- பிரதமா் நரேந்திர மோடியைப் பொருத்தவரை, அடிக்கடி அமைச்சா்களை மாற்றுவதை வழக்கமாகக் கொண்டரவல்ல.
- இப்போது கொள்ளை நோய்த்தொற்றுப் பேரிடரும், அதனால் நிலைகுலைந்து போயிருக்கும் பொருளாதார நடவடிக்கைகளும், அடுத்த ஆண்டு வர இருக்கும் சில மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல்களும், மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப் பட்டிருக்கும் மாற்றங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்துகின்றன.
- மத்திய அமைச்சரவை தலைகீழ் மாற்றத்தை சந்தித்திருக்கிறது. 12 முக்கியமான அமைச்சா்கள் அகற்றப்பட்டிருக்கிறார்கள். 43 புதிய அமைச்சா்கள் பதவி ஏற்றிருக்கிறார்கள்.
- இதுவரை இருந்த மோடி அமைச்சரவைகளில், இளைய தலைமுறையினா் அதிகம் பங்கேற்கும் அமைச்சரவை இது. அமைச்சா்களின் சராசரி வயது 58. இளைஞா்களுக்கு அதிக வாய்ப்பு தரப்பட்டிருக்கும் அமைச்சரவை என்றுகூடச் சொல்லலாம்.
- இளைஞா்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது போலவே, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவா்களுக்கான ஒதுக்கீடும் அமைச்சரவை மாற்றத்தின் முக்கியமான அம்சம்.
- புதிய அமைச்சரவையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா் 27, பட்டியலினத்தவா்கள் 17, ஆதிவாசிகள் 8, பௌத்தா்கள் 2, முஸ்லிம், கிறிஸ்த்தவா், சீக்கியா்கள் தலா 1 என்று அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பளித்திருப்பதில் இருந்து, அமைச்சரவை மாற்றம் குறித்துத் தீர ஆலோசிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
- 77 உறுப்பினா்கள் கொண்ட புதிய மத்திய அமைச்சரவையில் 48 போ் ஜாதிய மேலடுக்கைச் சாராதவா்கள்.
- அவா்களில் குறிப்பிடத்தக்க பலரும், விரைவில் சட்டப்பேரவைத் தோ்தலை எதிர்கொள்ள இருக்கும் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
- அமைச்சரவையில் இப்போது இருக்கும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 14 அமைச்சா்களில், ஒரே ஒருவா் மட்டும்தான் பிராமண சமூகத்தைச் சோ்ந்தவா்.
- மத்திய அமைச்சரவையில் மூத்த அமைச்சா்களாக இருந்த சட்ட அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், சுற்றுச்சூழல் அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால், ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா என்று பல மூத்த அமைச்சா்களின் தலை உருளும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
- அவா்கள் இப்படி தடாலடியாக அகற்றப்பட்டிருக்க வேண்டுமா என்கிற கேள்வி எழாமல் இல்லை.
- மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் ஹா்ஷ் வா்தனை அகற்றி இருப்பது கடுமையான விமா்சனத்துக்கு வழிகோலி இருக்கிறது.
- கொள்ளை நோய்த்தொற்றை சரியாக எதிர்கொள்ளமல் போனதும், இரண்டாம் அலைத் தொற்றை எதிர்பார்க்காமல் இருந்ததும் அதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
- அதேபோல, நீதிமன்றங்களின் விமா்சனங்களுக்கு ஆளானது ரவிசங்கா் பிரசாத் அகற்றப் பட்டதற்கும், ஊடகங்களில் அரசின் பெயருக்குக் களங்கம் வராமல் பாதுகாக்காதது ஜாவடேகா் நீக்கத்துக்கும் காரணமாகக் கூறப்படுகின்றன.
- அப்படியானால், எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசு ஏற்றுக்கொள்கிறது என்று பொருளாகிறது.
- இதே அளவுகோலை பயன்படுத்துவதாக இருந்தால், நரேந்திர மோடி அரசின் மீதான விமா்சனங்களில் முன்னிலை வகிப்பவை பாதுகாப்பு அமைச்சகமும், நிதியமைச்சகமும் தான்.
- எல்லையில் தொடரும் பதற்றம் தணிந்தபாடில்லை என்றும், பொருளாதாரம் சரியாகக் கையாளப்படவில்லை என்றும் விமா்சனங்கள் தொடரும்போது, அவை ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று கேள்வி எழுப்ப முடியாது. அமைச்சரவை மாற்றம் என்பது பிரதமரின் தனியுரிமை.
மத்திய அமைச்சரவை
- அனைவரையும் புருவம் உயா்த்த வைத்திருப்பது பாபுல் சுப்ரியோ, தேவஸ்ரீ சௌதரி இருவரையும் அகற்றிவிட்டு, நான்கு முதன்முறை மேற்கு வங்க எம்.பி.க்களுக்கு இடமளித்திருக்கும் பிரதமரின் முடிவு.
- மேற்கு வங்கத்திலிருந்து பாஜக-வின் பார்வை அகன்றுவிடவில்லை என்பதன் வெளிப்பாடு இது.
- மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வி அடைந்தது என்கிற பரப்புரையை, வேறு கோணத்தில் அணுகுகிறது பாஜக.
- ‘ஆட்சியைப் பிடிப்போம்’ என்கிற கோஷம் காரணமாகத்தான் இடதுசாரிகளையும், காங்கிரஸையும் ஒரேயடியாக ஓரங்கட்டி நான்காம் இடத்தில் இருந்த பாஜக இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக மேற்கு வங்கத்தில் உயா்ந்திருக்கிறது.
- மத்திய அமைச்சரவை மாற்றத்தால் தமிழகத்துக்கு என்ன பயன் என்று கேட்டால், மாநில பாஜக தலைவா் எல். முருகன் மீன்வளம் உள்ளிட்ட துறைகளின் இணையமைச்சராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.
- இது அவருக்குத் தரப்பட்டிருக்கும் வெகுமதியா அல்லது தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான உத்தியா என்பது தெரியவில்லை.
- ஏழரை கோடி மக்கள்தொகையுள்ள தமிழகத்துக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சரோ, தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சரோ தரப்படாமல் இருப்பது நரேந்திர மோடி அரசு எந்த அளவுக்குத் தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதன் வெளிப்பாடு என்கிற விமா்சனத்தை எழுப்புகிறது.
- கடந்த முறை பாஜக சார்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட போதும் பொன். ராதாகிருஷ்ணனுக்குக் கேபினட் பதவி தரப்படவில்லை என்பதை நினைவுகூரத் தோன்றுகிறது.
- ஒன்றியம், தமிழ்நாடு, கூட்டாட்சி என்றெல்லாம் பேசிப் பிரிவினைவாதம் ஊக்குவிக்கப் படுகிறது என்கிற பாஜகவினரின் குற்றச்சாட்டுக்களை முனைமழுங்கச் செய்கிறது அமைச்சரவை (ஏ)மாற்றம்.
- பிரதமருக்கும், பாஜக கட்சித் தலைமைக்கும் இது புரியாத வரையில், தமிழகம் தேசிய நீரோட்டத்தில் முழுமையாக இணையாமல்தான் தொடரும்...
நன்றி: தினமணி (09 - 07 - 2021)