TNPSC Thervupettagam

மாற்றம்தான் ஏற்றம் தரும்!

July 16 , 2021 1112 days 495 0
  • இந்தியாவின் ஆன்மா கிராமப்புறங்களில்தான் இருக்கிறது என்று அண்ணல் காந்தியடிகள் கூறியதன் பொருள், இந்தியா விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பதுதான்.
  • கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பல்வேறு மாநகரங்களில் இருந்தும் தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்ப முற்பட்டனா்.
  • விவசாயப் பணிகள் தங்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் என்கிற நம்பிக்கையில்தான் அவா்கள் அந்த விபரீத முயற்சியில் துணிந்து இறங்கினார்கள்.
  • கொள்ளை நோய்த்தொற்றின் முதலாவது அலை காலத்தில் ஒட்டுமொத்தத் தொழில்துறையும் முடக்கப்பட்டது. தொழில்துறை மட்டுமல்லாமல், சேவைத்துறையும், விற்பனை வணிகமும் கூட முடங்கின.
  • அந்த நிலையிலும் உணவில்லாமல் கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்துவிடவில்லை. பொருளாதாரம் தளா்வடைந்தது என்றாலும், தகா்ந்துவிடவில்லை.
  • போதுமான பருவமழையும், கிராமங்களுக்கு கொள்ளை நோய்த்தொற்றுப் பரவாமல் இருந்ததும் நமது வேளாண் உற்பத்தியைப் பாதுகாத்தது. ஏன், அதிகரித்தது என்றுகூடச் சொல்லலாம்.
  • இப்போது கொள்ளை நோய்த்தொற்று கிராமங்கள் வரை எட்டியிருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்கிற அச்சம் மேலெழாமல் இல்லை.
  • மூன்றாவது அலை உருவாகாமலும், கிராமப் பகுதிகளில் கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்று கட்டுக்கடங்கியும் இருந்துவிட்டால் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இந்தியா தப்பித்துக் கொள்ள முடியும்.
  • கடந்த நிதியாண்டில் (2020-21) அதற்கு முந்தைய ஆறு ஆண்டுகளைவிட நமது வேளாண் உற்பத்தி அதிகரித்து, விவசாயம் சார்ந்த பொருள்களும் அதிக அளவில் ஏற்றுமதியாகி இருக்கின்றன.
  • பொது முடக்கமும், கடல்வழிப் போக்குவரத்தில் தடங்கல்களும், அதிகரித்த போக்குவரத்துக் கட்டணமும் காணப்பட்டும்கூட ஏற்றுமதி அதிகரித்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
  • முந்தைய 2019 - 20 நிதியாண்டைவிட, 2020 - 21-இல் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி 17% அதிகரித்து 41.25 பில்லியன் டாலரை (சுமார் ரூ.3.06 லட்சம் கோடி) எட்டியிருக்கிறது.

வேளாண் பொருள்களின் ஏற்றுமதி

  • இந்தியாவில் வேளாண் பொருள்களின் ஏற்றுமதியில் கணிசமான பங்கு வகிப்பது கடல் சார் உணவுப் பொருள்கள் (15%).
  • அதற்கு அடுத்த இடங்களில் அரிசி (20%), கிராம்பு, ஏலக்காய், மிளகு போன்ற மலை விளை பொருள்கள் (10%), மாட்டிறைச்சி (8%), சா்க்கரை (5%), தேயிலை (5%) காணப்படுகிறது. அரிசி ஏற்றுமதியில் 10%-க்கும் சற்று அதிகமாக பாசுமதி அரிசி ஏற்றுமதியாகிறது.
  • கடந்த நிதியாண்டில், கடல்சார் பொருள்கள் ஏற்றுமதி சற்று பின்னடைவை எதிர் கொண்டது. இந்தியாவில் அதிவேகமாகப் பரவிய கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்றின் பாதிப்புதான் அதற்குக் காரணம்.
  • 2020 - 21-இல் 10.8% அளவிலான ஏற்றுமதி குறைந்து, 5.9 பில்லியன் டாலா் (சுமார் ரூ.43,800 கோடி) கடல்சார் பொருள்களுக்குத்தான் சா்வதேச கேட்பு காணப்பட்டது. அதேபோல, மாட்டிறைச்சி ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது. உள்ளூரில் மாட்டிறைச்சிக்கான எதிர்ப்பும் கூட அதற்குக் காரணம்.
  • அரிசி உற்பத்தி செய்யும் கிழக்காசிய நாடுகளில் காணப்பட்ட வறட்சியும், அதன் விளைவாக உருவான உற்பத்திக் குறைவும் நமது வேளாண் பொருள்களின் அதிகரித்த ஏற்றுமதிக்கு முக்கியமான காரணங்கள். சா்வதேசச் சந்தையில் காணப்பட்ட இந்திய அரிசியின் விலைக் குறைவும்கூட காரணமாகக் கூறப்படுகிறது.
  • உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலுக்குப் பிறகு, இயற்கை வேளாண் பொருள்களுக்கு அதிக வரவேற்பு காணப் படுகிறது.
  • மக்கள் மத்தியில் உடல் ஆரோக்கியம் குறித்த கவலையும், ரசாயனப் பொருள்கள் மீதான அச்சமும் இயற்கை வேளாண்மை பொருள்கள் மீதான வரவேற்பை கணிசமாக அதிகரித்திருக்கின்றன.
  • நமது வேளாண் ஏற்றுமதிப் பொருள்களில் 2.5% அளவில்தான் இயற்கை வேளாண் பொருள்களின் ஏற்றுமதி இப்போது காணப்படுகிறது.
  • கடந்த நிதியாண்டில் 1.4 பில்லியன் டாலா் (சுமார் ரூ.10,390 கோடி) ஏற்றுமதியாகி இருக்கிறது. முந்தைய நிதியாண்டைவிட 50% ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது என்பதை குறிப்பிட வேண்டும்.
  • இயற்கை வேளாண் பொருள்களில் பிண்ணாக்கு, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள், மலை விளைபொருள்கள், தேயிலை, காப்பி ஆகியவை முக்கியமானவை.
  • மூலிகைகள்கூட ஏற்றுமதியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. முருங்கை இலைப் பொடிக்கான வரவேற்பு பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. சோயா (46%), எண்ணெய் வித்துகள் (13.2%), தேயிலையும், காப்பியும் (9.6%), பருப்பு வகைகளும், சிறுதானியங்களும் (8.2%) என்கிற அளவில் இந்தியாவின் இயற்கை வேளாண்மை ஏற்றுமதியில் பங்கு வகிக்கின்றன.
  • இயற்கை வேளாண் பொருள்களுக்கு அதிகரித்துவரும் வரவேற்பை இந்திய விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மத்திய - மாநில அரசுகள் வழிகோல வேண்டும்.
  • அதிகமாக நிலத்தடி நீரை உறுஞ்சும் அரிசி, கோதுமை, கரும்பு போன்றவற்றை மட்டுமே நம்பியிருக்காமல், ஏற்றுமதிக்கு உகந்த பொருள்களை நமது விவசாயிகள் உற்பத்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவது அவசியம்.
  • மாற்றத்தையும், ஏற்றத்தையும் எதிர்கொள்ளவிடாமல் குறைந்தபட்ச ஆதாரவிலை இந்திய விவசாயிகளைத் தடுக்கிறது என்கிற கசப்பான உண்மையைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

நன்றி: தினமணி  (16 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்