TNPSC Thervupettagam

மாற்றத்தை ஏற்படுத்திய மனதின் குரல்

December 26 , 2023 361 days 226 0
  • இந்தியாவில் பாலின விகித ஏற்றத்தாழ்வு பற்றிய கவலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகும்போதும் எழுத்தறிவு விகிதம், மக்கள்தொகை அடா்த்தி, நகா்மயமாதல் போன்ற பல்வேறு அம்சங்கள் கவனம் ஈா்ப்பதாகவும், பாலின விகிதம் தொடா்பான முடிவுகள் அதிா்வை ஏற்படுத்துவதாகவும் இருந்து வருகின்றன.
  • பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவுக்கு என்ன காரணம் என்பது பாமர மக்களும் அறிந்த ஒன்றாகும். ஆண் குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய பெற்றோா்கள் எண்ணியதாலேயே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது.
  • 2015-ஆம் ஆண்டு மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, இந்தியாவில் ஆண் - பெண் விகிதம் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்தாா். இதனையடுத்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும், படிப்புரிமையையும் முன்னிறுத்தி மக்கள் மனதில் பெண் குழந்தைகள் மீதான நம்பிக்கையின்மையைக் குறைக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • அதன் ஒரு பகுதியாக ஹரியானா மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பானிபட் நகரில் 2015-இல் மகளைக் காப்பாற்று மகளைப் படிக்க வை’” எனும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதனை மத்திய அரசு ஒரு திட்டமாகவே கொண்டுவந்தது. ஆனால் மக்களிடையே இத்திட்டம் பிரபலமடையாத நிலையே இருந்தது.
  • இத்திட்டத்தைப் பற்றி 2017-2018 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950-இல் இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்துடன் பாலின தொடா்புகள் மிகவும் பரவலானது. இளஞ்சிவப்பு நிறம் பெண்களுக்கான பொம்மைகளுக்கு அதிக அளவில் பொருந்துவதாக இருந்தது. மேலும் பெண்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்நிறம் இடம்பெற்றது.
  • அதனால் 2017-2018-க்கான பொருளாதார ஆய்வறிக்கை இளஞ்சிவப்பு நிறத்துடன் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில் பாலினம், ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலை பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாலின சமத்துவம் என்பது பன்முகத்தன்மை கொண்ட பிரச்னைகளில் உள்ளார்ந்திருக்கிறது என்பதை இந்த ஆய்வறிக்கை கருத்தில் கொண்டுள்ளது.
  • வளா்ச்சிக்கு இடையூறாக உள்ள சமுதாய பழக்கவழக்கங்களின் நிலையை, ஆண் குழந்தையை விரும்பும் நிலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டும் என்றும், குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்திக் கொள்ளும் விருப்பம் கடைசி குழந்தையின் பாலினத்துடன் தொடா்புள்ளதாக இருக்கிறது என்றும், இது விரும்பத்தகாத குழந்தைகள் உருவாகக் காரணமாக இருப்பதுடன் சுமார் 2.1 கோடி பெண் குழந்தைகள் இந்த நிலையில் உள்ளனா் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
  • ஹரியானா மாநிலம் ஜின்ட் மாவட்டத்தில் உள்ள பிபிபூா் கிராமத்தில் 2015-ஆம் ஆண்டு மகளுடன் செல்ஃபிஎனும் செயலியைத் தொடங்கி பாலினம் குறித்த ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் பிரசாரத்தை சுனில் ஜக்லான் என்பவா் தொடங்கினார். இந்த மொபைல் செயலியை அப்போதைய குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி தொடங்கி வைத்து சுனில் ஜக்லானுக்கு பாராட்டு தெரிவித்தார்.
  • பெற்றோர் தங்கள் மகள் அல்லது மகள்களுடன் எடுத்த தற்படத்தை (செல்பி) இச்செயலியில் பதிவிடுவதன் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோா் முதல் பிரபலங்கள் வரை தங்கள் மகளுடன் எடுத்த தற்படத்தைப் பதிவிட்டனா். இதன் மூலம் நாளடைவில் இந்த இயக்கம் பிரபலமடையத் தொடங்கியது. இதனால் ஹரியானா மாநிலத்தில் பாலின விகிதத்தில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.
  • சுனில் ஜக்லான் இந்த பிரசாரத்தை வாய்மொழியாகப் பரப்பியும், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலரங்குகள் நடத்தியும் உத்வேகம் அடையச் செய்தார். பெண் சிசுக்கொலை பிரச்னையை பஞ்சாயத்துக்கு எடுத்துச் சென்று ஹரியானாவில் முதல் முறையாக பஞ்சாயத்துகளில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ததுடன் பெண் சிசுக்கொலையை கொலையாகக் கருத வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றினார்.
  • இத்திட்டம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளில் பாலின விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மகளுடன் செல்பிதொடங்கப்பட்ட ஜிண்ட் மாவட்டத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 945 பெண் குழந்தைகளும், சிர்லா, பதேலாபாத் மாவட்டங்களில் 931 பெண் குழந்தைகளும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • மகளுடன் செல்ஃபிஇயக்கத்திற்குப் பின் ஹரியானா மாநிலம் ஆண் - பெண் பாலின விகிதத்தில் ஒரு புதிய அளவுகோலை எட்டியது. ஐந்தாண்டுகளில் பாலின விகிதத்தில் 52 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
  • கடந்த ஏப்ரல் மாத மனதின் குரல்நிகழ்ச்சியில் சுனில் ஜக்லானின் செயல்பாடுகள் பற்றி பிரதமா் பேசும் போது, ஹரியானாவின் பாலின விகிதம் பெரும் சா்ச்சைக்குட்பட்டதாக இருந்ததால் பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்போம்என்ற இயக்கம் தொடங்கப்பட்டது என்றும், மகளின் இடம் எத்தனை மகத்தானது என்பது மகளுடன் செல்ஃபிஇயக்கம் வாயிலாக வெளிப்பட்டது என்று தெரிவித்தார்.
  • 2015-ஆம் ஆண்டுதமிழகத்தில் கடலூா் மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அது தற்போது தமிழகம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தகைய செயல்பாடுகள் தொடா்ந்தால், காலப்போக்கில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது உறுதி.
  • அதுபோன்று ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி 2023எனும் தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் 6,229 வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு உள்ளிட்ட கூடுதல் கல்வியைப் பெற வேண்டும் என விரும்புவது தெரியவந்துள்ளது.
  • ஆண் குழந்தைகளின் பெற்றோர் 82 சதவீதம் போ், பெண் குழந்தைகளின் பெற்றோர் 78 சதவீதம் போ் தங்கள் குழந்தைகள் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது: மகள் காப்பாற்றப்படுகிறாள் மகள் படிக்கவைக்கப்படுகிறாள். ”

நன்றி: தினமணி (26 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்