TNPSC Thervupettagam

மாற்றத்தை வீட்டிலிருந்து தொடங்குவோம்

November 1 , 2023 389 days 257 0
  • "நம் நாட்டில் குடிக்கத் தண்ணீரில்லை, தூய காற்றில்லை, தடையில்லாத மின்சாரம் இல்லை, சுத்தமான பொதுக் கழிப்பறைகள் இல்லை, குப்பையில்லாத ஊரில்லை' என்று ஒவ்வொரு நாளும் நாம் எல்லோரும் ஒரு நீண்ட குறைப்பட்டியலை வாசித்துக்கொண்டும், பத்திரிகைளுக்கு எழுதிக்கொண்டும், சமூக வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டும் இருக்கிறோம்.
  • "அது மாறவில்லையே, இது மாறவில்லையே என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நாடு மாறவில்லையே என்று குறைப்பட்டுக் கொள்ளும் நாம், நம் வீடு மாறியுள்ளதா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
  • "பணத்தைத் தண்ணீராய்ச் செலவழித்தான்' என்று அன்று சொன்னார்கள். இன்றோ தண்ணீரைப் பணத்தைப் போல் அருமையாகச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் வீட்டில் தண்ணீரை அளவாகப் பயன்படுத்துகிறோமா?
  • குழாயைத் திறந்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போகிறோம். வாளி நிறைந்து தண்ணீர் கீழே வழிகிறது. இதைத்தவிர்க்கலாமே. தண்ணீர் குறைவாக வரும்படி குழாயைத் திறந்து விடலாம். அல்லது வாளியை நிறைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்.
  • பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளின் தண்ணீர் புட்டிகளில் மீதமிருக்கும் தண்ணீரை வீணாகக் கீழே கொட்டாமல் தொட்டிச் செடிகளுக்கு ஊற்றலாம்; ஒரு வாளியில் ஊற்றச் செய்து சேமித்துப் பிறகு அவர்களது மிதிவண்டிகளைக் கழுவுவதற்குப் பயன்படுத்தச் சொல்லலாம். காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைக் கழுவும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம்; செடிகள் இல்லாதவர்கள் பாத்திரங்களைக் கழுவும் முன் அவற்றை ஊற வைப்பதற்குப் பயன்படுத்தலாம்.
  • தெருக்குழாய்கள் பெரும்பாலும் சரியாக மூடப்படாமல் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கும். நகராட்சியைக் குறைசொல்லிக் கொண்டிருக்காமல் நாமே சிறுதொகை செலவு செய்து அதைச் சரி செய்யலாம். அப்படிச் சரிசெய்யும் வரை ஒரு துணியால் இறுகக் கட்டி வைத்துத் தண்ணீர் வெளியேறாமல் அடைத்து வைக்கலாம். 
  • நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய தருணமிது. சுற்றுலா செல்கின்றோம்; நெகிழித் தண்ணீர்ப் புட்டிகளை அங்கங்கே வாங்குகிறோம்; தண்ணீரைக் குடித்துவிட்டு அருகிலுள்ள ஆற்றிலோஅருவியிலோ அவற்றை வீசுகிறோம்.
  • இனி அப்படிச் செய்ய வேண்டாம். கூடுமானவரை நெகிழிப் புட்டிகளைத் தவிர்த்து மாற்றுப் புட்டிகளில் (கடைகளில் கிடைக்கிறது) பயணத்துக்குத் தேவையான தண்ணீரை எடுத்துச் செல்லலாம்.
  • தண்ணீர் தீர்ந்து விட்டால், நாம் உணவருந்தும் உணவகங்களில் நிறைத்துக் கொள்ளலாம். அப்படியே கடைகளில் விற்கும் தண்ணீர்ப் புட்டிகளைவாங்கினாலும் அவற்றை பத்திரமாக வீட்டிற்குக் கொண்டுவந்து மறுசுழற்சிக்குத் தரலாம்.
  • வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், நீண்ட ரப்பர் குழாய் மூலம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்குப் பதில் சிறிது பணமும் நேரமும் செலவு செய்து மழைநீர்சேகரிப்புத் தொட்டி      அமைத்து, அதிலிருந்து சொட்டுநீர்க் குழாய்கள்அமைக்கலாம். தண்ணீர் விரயமாவது தடுக்கப்படும். மாடித்தோட்டம், வாசலில் சிறிய தோட்டம் என எதுவாக இருப்பினும் இந்த நடைமுறையால் தண்ணீரை மிச்சப்படுத்தலாம். 
  • கிராமப்புறங்களில் விவசாயிகள் பெரும்பாலோர் காலத்தின் கட்டாயமாக சொட்டுநீர்ப் பாசனத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால், அவர்களே பயிர்க் கழிவுகளையும், தென்னங் கீற்றுகளையும், ஓடுகளையும், வீடுகளின் கழிவுநீரையும், குளங்களிலும் நீர்வரத்துப் பாதைகளிலும் போட்டுத் தண்ணீரைப் பாழாக்குகிறார்களே. மக்கும் கழிவுகளைத் தங்கள் தோட்டத்திலேயே சேர்த்து மக்கி உரமாக்க வேண்டும். மக்காதவற்றை மறுசுழற்சிக்குக் கொடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.   
  • நகர்ப்புறங்களில் காற்று என்பதே இல்லை. அவ்வளவு நெருக்கமாக வீடுகள். கிடைக்கும் காற்றையும் நாமே மாசுபடுத்தி விட்டோம். இந்நிலையை மாற்றச் சில எளிதான வழிகளைப் பின்பற்றலாம். பட்டாசுகளை அறவே தவிர்க்கலாம். நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வரும் புகையின் அளவைக் குறைக்கும் வண்ணம் அவற்றை நன்கு பராமரிக்கலாம். குப்பைகளைச் சேர்த்து எரிப்பதும், பொது இடங்களில் புகை பிடிப்பதும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்று தெரிந்தும் பலரும் இவற்றைச் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் இனிமேலாவது பொதுநலம் கருதி இவற்றைச் செய்யாமல் இருக்கலாம்.
  • கிராமங்களில் போகிப் பண்டிகை கொண்டாடும்போது பழைய பொருட்கள், டயர்கள் ஆகியவற்றைப் போட்டு எரிக்கிறார்கள். இது எவ்வளவு கேடு விளைவிக்கிறது என்பதை அவர்களுக்குப் புரிய வைத்து அவ்வழக்கத்தை அவர்கள் விட்டொழிக்கும்படி செய்ய வேண்டும்.   
  • மின்சாரப் பயன்பாட்டை நாம் வெகுவாகக் குறைக்க வேண்டும். வீடுகளிலும், கல்வி நிலையங்களிலும், அலுவலகங்களிலும், பொதுவிடங்களிலும் தேவையில்லாமல் எரியும் மின்விளக்குகளையும், ஓடும் மின்விசிறிகளையும் பொறுப்போடு  அணைக்க வேண்டும்.
  • வணிக நிறுவனங்களிலும், விழா மண்டபங்களிலும் சரம் சரமாக மின்விளக்குகளை இரவு முழுதும் எரிய விடுவதைத் தவிர்க்க வேண்டும். கோயில் திருவிழாக்களிலும், வீட்டு விழாக்களிலும் நாள் முழுவதும் ஒலிபெருக்கியை அலறவிட்டு மின்சாரத்தை வீணாக்காமல் இருக்க வேண்டும்.
  • பராமரிப்பு காரணமாக சில நேரம் மின்சாரம் தடைப்படும்போது அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஜெனரேட்டர் போடுகிறார்கள். அந்தச் சமயத்தில் கூடப் பலர் துணி துவைக்கும் இயந்திரங்களை இயக்குகிறார்கள்; தொலைக்காட்சியைப் பயன்படுத்துகிறார்கள். இப்படியெல்லாம் செய்வது மிகவும் தவறு. சற்று நேரம் பொறுத்திருந்து மின்சாரம் வந்ததும் அவ்வேலைகளைச் செய்யலாம்.
  • வீட்டில், ஒரு அறையிலிருந்து இன்னோர்அறைக்குச் செல்லும்போது, மறவாமல் மின்விசிறியையும் மின்விளக்கையும் அணைத்துவிட்டுச் செல்ல வேண்டும். இளைய தலைமுறையினரிடம் இந்தப் பழக்கம் அறவே இல்லை. சில வீடுகளில் தொலைக்காட்சி எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும்.
  • வீட்டிலுள்ளவர்கள் ஏதேதோ வேலை செய்து கொண்டிருப்பார்கள். யாரும் பார்க்காதபோது தொலைக்காட்சியை அணைக்க வேண்டும். இதற்கு இந்த நேரம் என்று வரையறுத்துக் கொள்ளலாம்.
  • பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறையில் படிப்பதைத் தவிர்த்துக் கூடுமானவரையில் ஒரே அறையில்அவர்கள் சேர்ந்து படித்தால் ஒரு மின்விளக்கு,  ஒரு மின்விசிறி மட்டுமே பயன்படுத்தப்படுவதால் எவ்வளவோ மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். சாப்பிடுதல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்தல் போன்ற சில வேலைகளையாவது எல்லாரும் ஒரே அறையில் கூடி, செய்யப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
  • ஒருசிலர் வீடு, அலுவலகம், பயணம் செய்யும் மகிழுந்து என்று எல்லா இடங்களிலும் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாளில் சில மணி நேரங்களாவது குளிர்சாதனப் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். வியர்வையின் மூலமாகத்தானே உடம்பிலுள்ள கழிவுகள் வெளியேறும்? குளிர்சாதனப் பயன்பாட்டை முற்றிலும் விடமுடியாவிட்டாலும் முடிந்தவரை அதன் பயன்பாட்டைக் குறைக்கலாம்.          
  • பொதுக்கழிப்பறைகளை யார் பயன்படுத்துகிறார்கள்? பொதுமக்களாகிய நாம்தானே? நாம் உள்ளே செல்லும்போது எப்படித் தூய்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதே போல் நாம் பயன்படுத்திவிட்டு வெளியே வரும்போதும் கழிப்பறையைத் தூய்மையாக வைத்துவிட்டு வரவேண்டும்.
  • நம் வீட்டில் கழிப்பறையை நாம் பயன்படுத்தியவுடன்சுத்தமாகத் தண்ணீர் ஊற்றிவிட்டு, அடுத்தவர் பயன்பாட்டுக்கென வாளியில் தண்ணீரை நிறைத்து வைத்துவிட்டு வரப் பழகிக்கொண்டால் பள்ளி, கல்லூரி, பூங்கா, தொடர்வண்டி, பேருந்து நிலையம், பயணம் செய்யும் இடங்கள் என எல்லா இடங்களிலும் கழிப்பறையைத் தூய்மையாகப் பராமரிக்கும் பண்பு வந்துவிடும். இங்கு தண்ணீர் பயன்பாட்டில் சிக்கனம் பார்க்கலாகாது.
  • வீட்டிலுள்ள எல்லோரும் குப்பைகளைப் பிரித்து இரண்டு தனித்தனிக் குப்பைக் கூடைகளில் போடவேண்டும். சிறு குழந்தைகளுக்குக் கூட இதை நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். மக்கும் குப்பைகளை வீட்டிற்கு வெளியில் வீசாமல் அவற்றை எடுக்க வரும் நகராட்சிப் பணியாளர்கள், சிந்தாமல் சிதறாமல் எடுக்கும் வண்ணம் மூடிய கூடைகளில் வைக்க வேண்டும். மக்காதவற்றைச் சேர்த்து வைத்துச் சற்றே மெனக்கெட்டு மறுசுழற்சிக்குக் கொடுக்க வேண்டும்.
  • அதிக அளவில் உணவுப் பண்டங்களை வாங்கிப் பயன்படுத்தும்போது அதிக அளவில் குப்பை உண்டாகிறது. வீட்டில் செய்யும் உணவைச் சாப்பிட்டு வெளியில்  உணவு வாங்குவதைக் குறைக்கலாம். எந்தப் பொருளையும் வாங்குமுன்னர் ஒருமுறைக்கு இருமுறை இது அவசியம்தானா என்று யோசித்துவிட்டு, அவசியம்தான் என்றால் வாங்கலாம். விழாக் காலங்களில் நாம் பயன்படுத்தும் பட்டாசுகள், பூக்கள், மாலைகள்,  நெகிழிப் பொருட்கள் போன்றவற்றை பாதிக்குப் பாதியாகக் குறைத்தால் குப்பையும் பாதியாகக் குறையும்.
  • பொது இடத்தில் எச்சில் துப்புவதும், சிறுநீர் கழிப்பதும் தவறு என்று நினைத்தால் மட்டும் போதாது; அதையும் தாண்டி அவை இழுக்கானவை, கேவலமானவை, அவமானத்துக்குரிய செயல்கள் என்று நாம் உணரவேண்டும். சிறு குழந்தைகளுக்கும் இதனை எடுத்துரைத்து அவர்கள் அப்படிச் செய்யாமல் இருக்கப் பழக்க வேண்டும்.
  • ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் இப்பண்புகளை மற்றவர்க்கு எடுத்துச்சொல்லி, உறுதியுடன் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். வீட்டிலுள்ள மற்றவர்கள் "நம் நல்லதுக்குத்தானே சொல்கிறார்' என்று புரிந்துகொண்டு, அவரோடு ஒத்துழைக்க வேண்டும். நல்லவற்றை முன்னெடுக்கும்போது முதலில் எதிர்ப்புதான் வரும். மனந்தளராமல் பொறுமையோடு தொடர்ந்தால் நிச்சயம் நாம் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.
  • மாற்றத்தை இன்றே ஆரம்பிப்போம்; அதை நம் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம். அம்மாற்றம், தெரு, ஊர், மாநிலம், என நாடெங்கும் பரவும்.

நன்றி: தினமணி (01 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்