TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளின்பொதுப் போக்குவரத்து வசதிகள் விரைவில் முழுமை பெறட்டும்!

February 17 , 2021 1425 days 547 0
  • 2020 நிலவரப்படி, நாட்டில் உள்ள பொதுப் பேருந்துகளில் 7%-க்கும் குறைவான பேருந்துகளில் மட்டுமே சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கான முழுமையான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள், இது நம்முடைய அக்கறையின்மையையே எடுத்துக் காட்டுகின்றன.
  • 25% பொதுப் பேருந்துகளில் அத்தகைய வசதிகளை வழங்குவதற்கு ஜூன் 2022-ஐ அரசு நிர்ணயித்திருந்த நிலையில், அந்த இலக்கு அடையப்படுமா அல்லது மேலும் தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
  • பொதுப் போக்குவரத்து என்பது மாற்றுத் திறனாளிகளையும் உள்ளடக்கியது என்பதை அவர்களுக்கான வசதிகளைச் செய்துகொடுப்பதன் வாயிலாகவே உறுதிப்படுத்த முடியும்.
  • ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையானது, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் வாயிலாக ஜனவரி மாதத்தில் அளித்துள்ள விவரங்களின்படி, இந்தியாவில் உள்ள 10,175 பொதுப் பேருந்துகளில் அதாவது 6.9% பேருந்துகளில் மட்டுமே சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
  • மாநகரங்களுக்கிடையே ஓடும் 1.02 லட்சம் அரசுப் பேருந்துகளில் 0.2% பேருந்துகளும் 44,768 நகர்ப்புறப் பேருந்துகளில் 22.3% பேருந்துகளில் மட்டுமே சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.
  • நாடு முழுவதும் 1.47 லட்சம் பேருந்துகள் மாநில போக்குவரத்துக் கழகங்களால் நடத்தப்பட்டுவருகின்றன. அவற்றில் 42,169 பேருந்துகளில் (28.6%) இத்தகைய வசதிகள் பகுதியளவில் செய்யப்பட்டிருக்கின்றன.
  • கடந்த மார்ச் 2018-க்குள் நாடு முழுவதும் உள்ள பொதுப் பேருந்துகளில் 25% சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கான முழுமையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
  • அதைச் செய்துமுடிக்க முடியாத நிலையில், அந்த இலக்குக்கான காலக்கெடு ஜூன் 2022-க்குத் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் விவரங்கள், தள்ளிவைக்கப்பட்ட இந்தக் காலக்கெடுவுக்குள்ளும் இலக்கை அடைய வாய்ப்பில்லை என்பதையே உணர்த்துகின்றன.
  • பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்திலும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்துவோருக்கான முழுமையான வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்பதும் இந்த இலக்கின் ஒரு பகுதியாகும்.
  • ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் சரிவுப் பாதை வசதிகள் செய்துதரப்பட்டிருந்தாலும் பேருந்து நிலையங்களைப் பொறுத்தவரை இன்னும் இது முழுமையாகச் செயல் வடிவம் பெறவில்லை.
  • ‘‘தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைப் போல மாதாந்திர உதவித்தொகையாக ரூ.3,000 வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியார் துறையிலும் 5% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்'' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகத்தில் நடந்துவரும் மாற்றுத் திறனாளிகளின் போராட்டங்களே அரசின் கவனத்தை இன்னும் ஈர்க்கவில்லை.
  • மாற்றுத் திறனாளிகள் அரசு, தனியார் வேலைவாய்ப்புகளைப் பெற்றாலும் அவர்களுக்குப் பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லையென்றால், எப்படிப் பணியிடங்களுக்குச் செல்ல இயலும்?
  • பொதுப் போக்குவரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை முழுமையாக அளிப்பது தமது பெரும் பொறுப்பு என்பதை மாநில அரசுகளும், போக்குவரத்துக் கழக நிர்வாகங்களும் உணர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்