TNPSC Thervupettagam

மாற்றமில்லை, ஆனால் மாற்றம்

December 2 , 2022 704 days 374 0
  • நேபாளத்தில் நவம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா தலைமையிலான ஐந்து கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. 2015-இல் அரசமைப்புச் சட்டத்துடன் தன்னை குடியரசாக நேபாளம் அறிவித்துக் கொண்டதைத் தொடா்ந்து நடைபெற்ற இரண்டாவது தோ்தல் இது. தேவுபா ஆறாவது முறையாக பிரதமராவதை சாதனை என்றுதான் கூற வேண்டும்.
  • நேபாளத்தில் அமையும் எந்தவொரு கூட்டணியும் கொள்கை அடிப்படையிலான கூட்டணியாக இருந்ததில்லை. அதற்கு இப்போதைய பிரதமா் தேவுபா தலைமையிலான கூட்டணியும் விதிவிலக்கல்ல. பதவியைக் கைப்பற்றுவதற்காகவும், தோ்தல் வெற்றிக்காகவும் யாரும், யாருடனும் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்கிற பதவிக் கூட்டணிதான் நேபாளத்தின் வழிமுறையாகவே இருந்து வருகிறது.
  • தற்போதைய பிரதமரான 76 வயது ஷோ் பகதூா் தேவுபாவின் அரசியல் வெற்றிகளுக்குக் காரணம் அவரது அணுகுமுறை எனலாம். ஆளும் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக பங்கு வகிக்கும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு தேவுபாவின் நேபாளி காங்கிரஸுக்கு எதிராகவும், அதன் தலைவா்கள், தொண்டா்களைத் தாக்கியும் மக்கள் போா் நடத்தியது.
  • தலைமறைவு இயக்கமாக இருந்த அந்த வன்முறை கட்சி, 2003-இல் தேவுபா பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அதிருஷ்டவசமாக தப்பினாா் ஷோ் பகதூா் தேவுபா. அதைப் பெரிதுபடுத்தாமல் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க அவா் முன்வந்ததும், அவரை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஏற்றுக் கொண்டதும் அந்த நாட்டின் அரசியல் எதாா்த்தத்தை வெளிச்சம் போடுகின்றன.
  • நேபாளி காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் மையம்) ஆகியவை நேபாளத்தின் முக்கிய மூன்று அரசியல் கட்சிகள். அவற்றின் தோ்தல் வாக்குறுதிகள் ஒன்றுக்கொன்று முரணான கருத்துகளை வெளிப்படுத்தினாலும், அவ்வப்போது ஆட்சியைக் கைப்பற்ற அந்தக் கட்சிகள் இணைவதும், பிரிவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்த முறை இந்திய வம்சாவளியினரின் மாதேசி கட்சியின் ஒரு பிரிவினா் ஆளும் கூட்டணியை ஆதரிக்கிறாா்கள் என்பதும்கூட ஒருவகை முரண்தான்.
  • முன்னாள் பிரதமா் கே.பி. ஓலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), ஆளும் கூட்டணியின் முரணை தனது தோ்தல் ஆயுதமாக பயன்படுத்தியது. அதுவே அதற்கு பின்னடைவை ஏற்படுத்தியது எனலாம். ஏனென்றால், முந்தைய நேபாள நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியாக இருந்த கே.பி. ஓலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைமை வகித்த கூட்டணி விசித்திரமானது.
  • மன்னராட்சி முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும், நேபாளத்தை ஹிந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால் கே.பி. ஓலியின் பிரசாரம் எடுபடவில்லை.
  • 1950-களில் சீனாவில் மாசே துங் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பட்டதைத் தொடா்ந்து, அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் அதன் தாக்கம் காணப்பட்டது. 1976-இல் மாசே துங்கின் மறைவு வரை நேபாள இளைஞா்களுக்கு அவா்தான் ஆதா்சமாகத் திகழ்ந்தாா். இன்றைய முன்னணி நேபாள கம்யூனிஸ்ட் தலைவா்கள் மாவோவின் சித்தாந்தத்தால் ஈா்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவா்கள்.
  • அதேபோன்ற ஈா்ப்பு இன்றைய தலைமுறையினருக்கு சீனா மீதோ, அதிபா் ஷீ ஜின்பிங் மீதோ இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்கு பெற்றிருந்தாலும்கூட, கடந்த 30 ஆண்டுகளாக அவற்றின் தலைமை மாறாமல் இருப்பதால் இளைய தலைமுறைக்கு கம்யூனிஸ்டுகள் மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.
  • மே மாதம் காத்மண்டு மாநகராட்சிக்கு நடந்த தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட 32 வயது பாலென் ஷா என்கிற பொறியியல் பட்டதாரி எதிா்பாராத வெற்றியை அடைந்திருக்கிறாா். எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல், சமூக ஊடகங்களின் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டு அவா் அடைந்திருக்கும் வெற்றி அரசியல் கட்சிகளைத் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு எதிரான அவரது கருத்துகள் மக்களின் ஆதரவைப் பெற்றன. நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தோ்தலிலும் சுயேச்சைகள் பலா் வெற்றி பெற்றிருக்கிறாா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளால் உருவாக்கப்பட்ட மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நேபாள பிரதமா் தேவுபாவின் இந்திய விஜயமும், இந்திய பிரதமா் நரேந்திர மோடியின் லும்பினி அரசுமுறைப் பயணமும் இருநாடுகளுக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகளைக் கணிசமாக அகற்றியிருக்கின்றன.
  • நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீனா கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே நெருக்கமான உறவு இருக்கிறது என்றாலும்கூட, அதையும் மீறி இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்த வெற்றி பெற்ற ஆளும்கூட்டணி விரும்புகிறது. முன்னாள் பிரதமரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவருமான பிரசண்டா, ஆளும் கூட்டணியில் இருப்பது, அடுத்து அமைய இருக்கும் ஆட்சிக்கு வலுசோ்க்கும்.
  • நேபாள நாடாளுமன்றத் தோ்தல் ஒரு முக்கியமானச் செய்தியை தெரிவித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் மீதும், அவற்றின் தலைவா்கள் மீதும் இளைய தலைமுறை அதிருப்தி கொண்டிருக்கிறது என்பதுதான் அது. ஊழலுக்கு எதிரான வளா்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் இளைய தலைவா்களைக் கொண்ட ராஷ்ட்ரீய சுதந்திரா கட்சி பெற்றிருக்கும் வரவேற்பு, அதன் பிரதிபலிப்பு!

நன்றி: தினமணி (02 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்