூறு 110-ன் கீழ் கூறப்பட்டுள்ள ஏழு அம்சங்களில் ஒன்றைக் கொண்டிருக்கும் சட்டத்தைத்தான் பண மசோதா என்று குறிப்பிட வேண்டும்.
  • ஆனால், அவற்றின் எல்லைகளை மீறிய ஆதார் சட்டத்தையும்கூடப் பண மசோதா என்ற பெயரிலேயே அறிமுகப்படுத்தியது பாஜக அரசு. பண மசோதா என்று சபாநாயகரால் குறிக்கப்பட்டால், மக்களவையில் பெரும்பான்மை பெற்றாலே போதும், மாநிலங்களவையில் எதிர்ப்புகள் இருந்தாலும் நிறைவேற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. சபாநாயகரின் இந்த அதிகாரத்தில் நீதிமன்றம் குறுக்கிடுவதில்லை என்பதால், இந்த நடைமுறையைத் தேர்ந்தெடுத்தது. இது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் என்ற விமர்சனங்களையும் அது காதில் வாங்கவில்லை.
  • சட்டங்களை இயற்றவும் திருத்தவும் தேவைப்படும் நாடாளுமன்றப் பெரும்பான்மையை ஒவ்வொரு வகைமைக்கும் வெவ்வேறாக நிர்ணயித்திருக்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். தனிப் பெரும்பான்மை, அறுதிப் பெரும்பான்மை, சிறப்புப் பெரும்பான்மை என்று பெரும்பான்மையைப் பல்வேறு பெயர்களில் வகைப்படுத்துகிறார்கள்.
பெரும்பான்மையின் வகைகள்
  • மக்களவையில் ஒரு கட்சி பாதிக்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றிருப்பதை அறுதிப் பெரும்பான்மை என்கிறோம். அறுதிப் பெரும்பான்மை என்பதைப் பொதுவாக ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை என்கிற வகையிலேயே குறிப்பிடுகிறோம். ஆனால், சட்டமியற்றும்போது அவையில் காலியாக உள்ள இடங்களைத் தவிர்த்துவிட்டு, அப்போது உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்தே பெரும்பான்மை தீர்மானிக்கப்படுகிறது. இதை அவைப் பெரும்பான்மை என்று அழைக்கிறோம். சட்டமியற்றும் நடவடிக்கைகளைப் பற்றி இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடுவதெல்லாம் அவைப் பெரும்பான்மை பற்றியதே. சாதாரணமாக இயற்றப்படுகிற சட்டங்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அவைப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்டாலே போதுமானது. நம்பிக்கையில்லா தீர்மானங்களை நிறைவேற்றவும், மாநிலங்களில் நெருக்கடிநிலையை அறிவிக்கவும் சாதாரணமான அவைப் பெரும்பான்மையே போதுமானது.
  • அரசமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகளின்படி சட்டங்களை இயற்றுவதற்கு சிறப்புப் பெரும்பான்மை தேவைப்படுகிறது. இதன்படி, அவை உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அவைக்கு வந்து, அவர்களில் பெரும்பான்மையினர் ஆதரிக்க வேண்டும். கூறு 249-ன் கீழ், மாநிலப் பட்டியல்களில் உள்ள விஷயங்களின் மீது மத்திய அரசு சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால், இத்தகைய சிறப்புப் பெரும்பான்மை அவசியம்.
  • உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்குவதற்கும் தேசிய நெருக்கடிநிலைக்கு அனுமதி அளிப்பதற்கும் மாநிலங்களில் சட்ட மேலவைகளைத் தொடங்குவதற்கும் அல்லது ஏற்கெனவே இருக்கும் மேலவையை நீக்குவதற்கும், கூறு
  • 368-ன் கீழ் அரசமைப்புச் சட்டத் திருத்தங்களைச் செய்வதற்கும் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அவையில் பங்கேற்று, 2/3 பெரும்பான்மை பெற வேண்டும்.
மாநிலங்களின் அனுமதி
  • இந்தியக் கூட்டாட்சி அமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதோடு சரிபாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் அவைப் பெரும்பான்மையோடும் அச்சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றிருக்கும் ஆளுங்கட்சி, 15 மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாக இருக்கும்போது இந்தியக் கூட்டாட்சி அமைப்பிலும் திருத்தங்களைச் செய்துவிட முடியும். மக்களவையில் 2/3 பெரும்பான்மையை நெருங்கியிருக்கும் பாஜக, அடுத்த ஆண்டின் இறுதியில் மாநிலங்களவையிலும் பெரும்பான்மையைப் பெறவிருக்கிறது. தற்போது பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி 16 மாநிலங்களில் நடக்கிறது.
  • சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பாஜக பெற்றுவரும் பெரும்பான்மை, அக்கட்சிக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கும், அக்கட்சி நினைத்தால் அரசமைப்பையே திருத்திவிட முடியும் என்றெல்லாம் விருப்பங்களும் அச்சங்களும் எழுகின்றன. ஆட்சிமொழி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட அரசமைப்பின் கூறுகளோடு பாஜகவின் கருத்தியல் முரண்பட்டது என்றாலும், அத்தகைய கூறுகளை பாஜக தான் நினைத்த மாதிரியெல்லாம் திருத்திவிட முடியாது. அரசமைப்புச் சட்டத் திருத்தங்களைப் பற்றிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் அதற்குத் தடையாக நிற்கும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றவே முடியாது என்று 1980-ல் மினர்வா மில்ஸ் வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கூறு 368-ன் கீழ் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றம் தனது மனம் விரும்பியபடியெல்லாம் பயன்படுத்த முடியாது என்பதை அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
  • அரசமைப்பின் அடிப்படை என்பதில் அடிப்படை உரிமைகள், முகப்புரை, மதச்சார்பற்ற தன்மை, கூட்டாட்சி அமைப்பு, அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள், நீதிப் பேராணைகள் வழி தீர்வு பெறும் உரிமை என்று அதன் உள்ளடக்கம் விரிவடைந்துகொண்டே செல்கிறது. எனவே, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை இனிவருகிற மத்திய அரசுகள் மேலும் வலுப்படுத்தலாமேயொழிய, நீக்கிவிட முடியாது. ஒருவேளை, அப்படியொரு முயற்சியில் பெரும்பான்மை அரசுகள் இறங்கினாலும், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அதை அனுமதிக் காது. அரசமைப்புச் சட்டத் திருத்தங்களைச் செல்லாது என்று அறிவிக்கும் அதிகாரமும் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு.
  • நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை அல்ல, உச்ச நீதிமன்ற அமர்வுகளின் பெரும்பான்மையே அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை முடிவுசெய்யும் இறுதி அதிகாரம் படைத்தது.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்