TNPSC Thervupettagam

மாநில சுயாட்சி மறுக்கப்படுகிறதா?

June 3 , 2019 2002 days 1085 0
  • ஒரு தேசத்தின் முன்னேற்றம் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அமைவது மிகவும் அவசியம். மக்கள்தொகைப் பெருக்கம் என்பது வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கி நாட்டின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். இதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத அரசாங்கம் எத்தனைத் திட்டங்கள் போட்டாலும் வெற்றிபெற இயலாது.
மக்கள் தொகை
  • இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மக்கள்தொகை 30 கோடியாக இருந்தது. இப்போது 134 கோடியாக, 4 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. ஆரம்ப காலத்தில் மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் பெயரளவுக்கு உள்ளதும், மக்கள்தொகைப் பெருக்கத்துக்குக் காரணம்.
  • மக்கள்தொகைப் பெருக்கத்தினால் பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் மக்கள் வேலை தேடி அலைகின்றனர். வடமாநில மக்கள் மொழி தெரியவில்லை என்றாலும் தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மொழிப் பிரச்னையும், வேலையின்மைப் பிரச்னையும் தீவிரமாகத் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன.
கூட்டாட்சி
  • பல்வேறு மொழிகள் பேசும் கூட்டாட்சியை ஏற்றுக் கொண்டுள்ளது இந்தியா. எல்லோருக்கும் எல்லா அடிப்படை உரிமைகளையும் அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. அதனைப் பாதுகாப்பாகக் கடைப்பிடிக்கச் செய்வதே அரசுகளின் கடமையாகும். மொழி, இனப் பிரச்னைகள் மாநிலந்தோறும் தலையெடுத்துக் குழப்பத்தை உண்டாக்கும். சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற பொறுப்பேற்றுள்ள மாநில அரசுகள் எப்போதும் விழிப்புடன் இருந்து, மாநில சுயாட்சி உரிமைகளைக் கட்டிக் காக்க வேண்டும்.
  • "தமிழக வேலைகள் தமிழர்களுக்கே' என்ற முழக்கம் இப்போது மூலை முடுக்கெல்லாம் கேட்க ஆரம்பித்திருக்கிறது. இதனை முன்னிறுத்தி பல இடங்களில் போராட்டமும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. இப்படிப் பேசுவதே இன வாதம், மொழி வெறி என்றும், இதனால் தமிழர்கள் மாநிலம் கடந்து பல்வேறு இடங்களில் பணியாற்றும்போது எதிர்ப்பு ஏற்படும் என்றும், இது தமிழ் மக்கள் நலனுக்கு எதிரானது என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். இதையும் ஒரேயடியாகப் புறக்கணித்துவிட முடியாது.
  • பெரும்பான்மையான மக்கள் வேலைக்குப் போவதற்கும், அந்தந்த மாநில அரசின் வேலைவாய்ப்புகளைப் பறிப்பதற்கும் வேறுபாடு உண்டு. வடமாநில மக்கள் நாள்தோறும் தமிழகத்துக்குள் வருகின்றனர். அவர்கள் பொதுவான வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்கின்றனர். மத்திய, மாநில அரசின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கவில்லை.
  • அதனால், எதிர்ப்பு இல்லை. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன் அண்மையில் ஓர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1,700 பேர் தேர்வு செய்யப்பட்ட ஒரு பணிக்கு நியமனம் செய்யப்பட்டவர்களில் 1,400 பேர் வெளி மாநிலத்தவர்கள். மூன்றாம் நிலை, நான்காம் நிலை பணிகளுக்கு மாநில மொழி அறிவுடைய உள்ளூர் மக்களே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த நிலையை மாற்றி வெளி மாநிலத்தவரை எப்படி ரயில்வே நிர்வாகம் தேர்ந்தெடுத்தது என்பதுதான் அவர்களின் கேள்வி. இப்போது அண்மைக் காலமாக மத்திய அரசின் ரயில்வே, அஞ்சல் துறை, வங்கிகள் அனைத்தும் போட்டித் தேர்வு என்ற பெயரால் தமிழக மக்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதுதான் தமிழக மக்களின் எதிர்ப்புக்குக் காரணமாகும்.
போட்டித் தேர்வு
  • அஞ்சல் துறையில் நடந்த போட்டித் தேர்வில் நடந்த ஊழல் நாடறிந்ததுதான். தமிழ்ப் பாடத் தேர்வில் தமிழே தெரியாத ஹிந்திக்காரர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த விந்தை நிகழ்ந்தது. இந்தப் புகார் உச்சகட்டத்தை அடைந்ததும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வாறு மொழி தெரியாதவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் கொடுமை அண்மைக் காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இது மாநில மக்களின் தன்னாட்சிக்கு விடுக்கப்படும் அறைகூவலாகும் என்று தமிழ் அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.
  • "தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே' என்ற முழக்கம் இப்போதுதான் எழுந்துள்ளது. மற்ற மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை என்பது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. மண்ணின் மக்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கட்டாய வேலைவாய்ப்பு அலுவலக, கட்டாய அறிவிப்புச் சட்டம் - 1959 உள்ளது.
  • அரசு, தனியார் வேலைகளுக்கு அந்தந்த மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம்தான் நியமிக்க வேண்டும் என்ற இந்தச் சட்டம் இப்போதும் உள்ளது. பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது அஸ்ஸாமில் "வெளி மாநிலத்தவர் வெளியேற வேண்டும்' என்று மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. போராட்டம் நடத்திய மாணவர் அமைப்புகளோடு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் அந்த மாநிலத்தில் நுழைந்த வங்காளிகள், ஹிந்திக்காரர்களை வெளியேற்றுவது என்று ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இப்போதும் அந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது.
  • ஆந்திரம், தெலங்கானா என இரண்டாகப் பிரிந்துவிட்ட பிறகும் அந்தந்த மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை எனத் தனிச் சட்டம் இயற்றி பிரித்துக் கொண்டார்கள். ஒரே மொழி-தெலுங்கு பேசும் மக்களாக இருந்தாலும் ஆந்திரர்கள் தெலங்கானாவிற்குள் நுழைந்து வேலைவாய்ப்பு பெற முடியாது; இதே போன்று தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் ஆந்திரத்துக்குள் நுழைந்து வேலைவாய்ப்பு பெற முடியாது.
  • கர்நாடக மாநிலத்தில் 1986-ஆம் ஆண்டு சரோஜினி குழுவை அமைத்து அறிக்கை பெற்றார்கள். அதன்படி அரசு மற்றும் தனியார் துறைகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை என்று சட்டம் இயற்றி, நடைமுறைப்படுத்த கன்னட வளர்ச்சி ஆணையம் அமைக்கப்பட்டது.
ஆணையம்
  • அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 85 சதவீதத்துக்கு மேல் கன்னடர்கள் இருக்க வேண்டும் என்பதை கண்காணிப்பதே அந்த ஆணையத்தின் வேலையாகும். இது தவிர, வெளிமாநிலத்தவர் விளைநிலங்களை வாங்கவும் அங்கு தடையுள்ளது. குஜராத் மாநிலத்தில் 85 சதவீத வேலை வாய்ப்பு அந்த மாநிலத்தவருக்குத்தான் என்று தொழில் துறை ஆணையத்தின் அறிக்கையை ஏற்று சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றி நடைமுறையில் உள்ளது.
  • ராஜஸ்தான் மாநிலத்தில் 1998-ஆம் ஆண்டு முதல் 85 சதவீத வேலைவாய்ப்பு அந்த மாநிலத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் ராஜஸ்தான் மாநிலத்தவர்களுக்கு 70 சதவீத அளவுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கே அரசின் வரிச் சலுகை, மானியம் அனைத்தும் வழங்கப்படும் என்ற நிபந்தனை உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 85 சதவீத வேலைவாய்ப்பு மண்ணின் மக்களுக்கே. மீதம் உள்ள 15 சதவீதம், நேபாளிகள் அல்லாத மாநிலத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதிலும் அவர்கள் அனைவரும் கட்டாயம் வங்க மொழி பேச, எழுதக் கற்றிருக்க வேண்டும் என்று அரசாணையே வெளியிட்டுள்ளனர்.
  • கோவாவிலும் அரசமைப்புச் சட்டம் 371-1 நடைமுறையில் உள்ளது. தனியார் நிறுவனங்கள்கூட 80 சதவீத வேலைவாய்ப்பை அந்த மாநிலத்தவர்களுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் அரசு சலுகை, மானியம் எல்லாம் கிடைக்கும். மகாராஷ்டிரம், ஹிமாசலப் பிரதேசம் உள்பட பல மாநிலங்கள் இதை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
  • இங்கெல்லாம் அரசமைப்புப் பிரிவு 371-ஏ, 371-பி, 371-சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக் கொண்டுள்ளனர். இதனால் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை வேலைவாய்ப்பு; மீதமுள்ள 10 அல்லது 15 சதவீதம்தான் பிற மாநிலத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களில் உள்ள இந்த நடைமுறை தமிழ்நாட்டுக்கும் வரவேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு?
  • தமிழகத்திலும் மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை என்று சட்டம் இயற்ற வேண்டும். இதற்கு தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்? இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், தமிழ்நாடு தேர்வாணையம் மூலமும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இதனை முற்றிலும் மாற்றி போட்டித் தேர்வுகள் மூலம் திறமையானவர்களைத் தேடுவதாக புதிய நடைமுறையைப் புகுத்தி வருகின்றனர்.
  • இந்தப் போட்டித் தேர்வுகளால் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஏராளமான முறைகேடுகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. திறமையற்றவர்களின் குறுக்கு வழிகள் பலமுறை அடையாளம் காணப்பட்டும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு வேலைக்கான தேர்வாணையத்தில் இந்தியாவைச் சேர்ந்த எந்த மாநிலத்தவரும் எழுதலாம். அவர்கள் தமிழகத்தில் பிறப்புச் சான்று வைத்திருந்தால் போதும். வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட உத்தரவு கிடையாது. இதனை மாற்றி, மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை என்ற திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கோருகின்றனர்.
  • மொழிவழி மாநிலப் பிரிவினையின் நோக்கமே அந்தந்த மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அந்தக் கொள்கைகளும், கோரிக்கைகளும் சிதைக்கப்படுமானால் மாநில மக்கள் எதிர்க்கவே செய்வர். மாநில சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் நாட்டுக்கு நல்லது.

நன்றி: தினமணி (03-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்