TNPSC Thervupettagam

மாரடோனாவுக்கு நினைவுப் பரிசு

July 14 , 2021 1114 days 455 0
  • இந்த ஒரு தருணத்துக்காகவும் வெற்றிக்காகவும்தான் இத்தனை காலமும் லயோனல் மெஸ்ஸி காத்திருந்தார். இந்த முறை இல்லாவிட்டால் இனி எப்போதுமே இல்லை என்பதால் வாழ்நாள் குறையுடனும், தீராக் களங்கத்துடனும் கால்பந்தாட்ட மைதானத்திலிருந்து அவர் விடை பெற்றிருக்கக் கூடும்.
  • ரியோ டி ஜெனீரோவில் நடந்த "கோபா அமெரிக்கா' கால்பந்தாட்டப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரேஸிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அந்தக் கோப்பையை ஆர்ஜென்டீனா வென்றது ஒருவகையில் வரலாற்று வெற்றி என்றுதான் கூற வேண்டும்.
  • பிரேஸில், சிலி, ஆர்ஜென்டீனா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையே "கோபா அமெரிக்கா' கால்பந்தாட்டக் கோப்பையை யார் கைப்பற்றுவது என்பது கெளரவப் பிரச்னை.
  • அதனால்தான் லயோனல் மெஸ்ஸி, கோப்பையை வெல்லாமல் இருப்பதை, தனக்கும் ஆர்ஜென்டீனாவுக்கும் தொடரும் தீராக் களங்கமாகவே கருதினார்.

கோபா அமெரிக்கா

  • ஆர்ஜென்டீனாவின் 15-ஆவது "கோபா அமெரிக்கா' கோப்பை வெற்றி இது. உருகுவேயைப் போலவே மிக அதிகமான வெற்றியை அடைந்த நாடாக இப்போது ஆர்ஜென்டீனாவும் வரலாறு படைத்திருக்கிறது.
  • 1993-க்குப் பிறகு இறுதிச்சுற்று வரை வந்து ஆர்ஜென்டீனா கோப்பையை நழுவவிட்ட தருணங்கள் ஏராளம்.
  • 2004, 2007-ஆம் ஆண்டுகளில் பிரேஸிலிடமும், 2015, 2016-ஆம் ஆண்டுகளில் சிலி நாட்டு அணியிடமும் இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவி கோப்பையை நழுவவிட்டது ஆர்ஜென்டீனா. கடந்த ஆண்டு பிரேஸிலிடம் அடைந்த தோல்வியை இப்போது ஈடுகட்டியிருக்கிறது.
  • லயோனல் மெஸ்ஸிக்கும், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் ஓர் ஒற்றுமையை இந்த வெற்றியில் காண முடிகிறது. தனது ஆறாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்தான் இந்தியாவின் வெற்றியில் பங்கு கொள்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
  • 2011-இல் அந்த வெற்றி கிடைக்காமல் போயிருந்தால் உலகக் கோப்பை வெற்றியில் பங்குகொள்ள முடியாத களங்கத்துடன் அவர் ஓய்வு பெற்றிருப்பார்.
  • அதேபோல இப்போது 34 வயது லயோனல் மெஸ்ஸி, "கோபா அமெரிக்கா' கோப்பையை வென்றிருக்காவிட்டால் தீராக் களங்கத்துடன் அடுத்த ஆண்டு ஓய்வு பெற நேர்ந்திருக்கும்.
  • லயோனல் மெஸ்ஸியின் வெற்றிகள் ஏராளம் ஏராளம். இதுவரை அவர் பெற்றிருக்கும் 34 வெற்றிகளும் சாதாரணமானவை அல்ல. அவற்றில் சாம்பியன்ஸ் லீக் வெற்றி மட்டுமே நான்கு.
  • ஆனாலும்கூட, தனது நாட்டுக்கு "கோபா அமெரிக்கா' கோப்பையை வென்றுதர முடியவில்லை என்கிற ஏக்கமும், குற்ற உணர்வும் அவரை துரத்திக்கொண்டே இருந்தன.
  • 2019 ஜூலை 6 அன்று சாவ் பாவ்லோவில் நடந்த "கோபா அமெரிக்கா' போட்டியில், விளையாட்டு தொடங்கிய 37-ஆவது நிமிடத்தில் தவறான விளையாட்டுக்காக "ரெட் கார்டு' வழங்கப்பட்டு அவமானத்துடன் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட லயோனல் மெஸ்ஸிக்கும், இப்போது வென்றிருக்கும் “கோபா அமெரிக்கா” கோப்பைக்கும் இடையே ஏழு பந்தய இடைவெளி தூரம் அவர் பயணிக்க வேண்டி வந்தது.
  • இப்போது மீண்டும் அதே பிரேஸிலில் அந்தக் களங்கத்தை அகற்றும் விதத்திலான வெற்றி என்பது மெஸ்ஸிக்கும் ஆர்ஜென்டீனாவுக்கும் ஒருவிதத்தில் பழிக்குப் பழி போராட்டம் என்றுதான் கூற வேண்டும்.
  • ஆர்ஜென்டீனாவின் "கோபா அமெரிக்கா' கால்பந்தாட்ட கோப்பை வெற்றிக்குப் பின்னால் அந்த அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி மட்டுமல்ல, அதன் பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனியின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
  • 2018 ஆகஸ்ட் மாதம் ஆர்ஜென்டீனா அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஸ்கலோனி. அவரது வழிகாட்டுதலுடன் ஆர்ஜென்டீனா பங்கு பெற்ற 34 பந்தயங்களில் 20 பந்தயங்களில் அணி வெற்றி அடைந்திருக்கிறது.
  • நான்கே நான்கு தோல்விகள்தான். இப்போது "கோபா அமெரிக்கா' கோப்பையையும் கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது.
  • ஆர்ஜென்டீனா அணியில் அதிகம் பரபரப்பாகப் பேசப்படாத வீரர் ஏஞ்சல்-டி-மரியா. இதற்கு முன்னால் 2008 ஒலிம்பிக் பந்தயத்தில் ஆர்ஜென்டீனா தங்கப்பதக்கம் வென்ற போது இறுதி ஆட்டத்தில் இறுதி கோல் அடித்து வெற்றி தேடித்தந்த டி-மரியாதான் இந்த முறை "கோபா அமெரிக்கா' கோப்பையை வெல்வதற்கான கோலை அடித்திருக்கிறார்.
  • விங்கராகவும், அட்டாக்கராகவும், மிட் பீல்டராகவும் விளையாடும் திறன் பெற்ற டி-மரியா, இதுவரை 111 போட்டிகளில் 21 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்.
  • 28 ஆண்டுகள் காத்திருந்து ஆர்ஜென்டீனா பெற்றிருக்கும் இந்த வரலாற்று வெற்றிக்காக அதன் கேப்டன் லயோனல் மெஸ்ஸிக்கு, இந்தப் போட்டியின் நட்சத்திரம் என்கிற பட்டமும், "கோல்டன் பூட்' விருதும் வழங்கப்படுகிறது.
  • கடுமையான உள்காயம் காலில் ஏற்பட்டிருந்தும்கூட அதைப் பொருட்படுத்தாமல் அரையிறுதிச் சுற்றிலும், இறுதிச் சுற்றிலும் கேப்டன் மெஸ்ஸி விளையாடினார் என்கிற உண்மையை பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி தெரிவித்தபோது மெஸ்ஸி மீதான மரியாதை மேலும் அதிகரித்தது.
  • மரக்கணாவில் மறக்க முடியாத வரலாற்று வெற்றிக்குப் பிறகு விழியெல்லாம் ஆனந்தக் கண்ணீருடன் கோப்பையைக் கட்டியணைத்து முத்தமிட்டபோது லயோனல் மெஸ்ஸியின் நினைவில் நிழலாடி இருப்பார் டீகோ மாரடோனா.
  • கடைசிவரை "கோபா அமெரிக்கா' வெற்றியை பார்க்க முடியாமல் மாரடோனா விடைபெற்ற 232-ஆவது நாளில் அந்தக் கோப்பையை வென்று உயர்த்திப் பிடித்தபோது, லயோனல் மெஸ்ஸியும் அணியினரும் "இதோ எங்கள் அஞ்சலி' என்று மாரடோனாவுக்கு அதை மனதார அர்ப்பணித்திருப்பார்கள்!

நன்றி: இந்து தமிழ் திசை (14 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்