TNPSC Thervupettagam

மாநிலத் தலைகள் கமல்நாத்

November 22 , 2023 416 days 252 0
  • முக்கியத்துவம் வாய்ந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படும், தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஐந்து மாநிலத் தேர்தல்களின் முக்கிய நாயகர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ‘அருஞ்சொல்’. தினம் ஒரு தலைவரைப் பற்றி அடுத்த ஒரு வாரத்துக்கு எழுதுகிறார் மூத்த பத்திரிகையாளர் வ.ரங்காசாரி.
  • சக்தி வாய்ந்த பாஜகவின் சிவராஜ் சிங் சௌகானுக்கு, மத்திய பிரதேசத்தில் இப்போது சிம்ம சொப்பனமாக இருப்பவர் கமல்நாத். மூன்று முறை முதல்வராக மாநிலத்தில் பாஜகவின் ஆட்சியை வலுவாக சௌகான் வைத்திருந்தபோதிலும், காங்கிரஸ் இன்னமும் மாநிலத்தில் உயிர்ப்போடு இருந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ள முக்கியமான காரணம், கமல்நாத்.
  • டெல்லிதான் கமல்நாத்தின் அரசியல் களம். மத்திய பிரதேசத்தின் காங்கி சிந்த்வாரா மக்களவைத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து 9 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் கமல்நாத். மனிதர் கணிசமான நாட்கள் டெல்லியிலேயே இருப்பார் என்றாலும், மாநிலத்தில் கட்சி நடவடிக்கைகளில் எப்போதும் உத்வேகமாக இருப்பது கமல்நாத்துடைய சிறப்பம்சம்.

வளர்ந்த பின்னணி

  • மகேந்திர நாத் – லீலா இணையரின் மகனாக உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் 18.11.1946இல் பிறந்தவர் கமல்நாத். பிராமணர். திரைப்பட விநியோகம், திரைப்படம் திரையிடல், புத்தகப் பதிப்பாளர், வியாபாரம் என்று தொழில் செய்தவர் கமல்நாத்துடைய தந்தை. டேராடூனில் உள்ள ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் படித்தார் கமல்நாத். அப்போது சஞ்சய் காந்தியும் அங்கு படித்ததால் நேரு-இந்திரா குடும்பத்தாருடன் சிறுவயது முதலே நட்பு வளர்ந்தது.
  • பிறகு கொல்கத்தா நகரின் புனித ஸ்டீபன் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அப்பாவுடன் வியாபாரத்தில் ஈடுபட்டார். அனிதா, ரீட்டா என்று இரு சகோதரிகள். கமல்நாத்துக்கு 1973இல் திருமணம் ஆனாது. மனைவி அல்கா. இந்த இணையருக்கு நகுல்நாத், வகுள்நாத் என்று இரண்டு மகன்கள். கமல்நாத்தின் மனைவி அல்காவும் மக்களவைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது மகன் நகுல்நாத் சிந்த்வாரா தொகுதியின் உறுப்பினராக இருக்கிறார்.

அரசியல் நுழைவு

  • காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவில் 1968ஆம் ஆண்டு உறுப்பினராகச் சேர்ந்தார் கமல்நாத். உத்தர பிரதேசத்திலிருந்து குடும்பம் மத்திய பிரதேசத்துக்குக் குடிபெயர்ந்தது. 1979இல் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த இந்திரா காந்தி பொதுக்கூட்ட மேடையிலேயே கமல்நாத்தைத் தன்னுடைய மூன்றாவது மகன் என்று குறிப்பிட்டார்.
  • சிறந்த பேச்சாளரும் துறுதுறுப்பான செயல்பாட்டாளருமான கமல்நாத் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். 1980இல் ஏழாவது மக்களவைக்கு சிந்த்வாராவிலிருந்து காங்கிரஸ் சார்பில் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு அத்தொகுதியிலிருந்து ஒன்பது முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997இல் நடந்த இடைத் தேர்தலில் மட்டும் பாஜக இங்கு வென்றது பிறகு மீண்டும் கமல்நாத்தே தொடர்ந்து வெற்றிபெற்றார்.
  • தொகுதியில் மக்களின் அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றிபெற கமல்நாத் முக்கியக் காரணம். அந்தத் தொகுதிகளில் 5 பட்டியல் இனத்தவர், பழங்குடிகளுக்கான தனித்தொகுதிகள் என்பது சிறப்பு.

வகித்த பதவிகள்

  • ஒன்பது முறை மக்களவை உறுப்பினர், ஆறு துறைகளுக்கு மத்திய அமைச்சர் என்பதோடு, 17.12.2018 முதல் 20.03.2020 வரையில் மத்திய பிரதேச முதல்வராகப் பதவி என்று நிர்வாக அனுபவமும் நிறைந்தவர். கான்பூரில் பிறந்ததால் உத்தர பிரதேசக்காரர், கல்கத்தாவில் படித்ததால் வங்காளி என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்தும் சிந்த்வாரா மக்கள் அவரைத் தங்களுடையவராகவே தொடர்ந்து ஆதரித்துவருகின்றனர்.
  • காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி 2018 பொதுத் தேர்தலில் வெற்றிபெற வைத்த கமல்நாத்தால் பெரும்பான்மை வலுவைப் பெற வைக்க முடியவில்லை. பெரும்பான்மைக்கு 2 தொகுதிகள் குறைவாக இருந்தாலும் பகுஜன் சமாஜ் போன்ற சிறிய கட்சி உறுப்பினர்கள், சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தார் கமல்நாத்.
  • அவருடைய வெற்றியையும் ஆட்சியையும் ஜீரணிக்க முடியாத பாஜகவுக்கு ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு கட்சித் தலைமையுடன் இருந்த அதிருப்தியைப் பயன்படுத்தி, அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரை பதவி விலக வைத்து, ஆட்சிக்கு இருந்த பெரும்பான்மை வலுவைப் பறித்து ஆட்சியைக் கவிழ்த்தது. உடனே சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் மீண்டும் ஆட்சியமைத்தது.
  • இந்தத் துரோகத்தை மாநில காங்கிரஸ் தொண்டர்களும் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்களும் மறக்கவில்லை. இதைத்தான் பிரியங்கா காந்தி சமீபத்தில் நடந்த பிரச்சாரத்தின்போது மேடையிலேயே சுட்டிக்காட்டினார். “ஜோதிர் ஆதித்ய உயரத்தில் குறைந்தவர், பொறாமையில் மிகப் பெரியவர், அவர்களுடைய (ராஜ) குடும்பத்துக்கே உரிய துரோக குணத்தைக் காங்கிரஸிடமும் காட்டிவிட்டார்” என்றார்.
  • ஒன்றிய அரசில் 1991இல் சுற்றுச்சூழல், வனவளத் துறைகளுக்கு தனிப் பொறுப்பு இணை அமைச்சராக பதவி வகித்தார் கமல்நாத். பிறகு 1995-96இல் ஜவுளித் துறை இணை அமைச்சராக தனிப் பொறுப்பு வகித்தார். 2001 முதல் 2004 வரையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார். 2004இல் வணிகம், தொழில் துறை அமைச்சரானார். 2009-11இல் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை, நகர்ப்புற வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரம் ஆகிய துறைகளுக்கும் காபினட் அமைச்சராகப் பதவி வகித்தார்.

எடுபடாத குற்றச்சாட்டுகள்

  • மாநிலத்தின் 10 பெரிய பணக்கார அரசியலர்களில் கமல்நாத்தும் ஒருவர், அவருடைய குடும்ப சொத்துகளின் மதிப்பு ரூ.134 கோடி என்று ஓர் அமைப்பு தெரிவித்துள்ளது. மனை வணிகம், விமானப் போக்குவரத்து, மலை வணிகப் பயிர் தோட்டங்கள், விருந்தோம்பல் துறை என்று பலவற்றையும் மகன்கள் நகுல், வகுள் நிர்வகிக்கின்றனர்.
  • மேலும், 2018இல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கக் காரணமாக இருந்தாலும் பேரவைத் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை. எனவே, முதல்வராகப் பதவியேற்ற பிறகு 2019இல் இடைத் தேர்தலில் நின்று பேரவை உறுப்பினரானார். ஆட்சிக் கவிழ்க்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். இப்போது மீண்டும் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார், அவருக்கு எதிராக விவேக் பண்டி சாஹு என்பவரைக் களம் இறக்கியிருக்கிறது பாஜக.
  • தனக்கு எதிராக 2 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் கமல்நாத்தே வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
  • கமல்நாத் 2007இல் வணிகத் துறை அமைச்சராக இருந்தபோது பாசுமதி அல்லாத ரக அரிசியை ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி தந்தார். அதை அரசுத் துறை நிறுவனத்தைவிட தனியார் துறை நிறுவனங்கள் மூலம் அதிகம் ஏற்றுமதி செய்ய வழிசெய்து, பணம் பெற்றார் என்று ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால், அது எடுபடவில்லை.

வெற்றி நிச்சயம்

  • இதில் 1984 நவம்பரில் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு தில்லியில் பெரிய கலவரம் நடந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் அங்கும் பிற வட இந்திய நகரங்களிலும் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்தில் கமல்நாத் மீதும் சில சீக்கியர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். சம்பவம் நடந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதை விசாரித்த நீதிபதி நானாவதி தலைமையிலான ஆணையம், கமல்நாத் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறியது. கமல்நாத்தை அரசியல்ரீதியாக தோற்கடிக்க முடியாது என்பதால் இந்தப் புகாரை அடிக்கடி கூறுகிறது பாஜக.
  • காங்கிரஸ் கட்சிக்குள் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் கமல்நாத். நேரு – இந்திரா குடும்பத்துக்குத் தொடர் விசுவாசி. கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கிருக்கும் நீண்ட அனுபவத்தால் இந்தத் தலைமுறையினராலும் விரும்பப்படுகிறார். இந்த முறை பெரும்பான்மை வலு நிச்சயம் கிட்டிவிடும் என்று கருதுகிறார்.
  • காங்கிரஸ் வென்றால் அவர்தான் முதல்வர் என்று அறிவித்தது தலைமை. வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. தோல்வி பயத்தால் வாக்காளர்களுக்கு மதுபானம் வழங்கி வாக்குச் சாவடிக்கு அழைத்துவருகிறது பாஜக என்று விடியோ ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியிருக்கிறார் கமல்நாத். பாஜகவின் தேர்தல் சின்னம் கமல் (தாமரை), எனவே தாமரை மீண்டும் பூக்கும் என்கின்றனர். ஆம், கமல்(நாத்) மீண்டும் பூக்கும் என்று பதிலுக்குச் சொல்கின்றனர் காங்கிரஸார்!

நன்றி: அருஞ்சொல் (22 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்