TNPSC Thervupettagam

மாநிலத் தலைகள் அசோக் கெலாட்

November 23 , 2023 417 days 264 0
  • முக்கியத்துவம் வாய்ந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படும், தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஐந்து மாநிலத் தேர்தல்களின் முக்கிய நாயகர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ‘அருஞ்சொல்’. தினம் ஒரு தலைவரைப் பற்றி அடுத்த ஒரு வாரத்துக்கு எழுதுகிறார் மூத்த பத்திரிகையாளர் வ.ரங்காசாரி.
  • வரலாறு காணாத சரிவை காங்கிரஸ் சந்தித்து, ‘இனி நேரு குடும்பத்தினர் கட்சியின் தலைவர் பதவியை எடுத்துக்கொள்வதாக இல்லை’ என்ற முடிவை எடுத்த பிறகு, அந்தப் பதவி தேடிச் சென்றவர் அசோக் கெலாட். ராஜஸ்தான் மாநில முதல்வர். இந்தி மாநிலம் ஒன்றில் இன்றைக்கு காங்கிரஸ் வலுவாக இருக்கிறது; அதிலும் காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஏனைய தலைவர்களைக் காட்டிலும் செல்வாக்கோடு இருக்கிறார் என்றால், அசோக் கெலாட்டைத்தான் சுட்டிக்காட்ட வேண்டும்.
  • பல மாநிலங்களில் ஆளும் காங்கிரஸை உடைத்து தன்னுடைய ஆட்சியை நிறுவும் உத்தியை ராஜஸ்தானிலும் கையாள பாஜக தேசிய தலைமை 2020இல் முற்பட்டது. காங்கிரஸின் இளம் தலைவரும் துணை முதல்வருமான சச்சின் பைலட் தலைமையில் பாஜகவுக்குச் செல்ல தயாராக இருந்தனர். அசோக் கெலாட் அதை உடைத்தார்; பாஜக உள்ளூர் பாஜக தலைமையின் உதவியோடு அவர் இதைச் செய்தார் என்பது அவருடைய சாணக்யத்துக்கான அத்தாட்சி.

கெலாட்டின் அர்ப்பணிப்பு

  • கெலாட்டின் தந்தை லட்சுமண் சிங்கும் காங்கிரஸ்காரர், ஜோத்பூர் நகராட்சியின் தலைவராக இரண்டு முழுப் பதவிக் காலம் இருந்தவர். எனினும், ஒரு சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் என்றே கெலாட்டைக் குறிப்பிட வேண்டும். அவருடைய தந்தையார்  தொழில்முறை மந்திரவாதி, அதாவது மேஜிக் நிபுணர்.  1951இல் பிறந்தவரான கெலாட் அறிவியலிலும் சட்டத்திலும் இளங்கலைப் பட்டமும், பொருளியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
  • காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர் கெலாட். அதை நடைமுறையிலும் கடைப்பிடிப்பதற்காக வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்திலேயே தங்கி பயிற்சிகளை மேற்கொண்டவர். அசைவம் உண்ண மாட்டார். மது, சீட்டாட்டம் உள்ளிட்ட கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. மாலையில் சூரியன் மறையும் முன்னதாகவே இரவு நேர உணவை முடிக்கும் பழக்கம் உள்ளவர். சுய கட்டுப்பாடும் ஒழுங்கும் மிக்கவர். அரசியலில் எல்லோருக்கும் முகம் கொடுப்பவர். மனைவி சுனிதா. மகன் வைபவ், மகள் சோனியா.
  • இளம் வயதிலேயே சமூகத் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டவர் கெலாட். 1971இல் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (இப்போது வங்கதேசம்) பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளைத் தாங்க முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தபோது மேற்கு வங்க மாநிலத்தில் அமைக்கப்பட்ட முகாம்களில் அவர்களுக்குத் தேவைப்பட்ட உதவிகளை 20 வயது அசோக் ஓடியாடி சலிப்பின்றி செய்தார். முகாமுக்கு வந்த பிரதமர் இந்திரா காந்தி இந்த இளைஞரின் அர்ப்பணிப்பு உணர்வால் மிகவும் நெகிழ்ச்சியடைந்தார்.
  • காங்கிரஸ் கட்சிக்கென்று புதிதாகத் தொடங்கிய தேசிய மாணவர் சங்கத்தின் ராஜஸ்தான் மாநில முதல் தலைவராகப் பிறகு கெலாட்டை நியமித்தார் இந்திரா. இப்படித்தான் கெலாட்டின் பயணம் ஆரம்பித்தது.

தனித் திறமை

  • கெலாட் மாலி என்ற சமூகப் பிரிவைச் சேர்ந்தவர். இவர்கள் தோட்டப் பணியில் ஈடுபடும் சமூகத்தினர். பெரிய செல்வாக்குகள் ஏதும் இல்லாத சமூகம். ராஜஸ்தானில் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அரசியலில் அதிகம் இல்லை.  ராஜஸ்தானில் மட்டும் அல்லாது, இந்தி மாநிலங்களில் சாதிக்கு அப்பாற்பட்ட தலைவராக எல்லோராலும் பார்க்கப்படுபவராக கெலாட் உருவெடுத்தார்.
  • பயணம் சாதாரணமானது இல்லை. 1977இல் முதல் முறை அவர் சட்ட மன்ற உறுப்பினராவதற்காகப் போட்டியிட்டபோது வெற்றி வாய்ப்பை இழந்தார். தேர்தல் செலவுக்குப் பணமில்லாமல் தன்னுடைய மோட்டார் சைக்கிளை விற்றார். 1980இல் ஜோத்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தபோது ஜெயித்தார். 1984இல் ஒன்றிய அரசில் அமைச்சர். 1989இல் ஜோத்பூரில் தோல்வி. 1991இல் வெற்றி. பி.வி.நரசிம்மராவ் அமைச்சரவையில் பதவி. 1993இல் காங்கிரஸை வலுப்படுத்தும் நோக்கில் மாநிலப் பொறுப்பு தரப்பட்டது. இதன் பின்னர் மாநில அரசியலில் கவனம் குவிக்கலானார் கெலாட். சர்தார்புரா சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 1999 முதல் தொடர்ந்து அவர் வெற்றி பெற்கிறார்.

உள்கட்சிப் பூசல்

  • இதில் 1998 சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 153இல் அமோக வெற்றி பெற்றது. கெலாட் முதல் முறையாக முதல்வரானார். 2003 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அப்போதும் மாநிலத்திலேயே தங்கி கட்சியை வலுப்படுத்தியதுடன் பேரவையில் சிறந்த எதிர்க்கட்சித் தலைவராகத் திகழ்ந்தார். 2008இல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு 4 இடங்கள் குறைவாகப் பெற்ற நிலையிலும் மீண்டும் ஆட்சியமைத்து முதல்வரானார். 2013 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பதவி கெலோட்டுக்குத் தரப்பட்டது. பிறகு இளையவரான சச்சின் பைலட் மாநில காங்கிரஸ் தலைவரானார்.
  • சச்சின் பைலட் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சிக்கு வலிமை கூட்டினார். 2018இல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், பைலட்டுக்குப் பதிலாக கெலோட்தான் முதல்வராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். பைலட் துணை முதல்வரானார். அரசியலில் பொறுமைக்குப் பேர் போனவரான கெலாட் “ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதும் கணினி – கைப்பேசிகளைக் திறமையாகக் கையாளத் தெரிவது மட்டும் தலைமை நிர்வாகப் பதவிக்குப் போதாது” என்று பைலட்டுடைய பொறுமையின்மையை வெளிப்படையாகவே கண்டித்தார். பைலட் மேற்கொண்ட கலக முயற்சி தோல்வியில் முடிந்த பிறகு, கெலாட் கைகளுக்குள் கட்சி முழுமையாக வந்தது.
  • இளைஞர்கள் ஆதரவு தந்தும் கட்சியின் மேலிடம் கெலாட் பக்கமாக உறுதியாக நின்றதால் இப்போதும் அவர்தான் முதல்வர் பதவிக்கான வேட்பாளர். அவருடைய ஆதரவாளர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு.

தேர்ந்த அரசியலர்

  • கெலாட் முதல்வராக இருக்கும்போது உள்ளிருந்தும் வெளியிருந்தும் அவருடைய பதவிக்கு ஆபத்துகள் வந்துகொண்டே இருந்தன. ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம். அதே போன்று குஜ்ஜர்கள் சமூகத்தினரும் அதிகம். மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமல்லாது, சமூகச் செல்வாக்கிலும் வலிமையான இன்னொரு சமூகம் ராஜபுத்திரர்கள்.
  • மூன்று சமூகமும் தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரை முன்னிறுத்துவதும், கட்சிக்குள் திடீர் கலகங்கள் உருவாவதும் வெவ்வேறு காலங்களில் நடந்துகொண்டே இருப்பது. கெலாட் தன்னுடைய வாழ்நாள் நெடுக இத்தகு சவால்களை வெற்றிகரமாகச் சமாளிக்கிறார்.
  • கெலாட்டின் அணுகுமுறை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது. குஜ்ஜர்கள் சமூகத்தினர் தனி இடஒதுக்கீடு கோரி வன்முறைப் போராட்டங்களில் இறங்கிய காலகட்டத்தில் அவர்களுடைய தலைவரை அழைத்துப் பேசினார் கெலாட். ‘போராட்டம் எவ்வளவு நியாயமாக இருந்தாலும் வன்முறை இல்லாமல் போராடினால் மக்களுடைய ஆதரவு நிச்சயம்’ என்று கூறியதோடு, மார்ட்டின் லூதர் கிங்கின் உருவப்படத்தை நினைவுப்பரிசாக அவருக்கு அளித்ததை இங்கே நினைவுகூரலாம்.
  • இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் அரசுகளில் பதவி வகித்தவர் கெலாட். வெளிப்படையாகவும் அக்கறையுடனும் அவர் செயலாற்றியதை மூன்று பேருமே குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர். கட்சி, ஆட்சி இரண்டையும் எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதைக் கசடறக் கற்றவர். முடிவெடுப்பதில் உறுதி மிக்கவர். 

சிறப்புச் சட்டங்கள்

  • ராஜஸ்தானில் மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றைக் கொண்டுவந்தவர் கெலாட்.
  • மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் அரசு செலவில் உயர் சிகிச்சை பெற, ‘மருத்துவ சிகிச்சை அடிப்படை உரிமைச் சட்டம்’ என்பதை நிறைவேற்றியிருக்கிறார். இந்தியாவுக்கே இது முன்னோடி சட்டம். அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளும் உயிராபத்தான நிலையில் வருவோருக்கு உரிய சிகிச்சைகளை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • இதை மருத்துவர்களும் மருத்துவமனை நிர்வாகங்களும் கடுமையாக எதிர்த்தன. தங்களுடைய தொழில் சுதந்திரத்தை அரசு தலையிடுவதாகவும், தெளிவில்லாத மசோதாவால் தங்களுக்கு இன்னல்களே நேரும் என்றும் எதிர்த்தனர். அனுபவம் மிக்க கெலாட் அந்த எதிர்ப்புகளை முரட்டுத்தனமாக நிராகரிக்காமல், சில திருத்தங்களைச் செய்து அவர்களை அமைதிப்படுத்தினார். அதன்படி 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் மருத்துவமனைகள், அரசிடம் நிலம், நிதியுதவி பெறும் மருத்துவமனைகளுக்கு மட்டும் இது பொருந்தும். சிறிய மருத்துவமனைகள், தனியாகத் தொழில் செய்வோருக்கு இதிலிருந்து விலக்கு தரப்பட்டுள்ளது.
  • குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் (தவணையில்) வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மாதத்துக்கு ஒன்று ரூ.500 விலையில் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
  • கறவை மாடுகளை வைத்திருப்பவர்களுடைய நலனுக்காக புதுவகை காப்பீட்டு திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார். பால் உற்பத்தியாளர்களும் விவசாயிகளும் இரண்டு கறவை மாடுகளை மாநில அரசின் காப்புறுதி திட்டத்தில் சேர்த்துவிடலாம். ஆண்டுக்கு அதிகபட்சம் 8 லட்ச ரூபாய் வரையில் வருமானம் உள்ளவர்களுக்கு இது இலவசம். அதற்கும் மேல் வருவாய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு மாட்டுக்கு காப்புறுதி பிரிமீயமாக ரூ.200 செலுத்தினால் போதும். ஒரு மாட்டுக்கு ரூ.40,000 வீதம் அதிகபட்சம் ரூ.80,000 வழங்கப்படும். இதனால் மாடு வளர்ப்புக்கும் பால் பெருக்கத்துக்கும் ஊக்குவிப்பு கிட்டியிருக்கிறது.
  • விலைவாசி உயர்வால் மாநில மக்கள் பாதிப்படைவதைத் தடுக்க 2,500 இடங்களில் விலைவாசி உயர்வு நிவாரண முகாம்களை நடத்தி அவசியப் பொருள்களை நியாய விலையில் மக்களுக்கு வழங்குகிறார்.

கெலாட்டின் மாய்மாலங்கள்

  • தனக்கு எதிராக பைலட் கலகக் கொடி உயர்த்தி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றபோது மேலிடத்தை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல், பாஜகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜேவிடமும் ஆதரவு கேட்டுப் பெற்றார் கெலாட். ஆட்சிக் கவிழ்க்கப்பட்டாலும் மோடி - ஷா இணை தன்னை முதல்வராக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்தவரான வசுந்தரா காங்கிரஸ் அதிருப்தியாளர்களுக்கு முகத்தைத் திருப்பிவிட்டார்.
  • ராஜஸ்தானில் இருப்பதையே விரும்பும் கெலாட் தன்னை நோக்கி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி வந்தபோதும் அதை நிராகரித்துவிட்டார். பொதுவாக அவர் விசுவாசி என்பதால், கட்சியின் தலைமை இந்த விஷயத்தில் அவருடைய விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் முடிவெடுத்தது. கெலாட் தன்னுடைய விசுவாசத்தை நிபந்தனையற்ற ஆதரவாகக் கட்சித் தலைமை கருதிடலாகாது என்பதை அவருக்கே உரிய வகையில் உணர்த்தினார். மாநில காங்கிரஸார் கெலாட்டைத் தவிர வேறு எவரையும் முதல்வராக ஏற்பதற்கு இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். கடைசியில் கட்சி கார்கேவைத் தேர்ந்தெடுக்கும்படி ஆனது.
  • பொதுவாக, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சியை மாற்றுவது ராஜஸ்தானியர்களின் இயல்பு. இம்முறையும் அப்படி மாற வேண்டும். ஆனால், மாநிலத்தில் கெலாட்டுக்கு இணையான செல்வாக்கு மிக்க வசுந்தராவை இம்முறை முதல்வர் முகமாக பாஜக முன்னிறுத்தவில்லை. சொல்லப்போனால், அவரை ஓரங்கட்டியிருக்கிறது.
  • கெலாட் இந்தச் சூழலைத் தனதாக்கிக்கொண்டிருக்கிறார். எல்லா மாநிலங்களையும் போன்று ராஜஸ்தானிலும் பாஜகவின் முகம் மோடிதான் என்று பாஜக பிரச்சாரம் செய்ய ‘என் மீதான அச்சத்தில் சட்டமன்றத் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தல் ஆக்கிவிட்டிருக்கிறார் மோடி’ என்று பதிலடி கொடுக்கிறார் கெலாட்.
  • வெவ்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் வெல்ல பல காரணங்கள் கூட்டுப் பங்களிக்கலாம். ராஜஸ்தானைப் பொறுத்த அளவில் இம்முறை காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமானால் அதற்கு பிரதான காரணம் அவர்தான், கெலாட்!

நன்றி: அருஞ்சொல் (23 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்