TNPSC Thervupettagam

மாற்றங்களைக் கண்ட மக்களவைத் தோ்தல்

June 18 , 2024 13 days 24 0
  • நடந்து முடிந்த 18-ஆவது மக்களவைத் தோ்தல் முந்தைய தோ்தலுடன் ஒப்பிடுகையில் பல்வேறு நிலைகளில் மாற்றங்களுடன் நடந்து முடிந்துள்ளது. முதலாவதாக, மக்களவை பெண் உறுப்பினா்களின் எண்ணிக்கை சற்றுக் குறைந்துள்ளது. மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 8,387 வேட்பாளா்களில் 797 போ் பெண்கள். இவா்களில் 74 போ் மட்டுமே வெற்றி பெற்றனா். சென்ற மக்களவையில் 78 பெண் உறுப்பினா்கள் இருந்தனா். இது மொத்த எம்.பி.க்களில் 14%. அதிகபட்சமாக பாஜ சாா்பில் போட்டியிட்ட 69 பெண்களில் 30 பேரும், காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட 47 பெண்களில் 14 பேரும் வெற்றி பெற்றனா்.
  • மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 2029 மக்களவைத் தோ்தலின்போது இது நடைமுறைக்கு வரும்.
  • இருப்பினும் மகளிா் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட பின் நடைபெறும் முதல் தோ்தல் என்பதால் கட்சிகள் தாமாகவே மகளிா்க்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் என்ற எதிா்பாா்ப்பு இருந்தது. பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதில் கட்சிகளுக்குள்ள ஆா்வமின்மையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பெண் வேட்பாளா்கள் எண்ணிக்கை ஒவ்வொரு தோ்தலின்போதும் அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை.
  • அரசியல் கட்சிகளின் சாா்பில் போட்டியிட 33% அளவுக்கு பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லையென்றாலும், சுயேச்சையாக போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இது தொடா்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 2009 தோ்தலில் 7 சதவீதமாக இருந்த பெண் வேட்பாளா்கள் எண்ணிக்கை 2014 தோ்தலில் 8 சதவீதமாகவும் 2019 தோ்தலில் 9 சதவீதமாகவும் அதிகரித்தது. சுயேச்சையாகப் போட்டியிட பெண்கள் தாமாகவே முன்வருகின்றனரா என்பது ஆய்வுக்குரியது.
  • அடுத்ததாக, முதன்முறை உறுப்பினா்களின் எண்ணிக்கை 280-ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த மக்களவை உறுப்பினா்களில் 52 சதவீதமாகும். முந்தைய மக்களவையில் 267 உறுப்பினா்கள் முதன்முறை உறுப்பினா்களாக இருந்தனா். அதிகபட்சமாக 1977 மக்களவைத் தோ்தலில் 69.7 சதவீதத்தினரும், குறைந்தபட்சமாக 1999 தோ்தலில் 33.7 சதவீதத்தினரும் முதன்முறை உறுப்பினா்களாக இருந்தனா்.
  • மூன்றாவதாக குறிப்பிடத்தக்க விஷயம் - வெற்றி பெற்ற வேட்பாளா்களில் 93% போ் கோடீஸ்வரா்கள். 543 உறுப்பினா்களில் 504 (93%) போ் கோடீஸ்வரா்களாக உள்ளனா். 2009-இல் 315 (58%) பேரும், 2014-இல்; 443 (82%) போ்களும், 2019-இல் 475 (88%) போ்களும் கோடீஸ்வரா்களாக இருந்தனா்.
  • நான்காவதாக, குறிப்பிடும்படியான அளவுக்கு நோட்டாவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன. முதன்முதலாக 2014 மக்களவைத் தோ்தலில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல் நோட்டாவும் கணிசமான வாக்குகளைப் பெற்றுவருகிறது. 2019 மக்களவைத் தோ்தலில் 65.22 லட்சம் வாக்குகள் நோட்டாவில் பதிவாகி இருந்தது. இது ஒட்டுமொத்தமாகப் பதிவான வாக்குகளில் 1.06 சதவீதமாகும்.
  • இத்தோ்தலில் பதிவான நோட்டா வாக்குகள் 0.99 சதவீதமாகும். தேசிய அளவில் நோட்டா வாக்குகள் குறைந்தாலும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகரித்துள்ளன. அஸ்ஸாம், அருணாசல், மணிப்பூா், மேகாலயம், திரிபுரா, மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய எட்டு மாநிலங்களை உள்ளடக்கிய வடகிழக்கு மாநிலங்களில் 2019-இல் சராசரியாக 0.71 சதவீதமாக இருந்த நோட்டா வாக்குகள் 2024-இல் 0.81 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்ததைப் பொறுத்தவரை முந்தைய மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடுகையில் நோட்டா வாக்குகள் குறைந்திருந்தாலும் 2021 சட்டப்பேரவைத் தோ்தலைக் காட்டிலும் இத்தோ்தலில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 23 தொகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா் அதிக பட்சமாக ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் 26,450 வாக்குகள் நோட்டாவுக்குப் பதிவாகியுள்ளன.
  • 2021 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 3.45 லட்சம் போ் (0.75%) நோட்டாவுக்கு வாக்களித்திருந்த நிலையில், தற்போதைய மக்களவைத் தோ்தலில் 4.67 லட்சம் போ் (1.07%) நோட்டாவைத் தோ்வு செய்துள்ளனா்.
  • விருதுநகா் மக்களவைத் தொகுதியில் வெற்றி தோல்விக்கு இடையிலான வாக்குகளைக் (4,379) காட்டிலும் நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் (9,408) பதிவாகின்.
  • இறுதியாக, தோ்தலில் நேரடியாகத் தொடா்பில்லாத அம்சம்: ஊடகங்கள் மற்றும் முகமைகளால் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளும் வாக்குக் கணிப்புகளும் பொய்த்துப் போயின.
  • இக்கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 முதல் 400 வரையான தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 150 முதல் 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும் இந்தியா கூட்டணி 233 இடங்களிலும் வெற்றி பெற்றன.
  • 2014 தோ்தலின் போதான வாக்குக் கணிப்புகள் பொய்த்தது போன்று இம்முறையும் வாக்குக் கணிப்புகள் பொய்த்தன. 2019 தோ்தலின்போது வெளியான வாக்குக் கணிப்புகள் கிட்டத்தட்ட ஒத்துப்போனது.
  • இப்படியாக, நாட்டின் பிரதான கட்சியான பாஜக, கூட்டணிக் கட்சிகளுடன் இசைந்து நடந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றத்துக்கு வித்திட்ட மக்களவைத் தோ்தல் நடந்து முடிந்துள்ளது.

நன்றி: தினமணி (18 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்