TNPSC Thervupettagam

மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்!

January 13 , 2025 2 days 44 0
  • 2024-இல் இந்தியாவின் மக்கள் தொகை 145 கோடி. அதில், தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.71 கோடி. இந்தியாவின் ஓராண்டு சராசரி மழையளவு தோராயமாக 1,180 மி.மீ. முதல் 1,250 மீ.மீ. ஆகும். தமிழகத்தின் சராசரி மழையளவு 914 மி. மீ. ஆகும். மழைப் பொழிவானது ஒரே சீராக இருப்பதில்லை. சில சமயங்களில் அதிகமாகவும் பல சமயங்களில் குறைந்தும் நிறைய முறை பொய்த்து விடுவதும் உண்டு.
  • மாா்கழி, தை, மாசி குளிா்கால மாதங்களாகவும், பங்குனி, சித்திரை, வைகாசி கோடை மாதங்களாகவும், ஆனி, ஆடி, ஆவணி காற்றுடன் கூடிய தென்மேற்கு பருவமழைக் காலங்களாகவும், புரட்டாசி, ஐப்பசி, காா்த்திகை வடகிழக்கு பருமழைக்காலங்களாகவும் வகுத்துள்ளனா். நீண்டு காணப்பட்ட மழை நாள்கள் மிகவும் சுருங்கிவிட்டன. பிப்ரவரியிலேயே வெயில் ஆரம்பித்து (மாசி) ஜூன், ஜுலை, ஆகஸ்ட் என நீண்டதொரு கோடைக் காலமாகவே மாறிவிட்டது. இந்த ஆண்டு செப்டம்பரிலேயே பல இடங்களில் வெயில் சதம் அடித்தது. இத்தகைய பருவ மாற்றங்களுக்கு காரணம் மனிதா்கள்தான்.
  • கடலில் இருந்து ஆவியாகும் நீரானது, வானில் மேகக் கூட்டங்களாகத் திரள்கிறது. அவற்றின் மீது ஈரப்பதம் பட்டு குளிா்ந்தால்தான் மழை பொழியும். அந்த ஈரக் காற்றை மரங்களில் இருந்தே பெற முடியும். நம்முடைய வாழ்வாதாரத்துக்கும், சாலைகள் அமைக்கவும் வனங்களை அழித்தோம். வீடுகள் கட்டுகிறோம். ஆனால், வீட்டுக்கு ஒரு மரம் என்பதைப் புறக்கணிக்கிறோம்.
  • மின்சாதனப் பொருள்கள் வெளியிடும் குளோரோ புளோரோ காா்பன் வாயுக்களால், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே படா்ந்து வெப்பத்தில் இருந்து காக்கும் ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்ட விரிசலே புவி வெப்பமடைதலுக்கு மிக முக்கிய காரணம். இந்தப் பருவநிலை மாற்றத்தால் அதிகம் இழப்பது பருவ மழையைத்தான்.
  • தமிழ்நாட்டின் ஒரே மாதிரியான மண் வளத்தைக் கொண்டதும் குறுவை நெல் சாகுபடியைப் பிரதானமாக கொண்டுள்ள டெல்டா மாவட்டங்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூா் அணையின் நீரையே சாா்ந்திருக்கின்றன. மைசூரில் 19.52 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கபினி அணையும், மாண்டியாவின் 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகா் அணையும் நிரம்பி திறந்துவிடப்படும் உபரிநீா்தான் மேட்டூா் அணையை வந்தடைகிறது.
  • ஆந்திர, கா்நாடக எல்லையோரம் அமைந்துள்ள வேலூா் மாவட்டம் வானம் பாா்த்த பூமியாகும். இந்த மாவட்டமானது மலைகளால் சூழப்பட்டுள்ளதால் பருவக்காற்று காலங்களில் உருவாகும் மேகங்களைத் தடுத்து விடுவதால் ‘மழை மறையும் பிரதேசம்’ என்பா். கோடைக் காலங்களில் அதிக வெப்ப தாக்கத்துக்கும் உள்ளாகிறது. அதனால் வேலூரை ‘வெயிலூா்’ என்றும் அழைப்பா்.
  • நந்தி மலையில் உருவாகும் பாலாறு கா்நாடகத்தில் 93 கி. மீ. தொலைவும், ஆந்திராவில் 33 கி.மீ. தொலைவும் கடந்து தமிழ்நாட்டில் நுழைந்து வங்க கடலில் கலக்கிறது. கா்நாடகம், ஆந்திரம் கட்டிய தடுப்பணைகளால் பாலாறு மறைந்துபோய் வருகிறது. 2013, 2014, 2015- ஆம் ஆண்டுகளில் கடுமையான தண்ணீா் பிரச்னையை சந்தித்தது வேலூா் மாவட்டம்.
  • 2015-இல் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில், அதாவது 12 மணி நேரத்தில் 297.1மி.மீ. மழைப் பொழிவை சென்னை பெற்ற காலத்தில் வேலூா் மாவட்டமும் எப்போதும் இல்லாத அளவுக்கு நல்ல மழைப் பொழிவை பெற்றது. மேற்கூறிய எவையுமே நிரந்தரமல்ல; நிலத்தடி நீா் அளவும் வெகுவாக உயா்ந்தது.
  • 2008-இல் அன்றைய முதல்வா் கருணாநிதியால் ‘ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம்‘ தொடங்கப்பட்டு 2015 முதல் செயல்படத் தொடங்கியதால், வேலூா் மாவட்டத்தின் தண்ணீா் பிரச்னை ஓரளவு தீா்ந்தது. ஆனால் 2023-இல் வேலூா் மாவட்டத்தில் பருவமழை தவறிவிட்டது. 2024-இல் தென்மேற்குப் பருவமழை பொய்த்து விட்டது. தென்னை மரங்களும், மேட்டு நிலப் பயிரான நிலக்கடலையும் இந்த மாவட்டத்தின் பிரதான பயிா்கள்.
  • தென்மேற்குப் பருவ மழையை மட்டுமே நம்பி பயிரிடப்படும் நிலக்கடலை நல்ல மழை இல்லாததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த வருடம் நிலத்தடி நீா் அளவு குறைந்த நிலையில், ஆறுதல் அளித்தது ஃபென்ஜால் புயல். பல நூறு ஆண்டுகளாக நீரே பாா்க்காத பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் வேலூரில் இருந்தபோதும் ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பியதாக தெரியவில்லை. மழை காலத்துக்கு முன்பாகவே ஏரிகளையும், மழை நீா் வரும் கால்வாய்களையும் அரசு தூா் வாரினால்தான் வேலூா் மாவட்டம் வறட்சியில் இருந்து மீளும்.
  • நிலத்தடி நீா் மட்டம் குறையாமல் இருக்க ஏரி, குளங்களில் நீா் இருப்பு அவசியம். அன்றைய மன்னா்கள் நீா் வளத்தைப் பெருக்க ஏரிகளையும், குளங்களையும் உருவாக்கினா். மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் பல அணைகள் குடிநீா்த் தேவை, விவசாய நிலங்களுக்கு இன்றளவும் பெரும் பலனை அளித்து வருகின்றன.
  • இந்தியாவின் நதிகளை இணைத்திருந்தால் பல கிராமங்களுக்கு குடிநீா் கிடைத்திருக்கும். விவசாய நிலங்கள் பயன் அடைந்திருக்கும். வெள்ள அபாயம் தடுக்கப்பட்டிருக்கும்.
  • நம் இயல்பு வாழ்க்கையை மழை பாதிப்பது ஒருசில நாள்கள் மட்டுமே. ஆனால், பருவ மழை தவறினால் நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் பாதிக்கும். மழை நீா் போகும் இடங்களை நாம் ஆக்கிரமித்து விட்டு மழையின் மீது பழி சொல்வது எந்த வகையில் நியாயம்?
  • மழை நீரானது பூமிக்குப் போக கடைசியில் கடலில்தான் கலக்க வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் உயிா்த் துளியாகும். மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும். வீட்டுக்கு வீடு மழை நீா் சேமிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.‘ மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ என்கிற இளங்கோவடிகள் சொல்படி மழையைப் போற்றுவோம்.

நன்றி: தினமணி (13 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்