TNPSC Thervupettagam

மாற்றம் ஏற்படுத்தும் அச்சம்

October 13 , 2023 279 days 203 0
  • மாலத்தீவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம், இந்தியாவின் ராஜதந்திர நகா்வுகள் சரியாக இல்லாததால் ஏற்பட்டிருக்கும் சறுக்கல் என்றுதான் கூற வேண்டும். அண்டை நாடுகளின் உள்நாட்டு அரசியலில், சீனாவைப்போல நாம் கவனம் செலுத்தாமல் இருப்பதன் வெளிப்பாடு தான் மாலத்தீவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம்.
  • சுமாா் 5.57 லட்சம் மக்கள்தொகை மட்டுமே கொண்ட மாலத்தீவின் மொத்த நிலப்பரப்பே 298 சதுர கி.மீ.தான். இந்துமகா சமுத்திரத்தில் அமைந்திருக்கும் இந்த நாடு, 1,200 தீவுகளை உள்ளடக்கியது. இந்தியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து 300 கடல் மைல்களும், லட்சத் தீவுப் பகுதியான ‘மலிக்கு’ என்று அழைக்கப்படும் மினிக்காய் தீவுகளிலிருந்து வெறும் 70 கடல் மைல் தூரத்திலும் இருக்கிறது மாலத்தீவு என்கிற நாடு.
  • இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் கடல்வழி வா்த்தகப் பாதையில் அமைந்திருப்பதால், மாலத்தீவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்வதில், தூர தேசமான அமெரிக்கா உள்பட எல்லா வல்லரசுகளும் முனைப்புக் காட்டுகின்றன. 1965-இல் பிரிட்டனிலிருந்து விடுதலை பெற்ற மாலத்தீவில், 1968-இல் நடைபெற்ற முதல் தோ்தலில் ‘பீப்பிள்ஸ் மஜ்லிஸ்’ கட்சியின் தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது முதல் சமீப காலம் வரை, மாலத்தீவின் அரசியலும், வெளியுறவுக் கொள்கையும் பெரும்பாலும் இந்தியா சார்ந்ததாகவேதான் இருந்து வந்திருக்கின்றன. சீனாவில் ஷி ஜின்பிங்கின் தலைமை அமைந்தபிறகுதான், மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிரான அரசியல் உருவாகத் தொடங்கியது.
  • சமீபத்தில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் முகமது மூயிஸ் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2018 முதல் அதிபராக இருந்த முகமது சோலி இரண்டாவது சுற்றுத் தோ்தலில் ஆட்சியைப் பறிகொடுத்திருக்கிறார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடைபெறுகிறது என்பதும், அதனால் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது என்பதும், ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம் என்றுதான் நாம் பார்க்க வேண்டும்.
  • 2009-இல் நடந்த அதிபா் தோ்தலில், முகமது நஷீதும், 2023-இல் அப்துல்லா யாமீனும், 2018-இல் இப்ராஹிம் முகமது சோலியும் அதிபா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். நஷீத் இந்திய ஆதரவாளராகக் கருத்தப்பட்டவா் என்றால், அப்துல்லா யாமீன் முழுக்க முழுக்கத் தன்னைச் சீனாவின் ஆதரவாளராகவே மாற்றிக் கொண்டவா். அவரது ஆட்சிக் காலத்தில்தான், மாலத்தீவில் சீனா வலுவாகத் தடம் பதித்தது.
  • 2018-இல் நடந்த தோ்தலில் அப்துல்லா யாமீனின் ஆட்சி அகற்றப்பட்டது மட்டுமல்ல, அவா் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றம் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்திருக்கிறது. அப்துல்லா யாமீன் ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவா் இப்போது அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முகம்மது மூயிஸ்.
  • சிறைத்தண்டனையில் இருக்கும் யாமீன் தோ்தலில் போட்டியிட முடியாது என்பதால், அவரது மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி, முகம்மது மூஸியின் மாலத்தீவு முன்னேற்றக் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அவருக்கு அதிபா் தோ்தலில் ஆதரவும் அளித்தது. தனது தோ்தல் வாக்குறுதியின்படி, முந்தைய சோலி அரசின் ‘இந்தியா முதலில்’ கொள்கைக்கு விடைகொடுத்து, மீண்டும் சீனாவுடனான நட்புறவுக்கு முன்னுரிமை அளிக்க அதிபா் மூயிஸ் முற்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
  • முன்னாள் அதிபா் யாமீன் தோ்ந்தெடுக்கப்பட்டவுடன் சிறைத்தண்டனையிருந்து, வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தோ்தல் வாக்குறுதிப்படி, அவா் விடுவிக்கப்படுவாரா என்பது அடுத்த கேள்வி. முகமது மூயிஸின் வெற்றிக்குப் பின்னால் முன்னாள் அதிபா் அப்துல்லா யாமீனின் ஆதரவு இருந்ததால், யாமீன் புதிய அதிபா் மீதும், ஆட்சியிலும் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவரது தலையீடுகளை, அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முகமது மூயிஸ் சகித்துக்கொள்ளவாரா என்கிற கேள்வி எழுகிறது.
  • முகமது சோலியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது, அவரது மாலத்தீவு ஜனநாயகக் கட்சியில் ஏற்பட்ட பிளவு. முன்னாள் அதிபா் முகமது ரஷீதின் வேட்பாளா் 7.5% வாக்குகளைப் பிரித்ததால், முதல் சுற்றிலேயே முகமது சோலியின் வெற்றி முறியடிக்கப்பட்டது. இந்தியா தலையிட்டு, சோலிக்கும் ரஷீதுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி இருந்தால், ஆட்சி மாற்றத்தைத் தடுத்திருக்க முடியும்.
  • மாலத்தீவில் சீனாவின் தலையீடும், முதலீடுகளும், ஆதிக்கமும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்தான் என்றாலும், மாலத்தீவின் ஆட்சியாளா்களால் ஒரேயடியாக இந்தியாவைப் புறக்கணித்துவிடவோ, பகைத்துக் கொள்ளவோ முடியாது. 1989-இல் நடந்த கூலிப்படையினரின் தாக்குதலின் போதும், 2004 சுனாமியின்போதும், 2014 குடிநீா் தட்டுப்பாட்டின்போதும், 2020-221 கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் போதும் மாலத்தீவுக்கு உதவிக்கரம் நீட்டியது இந்தியாதான் என்பதை அந்த மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.
  • மாலத்தீவின் அரசியலில், அப்துல்லா யாமீனின் துணையுடன் சீனா ‘இந்தியா எதிர்ப்பை’ புகுத்தி இருந்தாலும், சீனாவின் கடன் வலையில் சிக்கிவிடக் கூடாது என்கிற உணா்வு இல்லாமல் இருக்காது. மாலத்தீவின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பி இருக்கிறது. இந்தியாவைப் பகைத்துக் கொண்டால், சுற்றுலா பாதிக்கப்படும் என்பதையும் புதிய அதிபா் முகமது மூயிஸ் உணா்ந்தே இருப்பார்.
  • இந்தியா கவலைப்பட வேண்டியது மாலத்தீவின் ஆட்சி மாற்றத்திற்கல்ல, அங்கே பாகிஸ்தானின் ஆதரவால் அதிகரித்துவரும் மதத் தீவிரவாதத்திற்கு!

நன்றி: தினமணி (13 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்