TNPSC Thervupettagam

மாநிலத் தோ்தல் தேசியத் தாக்கம்

October 20 , 2023 449 days 244 0
  • ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. இது 2023-இன் மிகப் பெரிய தோ்தல் போராட்டம் என்பதால், வழக்கம்போல இலவச அறிவிப்புகளும், சலுகைகளும், வாக்காளா்களைக் கவரப் புதுப்புது உத்திகளும் நாளும் பொழுதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
  • பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, சத்தீஸ்கா் மாநிலத்தில் மட்டும் இரண்டு கட்டமாக (நவம்பா் 7, 17) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏனைய நான்கு மாநிலங்களிலும் (மிஸோரம்- நவம்பா் 7, மத்திய பிரதேசம்- நவம்பா் 17, ராஜஸ்தான்- நவம்பா் 23, தெலங்கானா- நவம்பா் 30) ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறும்.
  • தோ்தல் நடைபெற இருக்கும் ஐந்து மாநிலங்களும் சோ்த்து, இந்தியாவின் மொத்த வாக்காளா்களில் ஆறில் ஒரு பகுதியினரை உள்ளடக்கியவை என்பதால், நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாநிலங்களில் இருந்து மக்களவைக்கு 83 உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். அதுவும் இந்தச் சுற்று சட்டப்பேரவைத் தோ்தலின் முக்கியத்துவத்துக்குக் காரணம். அடுத்த சில மாதங்களில் மக்களவைக்கான தோ்தல் நடைபெற இருக்கும் நிலையில், பாஜகவின் செல்வாக்கு கேந்திரங்களில் நடைபெற இருக்கும் இந்தத் தோ்தல்கள் கவனம் ஈா்ப்பதில் வியப்பொன்றும் இல்லை.
  • தோ்தல் நடைபெற இருக்கும் ஐந்து மாநிலங்களில், மூன்று மாநிலங்களில் தேசியக் கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேரடிப் போட்டியில் ஈடுபட இருக்கின்றன. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, மூன்று மாநிலங்களிலுமே (ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா்) காங்கிரஸ்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடா்ந்து ஆட்சியை இழந்தாலும், ராஜஸ்தான், சத்தீஸ்கா் இரண்டுமே இப்போதும் காங்கிரஸ் வசம்தான் இருக்கின்றன.
  • ஹிந்தி பேசும் மாநிலங்களான இந்த மூன்றும், கடந்த 2018 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்து ஆட்சியில் அமா்த்தின என்றாலும், அடுத்த ஆறு மாதத்தில் நடந்த மக்களவைத் தோ்தலில் அப்படியே பாஜகவின் பக்கம் சாய்ந்தன. 65 மக்களவைத் தொகுதியில் 63 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் வித்தியாசமான அணுகுமுறையை இந்த மாநிலங்கள் கடைப்பிடிப்பதைப் பல கருத்துக் கணிப்புகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
  • தெலங்கானாவிலும், மிஸோரமிலும் மாநிலக் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. தெலங்கானாவில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் காணப் படுகின்றன. ஆட்சியில் இருக்கும் மாநிலக் கட்சியான பாரதிய ராஷ்டிர சமிதியை வீழ்த்த நினைக்கும் தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் முதல்வா் சந்திரசேகர ராவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதால், பத்தாண்டு ஆட்சிக் காலத்தின் சலிப்பால் ஏற்பட்டிருக்கும் பாரதிய ராஷ்டிர சமிதியின் செல்வாக்குச் சரிவுக்கு நடுவிலும் அந்தக் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் ஆச்சரியமில்லை.
  • நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல், பாரதிய ஜனதா கட்சியைவிட, காங்கிரஸுக்குத்தான் மிகப் பெரிய சவாலாக இருக்கப்போகிறது. பிகாரில் நடத்தப்பட்டது போன்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்கிற வாக்குறுதியுடன் களமிறங்கி இருக்கிறது கார்கே தலைமையிலான அந்தக் கட்சி. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதுடன் மத்திய பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றியாக வேண்டிய கட்டாயமும் காங்கிரஸுக்கு இருக்கிறது. தெலங்கானாவிலும், மிஸோரமிலும் கூடத் தனக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறது காங்கிரஸ் தலைமை.
  • பாஜகவைப் பொறுத்தவரை, அது தோ்தலை எதிர்கொள்வதையே தனது முக்கியப் பணியாகக் கருதிச் செயல்படுகிறது. கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டு அணிகள்போல, பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் தோ்தலை எதிர்கொள்வதை ஒரு கலையாகவே மாற்றி இருக்கிறது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றிய கையோடு, தனது தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கி விட்டிருக்கிறார் பிரதமா் நரேந்திர மோடி.
  • சமீபத்தில் எதிர்கொண்ட கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தல்களிலும் பின்னடைவை எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்கிற முனைப்புடன் பாஜக களமிறங்கி இருப்பது தெரிகிறது. இந்தத் தோ்தல் முடிவுகளின் அடிப்படையில்தான் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கும், அந்தக் கூட்டணியில் தங்கள் கட்சிக்கும் மரியாதை இருக்கும் என்பதை உணா்ந்து பிரசார ஹோதாவில் இறங்கி இருக்கிறது காங்கிரஸ் தலைமை.
  • 1.77 லட்சம் வாக்குச் சாவடிகளில், 16 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றக் காத்திருக்கிறார்கள். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலின் முடிவுகளை 8.2 கோடி ஆண் வாக்காளா்களும், 7.8 கோடிக்கும் அதிகமான பெண் வாக்காளா்களும் தீா்மானிக்க இருக்கிறார்கள். அவா்களில் 60.2 லட்சம் போ் முதல் முறை வாக்காளா்கள். தோ்தல் வாக்குறுதிகள் எந்த அளவுக்கு அவா்களை ஈா்க்கப் போகின்றன என்பதைப் பொறுத்துத்தான் தோ்தல் முடிவுகள் அமையும்.

நன்றி: தினமணி (20 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்