TNPSC Thervupettagam

மாநில ஆளுநரும் மாநில அரசும்

November 17 , 2022 632 days 564 0
  • பிரிட்டிஷ் இந்தியாவில் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே மாநிலங்களின் சுயாட்சி குறித்தும், ஆளுநரின் அதிகாரங்கள் குறித்தும் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் தீவிரமாக விவாதிக்கப் பட்டிருக்கிறது. ஆளுநருக்கும் அரசுக்குமான பிரச்னை என்பது இப்போது தொடங்கியதல்ல. நீண்ட நாட்களாகவே நடைபெற்று வருகிறது. அப்படியானால், ஆளுநர் பதவி என்பது அலங்காரப் பதவியா? அவர் செயல்படத் தேவையில்லையா? அவர் எது குறித்தும் கருத்துச் சொல்லக் கூடாதா?
  • மாநில ஆளுநர் ஒரு விழாவில் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவிப்பதும், அக்கருத்துகளின் அடிப்படையில் விவாதங்கள் எழுவதும் வழக்கமாகி வருகிறது. அப்படியானால் ஆளுநர் கருத்தே சொல்லக் கூடாதா என்கிற கேள்வி எழுகிறது. அரசியலமைப்பு சாசனத்தின்படி செயல்படுகிற கடமை ஒவ்வொரு மாநில ஆளுநருக்கும் உண்டு. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
  • ஆளுநர் மாநில அரசின் அதிகாரத்திற்குள் கருத்துச் சொல்வதோ, மாநில அரசின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்துவதோ கூடாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா? சுதந்திர இந்தியாவில் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகு, ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையேயான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
  • தொடர்புடைய மாநில அரசுடன் கலந்தாலோசித்த பிறகே, அம்மாநிலத்திற்கு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று மத்திய- மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்த ஆணையங்கள் பரிந்துரைத்துள்ளன. ஆனால், அந்த வழிகாட்டுதல் பின்பற்றப்படுவதில்லை. குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரிலேயே ஆளுநரின் நியமனம், அவரின் பதவிக்காலம், இடமாற்றம், அவரைத் திரும்பப் பெறுதல் அனைத்தும் நடக்கின்றன.
  • குடியரசுத் தலைவரின் விருப்பம் என்பது மத்தியில் ஆளும் அரசின் விருப்பமாகவே அமைந்து விடுகிறது. மத்தியில் ஆளும் கட்சிக்கு தனிப்பெரும்பான்மையும் இருக்கும் நிலையில் ஆளுநர்களின் நியமனங்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவையாக மாறி விடுகின்றன.
  • தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டதிலிருந்தே, அவருடைய கருத்துகளையும் செயல்பாடுகளையும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசு, விவாதப் பொருளாக்கி வருகிறது. புலனாய்வுத் துறையில் பணி அனுபவம் மிக்கவராகவும், காவல் துறையில் புகழ்பெற்ற உயர் அலுவலராகவும் பணியாற்றிய தமிழக ஆளுநர், ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதாக தி.மு.க. குற்றம் சாட்டுகிறது. அவர் சனாதானம் பற்றிப் பேசுவதாகவும் கூறுகிறது.
  • தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி குரல் தொடர்ந்து ஒலிக்கவே செய்கிறது. அதனால் ஆளுநர் வாய்மூடி மௌனமாக இருப்பதே நல்லது என்று சொல்கிறார்களா? ஆளுநரிடம் இருந்து விளக்கங்கள் கேட்கப்பட்டால், அவற்றை அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்று மாநில தலைமைச் செயலாளர் சில மாதங்களுக்கு முன் சுற்றறிக்கை அனுப்பியதுதான் இந்த பிரச்னைக்கான ஊற்றுக்கண். இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்றாலும், அதுவே தொடர்ந்து விவாதிக்கப்பட்டு அச்சத்தை மூட்டியது.
  • அண்மையில் நடைபெற்ற துணைவேந்தர்களுடனான ஆளுநரின் சந்திப்பும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், அந்த நேரத்தில் தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆளுநர் பேசியதால் தி.மு.க. கோபம் கொண்டது.
  • மத்திய அரசின் கொள்கைகளை, அது தேசிய கல்விக் கொள்கையானாலும் சரி, மும்மொழிக் கொள்கையானாலும் சரி மாநில அரசு ஏற்காதபோது அவை குறித்து மாநில ஆளுநர் பேசுகிறபோது மாநில அரசு சங்கடப்படுகிறது. அந்த சங்கடத்துக்குக் காரணம், தங்களின் வாக்குவங்கிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பதற்றம்தான். ஆனாலும், மொழி உணர்வையும், இன உணர்வையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
  • தமிழ்நாட்டுக்கென தனியாக கல்விக் கொள்கை ஒன்றை வடிவமைக்க விரும்புவதாக மாநில அரசு அறிவித்திருக்கையில், ஆளுநரின் பேச்சு மாநில அரசுக்கு எதிராகவே பார்க்கப்பட்டது. இதன் மூலம், ஆளுநர்களை மத்திய அரசின் அதிகார பிரதிநிதியாக மட்டும் பார்க்கிற எண்ணம் இயல்பாகவே தோன்றி விடுகிறது. அவர் எந்த மொழியில் பேசுகிறார், அவர் எந்த மொழியில் கையொப்பமிடுகிறார், அவரின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் எல்லாமே பொதுவெளியில் பேசுபொருளாகிவிடுகின்றன.
  • அரசியலமைப்பின்படி ஆளுநர் என்பவர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவுப் பாலமாக இருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசோடு அவர் இணக்கத்தோடு செயல்பட வேண்டும் என்பது மாநில அரசின் எதிர்பார்ப்பு. ஆனால், ஒரு மாநில அரசு தன்னிச்சையாக ஒரு பாதையை வடிவமைக்கிறபோது அதை அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை.
  • மாநில அரசின் செயல்பாடுகள் மத்திய அரசு அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகின்றன. அவர்கள் மாநில ஆளுநரிடத்தில் அறிக்கைகளைக் கேட்டுப் பெறுகிறார்கள். ஆளுநருக்கு, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் தகவலைப் பெற்று மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.
  • இதனால், மாநில அரசின் ஆட்சிப்பணியாளர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள் என்று சிலர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால், இந்திய ஆட்சிப்பணியாளர்கள் ஒரு மாநிலத்தில் உயர் அதிகாரிகளாக இருந்தாலும் குறிப்பிட்ட பாதையில்தான் அவர்கள் பயணித்தாக வேண்டும். "ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுநரும் தேவையா' என்று முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை கேள்வி எழுப்பியதை இங்கு குறிப்பிட வேண்டும்.
  • அரசியல் சாசன விதிப்படி, ஒரு மாநில அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆளுநர்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகள் ஆளுநரின் ஒப்புதல் பெற்றே சட்டமாக நிறைவேறுகின்றன. அரசியல் சாசன விதி 164-இன்கீழ் முதலமைச்சரையும், அவரின் ஆலோசனையின்படி அமைச்சர்களையும் ஆளுநர் நியமிப்பார்.
  • மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்கும் அதிகாரமும் ஆளுநருக்கே உள்ளது. மாநில அரசு, ஆளுநர் ஒப்புதலுடனே சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். நிர்வாக ரீதியிலான உத்தரவுகள் அனைத்தும் ஆளுநரின் பெயரிலேயே வெளியிடப்பட வேண்டும்.
  • சட்டப்பேரவையைக் கூட்டுவது, ஒத்திவைப்பது, அசாதாரண சூழ்நிலைகளில் பேரவையைக் கலைப்பது ஆகிய அதிகாரங்களைப் பெற்றவர் ஆளுநரே. மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளின் நியமனமும், ஆளுநரின் அதிகார வரம்புக்கு உட்பட்டதே. மாநிலத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் ஆளுநராலேயே நியமிக்கப்படுகிறார்கள்.
  • மாநில அரசின் பரிந்துரையை ஏற்று கையொப்பமிட்டு விட்டால் ஆளுநரை வரவேற்பதும், பரிந்துரை மீது கேள்வி எழுப்பினால் ஆளுநரை விமர்சிப்பதும் எந்தவகையான போக்கு என்பதுதான் புரியவில்லை.
  • சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இவற்றில் நிதி மசோதாக்களைத் தவிர, மற்ற மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் அவற்றைத் திருப்பி அனுப்பலாம். ஆனால், அந்த மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தே ஆக வேண்டும்.
  • தேர்தல் முடிவு வெளியான பின்னர், எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத போது, முதலமைச்சரை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே இருக்கிறது. மாநிலங்களின் நிலை பற்றி மத்திய அரசுக்கு அவ்வப்போது அறிக்கைகள் மூலம் தகவல் வழங்குவதும் ஆளுநரே.
  • மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருக்கும் நிலையில் அவற்றுக்கிடையே நிலவும் பரஸ்பர உறவைப் பொறுத்து ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான உறவு இருக்கும்.
  • அந்த உறவு மோசமடையும்போது மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் பனிப்போர் தொடங்கிவிடுகிறது. இப்போது தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவும் பனிப்போரும் இவ்வகையானதுதான். ஆளுநரின் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு பண முன்வரைவையும் சட்டப்பேரவையில் முன்மொழியக்கூடாது. இந்த வகையில் பொருளியல் அதிகாரம் ஆளுநரின் பிடிக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.
  • ஆளுநர்கள் அதிகாரம் குறித்த ராஜமன்னார் குழு, சர்க்காரியா குழு பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. வாஜ்பாய் ஆட்சியின்போது அரசியலமைப்புச் சட்ட மறு ஆய்வுக்காக அமைக்கப்பட்ட குழுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பூஞ்சிக் குழு என்கிற குழுவின் அறிக்கையின்படி, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை.
  • மாநில சட்டப்பேரவையைக் கலைத்துவிடக் கூடிய அதிகாரம் ஆளுநர் கைகளில்தான் இருக்கிறது. இதுவே அவர்களின் உச்சபட்ச அதிகாரத்தைக் காட்டுகிறது. கடந்த 70 ஆண்டுகளில் 128 முறை சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி, பல்வேறு மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தில் பொம்மை தலைமையிலான ஆட்சிக் கலைப்பிற்குப் பிறகு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் 356 சட்டப்பிரிவு இப்போது பயன்படுத்தப் படுவதில்லை.
  • ஆளுநருக்கு ஏது அதிகாரம் என்று மாநில அரசும், ஆளுநருக்கு இல்லாத அதிகாரமா என்று ஆளுநர் தரப்பும் மாறி மாறி எழுப்புகிற கேள்விகளால் மக்களாட்சியின் மாண்பு சிதைந்து விடக் கூடாது!

நன்றி: தினமணி (17 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்