TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகள் நலன்

December 3 , 2023 212 days 198 0
  • எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 2010ஆம் ஆண்டு. சேப்பாக்கம் மைதானத்தின் பக்கவாட்டில் மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அங்கு சென்று செய்தி சேகரித்துவிட்டு வாருங்கள் என்று நான் வேலை பார்த்த வார இதழின் ஆசிரியர் என்னை அனுப்பினார். மாற்றுத்திறனாளிகள் கரிசனம் காட்டப்பட வேண்டியவர்கள் என்ற அளவில்தான் எனது புரிதலும் அனுபவமும் அன்றைக்கு இருந்தன. போராட்டக்களத்துக்குச் சென்று பார்த்த போது, அது எனக்குள் பல சாளரங்களைத் திறந்தது. கண்பார்வையற்றோர், இளம்பிள்ளைவாத மாற்றுத்திறனாளிகள், வாய் பேச முடியாதோர் ஆகியோரை மட்டுமே மாற்றுத்திறனாளிகள் என நினைத்திருந்த எனக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • தவழும் மாற்றுத்திறனாளிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் சவால் கொண்டோர், உயரம் தடைபட்டோர், செரிபரல் பால்சி, தலசீமியா, தசைத்திறன் குறைபாடு கொண்டோர் என்று நூற்றுக்கணக்கான வகைப்பாடுகளை அங்கு கண்டேன். மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம்-1995இன்படி (தற்போது மாற்றுத்திறனாளிகளின் உரிமைச்சட்டம்-2016 என்று மாற்றப்பட்டுள்ளது) அவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் வழங்கப்பட வேண்டிய 3% இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தவும் (தற்போது இது 4% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது), 9,000 பின்னடைவுக் காலியிடங்களை (இன்றைய நிலையில் சுமார் 20,000க்கும் மேல்) நிரப்ப வேண்டும், ரயில்களில் மாற்றுத்திறனாளிகளின் பெட்டியில் ஏமாற்றுத்திறனாளிகள் (!) ஆக்கிரமிப்பதைத் தடுக்க வேண்டும் என்பன முதலான எளிய கோரிக்கைகளுக்காக அம்மக்கள் போராடிக்கொண்டிருந்தனர். அந்த செய்தியை எனது வார இதழில் ஒரு பக்கம் அளவுக்கு இடம்பெறச் செய்ய முடிந்தது. ஆனால், எனது மனப்பக்கங்களில் ஓராயிரம் கேள்விகள்.
  • உண்மையிலேயே குடிமைச் சமூகம், மாற்றுத்திறனாளிகள்மீது கரிசனம் கொண்டி ருக்கிறதா? அல்லது அவ்வாறு பாசாங்கு செய்கிறதா? நம் வீடுகளில், பணியிடத்தில், பொது இடங்களில் நாம் அவர்களை சரிசமமாகவும் கண்ணியத்தோடும் தோழமை உணர்வோடும் நடத்துகிறோமா?

இழிவுபடுத்தலும் புனிதப்படுத்தலும்

  • அன்றிலிருந்து இன்றுவரை மாற்றுத் திறனாளிகள், ‘வேறுபட்ட ஒரு இனமாகவே’ பாவிக்கப்பட்டு வருவதுதான் உண்மை. கலையும் இலக்கியமும் சமூகத்தின் கண்ணாடிகள் என்பார்கள். அவை, மாற்றுத்திறனாளிகள் குறித்த புரிதலை எந்த அளவுக்குக் கொண்டி ருக்கின்றன? கடந்த காலத் தமிழ்த் திரைப்படங் களில் திக்குவாய் என்பது நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கான ஆதாரங் களுள் ஒன்று. “நகைச்சுவை கதாபாத்திரத்துக்கு என்ன செய்வது என்று யோசிக்காதீர்கள். ஒரு நடிகரை திக்குவாய்க்காரராகக் காட்டுங்கள். இல்லாவிட்டால், ஒருவரை காலை சாய்த்துச் சாய்த்து நடக்க வையுங்கள். ஒவ்வொரு முறை காலை விந்தி நடக்கும்போதும் ஒரு நையாண்டி ஓசை பின்னணியில் வரட்டும்” என்று கதை இலாகா விவாதங்களில் பேசிக்கொண்டிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
  • 1980-90களில் வெளியான பல திரைப் படங்களில் மாற்றுத்திறனாளிகளின் உருவக்கேலி நகைச்சுவைகள் கொடூரமானவை. ‘பொற்காலம்’, ‘மொழி’ போன்ற திரைப்படங்கள் மாற்றுத்திறனாளிகள் குறித்த சமூகப்பார்வையை மாற்றியிருக்கின்றன. இது போன்ற விஷயங்கள் சற்று ஆறுதல் அளித்தாலும் நாம் செல்ல வேண்டிய தொலைவு அதிகம் என்பதை 'சுருக்’கெனெ குத்திக்காட்டும் நிகழ்வுகளும் இல்லாமலில்லை. அண்மையில் 'டிக்கிலோனா' என்ற படத்தில், ஊன்றுகோல் ஊன்றி நடக்கும் மாற்றுத்திறனாளியை, “என்னடா, சைடு ஸ்டாண்டு” என்று நடிகர் சந்தானம் அழைத்தது மாற்றுத்திறனாளிகள், வெகுமக்களின் அதிருப்திக்கு ஆளானது.
  • திரைப் பிரபலங்கள் முதல் அரசியல், இதர துறைப் பிரபலங்கள்வரை பலரும் இன்னும் காலாவதியான பழமொழிகள், சொலவடைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தியபாடில்லை. பொதுமேடைகளில், ’கண்ணிருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடராக…’; ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’; ‘நொண்டிச்சாக்கு’; ‘ஒப்புக்குச் சப்பாணியாக’; ’மனநிலை பிறழ்ந்தவன்போல’….என்றெல்லாம் எடுத்தாண்டு தங்கள் புலமையைக் காண்பிப்பது தொடர்கிறது. அதற்கு வரும் எதிர்ப்பையும் அச்சொற்களின் கனத்தையும் புரிந்துகொண்டு சிலர் வருந்துவதும் நடக்கிறது.
  • மாற்றுத்திறனாளிகளை அரசாங்கங்கள் எப்படிப் பார்க்கின்றன என்பது இங்கு மிக முக்கியமானது. உலகமெங்கும் உடல்திறன் சவால் கொண்டோரை, ‘ஊனமுற்றவர்’, ‘உடல்திறன் சவால் கொண்டோர்’, ‘ஊனமடைந்தோர்’, ‘சிறப்புத்தேவைகள் உடையோர்’ என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால், 2014-15 வாக்கில் மத்திய அரசு, அவர்களை ‘தெய்வாம்சம் பொருந்தியவர்கள்’ (திவ்யாங் ஜன்) என்று அழைக்கத் தொடங்கியது. இன்றளவும் மாற்றுத்திறனாளிகளின் கடும் கண்டனத்துக்கு ஆளாகும் சொல் அது. ’உடலில் ஏற்படும் ஊனம் என்பது புனிதமானதோ, கொண்டாடப்படவேண்டிய விஷயமோ அல்ல… அது, புரிந்துகொண்டு தோள் கொடுக்கப்படவேண்டிய சிறப்புத்தேவை’ என்பதுதான் மாற்றுத்திறனாளிகளின் பார்வை.

அகப்படாத அணுகல்

  • மாற்றுத்திறனாளிகளுக்கான நிதிச்சேவையை அளிக்கும் வங்கித்துறையில்கூட இன்னும் ‘அணுகத்தக்க நிலை’ இல்லை என்பதே கவலையளிக்கும் யதார்த்தம். பிரெய்லி அறிவிப்புப் பலகைகள், வளர்ச்சி தடைபட்டோருக்கான உயரத்தில் ஏ.டி.எம். இயந்திரங்கள், மாற்றுத் திறனாளிகளின் இடத்தில் தங்களை வைத்துப் பார்க்கும் கனிவான சேவை அளிக்கும் அலுவலர்கள் என்று பல்வேறு அம்சங்களில் கோரிக்கைகள் நிலுவையில் இருக்கின்றன.
  • ரயில் போக்குவரத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் வசதியான ஒன்று. ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளில் அவர்கள் மட்டுமே பயணம் செய்வதை உறுதி செய்ய தொழில்நுட்பரீதியிலோ, சட்டரீதியிலோ எவ்வித மான முன்னெடுப்பும் இல்லாமல் இருக்கிறது. இன்றும் நீங்கள் அத்தகைய பெட்டிகளில் மாற்றுத் திறனாளி அல்லாதோர் ஒய்யாரமாகப் பயணம் செய்வதை வேதனையோடு பார்க்க முடியும்.

முன்னுதாரண மாநிலங்கள்

  • ஒப்பீட்டளவில் சில மாநில அரசுகள், மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் முற்போக்காகவும் கனிவுடனும் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இதிலும் நாட்டுக்கே தமிழகம்தான் வழிகாட்டியாக இருக்கிறது என்பது நமக்குப் பெருமை. தமிழகத்தின் சமூகநலத் துறையின்கீழ் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தை 1980களில் உருவாக்கினார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். 2008ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக ஒரே நாளில் 9 அரசாணைகளை வெளியிட்டார். 2011இல் நாட்டிலேயே முதன்முறையாக ‘மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை’ தனித் துறையாகவே உருவாக்கிவிட்டார். துறைச்செயலர், ஆணையர் (முதல்வரே துறைத் தலைவர்) என்று தொடங்கி சுமார் 400 ஊழியர்களை உள்ளடக்கியதாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இயங்கிவருகிறது. .
  • அவற்றுள் முக்கியமானது மாற்றுத் திறனாளிகள், அரசு அலுவலகங்களுக்கு 15 நிமிடங்கள் தாமதமாக செல்லவும், வேலை நேரம் முடிவடைவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக வீட்டுக்குப் புறப்பட்டுச் செல்லவும் அனுமதியளித்ததும் ஆகும். அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடை ஒதுக்கீட்டில் 5%ஐ மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்குவதும் தற்போதைய தமிழக அரசால் அரசாணையாக வெளியிடப்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, 2006இல் உருவாக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியம், 21 உறுப்பினர்களுடன் இயங்கிவருகிறது. இதன் தலைவராக, சமூக நலத் துறை அமைச்சர் செயல்பட்டுவருகிறார். அதேபோல, முதல்வர் தலைமையில் ஒரு ஆலோசனைக் குழுவும் இயங்கிவருகிறது.
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஓர் ஆணையர் பதவி உண்டு. இது தவிர, மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016இன்படி மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இவ்விரு பதவிகளையும் ஒருவரே (ஜெசிந்தா லாசரஸ் ஐ.ஏ.எஸ்) கவனித்துவந்தார். இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கன்னிப்பேச்சில் "தனி ஆணையர் தனியாகவே வேண்டும். மாற்றுத்திறனாளி ஒருவரையே அந்த ஆணையர் பணியிடத்தில் நிரப்ப வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் ஆணையர் பதவி, அத்துறையின் இயக்குநர் பதவியாக மாற்றப்பட்டுவிட்டது. உரிமைகள் ஆணையர் பதவி தனியாக உருவாக்கப்பட்டு, ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப. அந்தப் பதவியை வகித்துவருகிறார். அடுத்தபடியாக அவர் மத்திய அரசின் உணவுக்கழகத்தின் நிர்வாக இயக்குநராகப் பதவியேற்க இருப்பதால் அது, காலியாக ஆக இருக்கிறது. அப்பதவியில் மாற்றுத் திறனாளி ஒருவரையே நியமிக்க வேண்டும் என்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரமிது.
  • மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுத் துறையில் சிறப்பு அறிவு அல்லது அனுபவம் கொண்டவர்களை இப்பதவியில் அமர்த்தலாம் என்கிறது மாற்றுத்திறனாளிகள் சட்டம். இவ்விஷயத்தில் நாகாலாந்து அரசு, நமக்கு முன்னுதாரணமாக செயல்பட்டுவருகிறது. சிவில் நீதிமன்றத்தின் அதிகாரம்கொண்ட ஆணையமாக மாற்றுத்திறனாளிகள் ஆணையம் உருவெடுத்து செயல்படும்போது மாற்றுத்திறனாளிகளின் நலனில் புது வெளிச்சம் பாயும் என எதிர்பார்க்கலாம்.

பொதுவாழ்க்கையில் பங்களிப்பு

  • ஐ.நா.வின் மாற்றுத்திறனாளிகள் உரிமை உடன்படிக்கையின் (பிரிவு 29) சாரத்தைக் கூறுவது இங்கே பொருத்தமாக இருக்கும்: “மாற்றுத் திறனாளிகள் கண்ணியமான வாழ்க்கையைப் பெறவேண்டுமானால் அவர்களுக்குப் பொது வாழ்க்கையில் பங்களிப்பு தரப்பட வேண்டும்”.
  • இதனை உறுதிசெய்ய வேண்டுமென்றால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு, அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றிப் பணியாற்ற ஏதுவான தொழில்நுட்ப உதவிக்கரத்தை உருவாக்குதல், சிவில் சமூகத்துக்கும் படைப்புலகுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நாடு தழுவிய அளவில் விரிவான உரையாடல்களைத் தொடங்குதல் என்று 360 டிகிரி கோணத்திலும் பணியாற்ற வேண்டியிருக்கும்.
  • டிசம்பர் 3: சர்வதேச மாற்றுதிறனாளிகள் நாள்

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்