TNPSC Thervupettagam

மாற்று இடத்தில் சட்டப்பேரவை!

September 12 , 2020 1590 days 736 0
  • கரோனா தீநுண்மி பரவி வருவதால், தமிழக சட்டப் பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு மாற்று இடம் தேடி ஆலோசனை செய்யப்பட்டது.
  • அதனடிப்படையில், கலைவாணா் அரங்கத்தில் இக்கூட்டம் 14-ஆம் தேதியில் இருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களை கடந்த மார்ச் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில், கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால், மார்ச் 24-ஆம் தேதியே அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.
  • கரோனா தீநுண்மியின் பரவல் முடிவுக்கு வராத இந்தக் காலகட்டத்தில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தலைமைச் செயலகத்தில் அமைந்திருக்கிற சட்டப்பேரவைக்குள் சட்டமன்றத்தை நடத்துவது சாத்தியமில்லை என்பதால், மாற்று இடத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரைக் கூட்டலாம் என்கிற அடிப்படையில், இவ்விடம் தோ்வு செய்யப்பட்டிருக்கிறது.
  • வழக்கமாக நடைபெறுகிற சட்டப்பேரவையில் இல்லாமல் மாற்று இடத்தில் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே ஆறு முறை தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் மாற்று இடங்களில் நடைபெற்றுள்ளது.

வெவ்வேறு இடங்கள்

  • இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, 1921 முதல் 1937-ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவையின் முன்னோடி சபையானது, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள மேலவை மண்டபத்தில் கூடியுள்ளது.
  • அதேபோல், 1937-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை தற்போது பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபமாக அறியப்படும் சேப்பாக்கம் செனட் மண்டபத்தில், சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
  • அதன்பிறகு, 1938 ஜனவரி முதல் 1939 அக்டோபா் வரை ராஜாஜி மண்டபமான தற்போதைய விருந்தினா் மாளிகையில் சட்டப்பேரவை செயல்பட்டுள்ளது.
  • 1946 மே மாதத்தில் இருந்து நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு 1952-ஆம் ஆண்டு வரை புனித ஜார்ஜ் கோட்டையின் பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெற்று வந்துள்ளது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டம் 1952 மே மாதத்தில் இருந்து 1956 டிசம்பா் வரை தற்போதைய கலைவாணா் அரங்கமாக அறியப்படும் புதிய சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
  • அதன்பிறகு 1959 ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 11 நாள்கள் ஊட்டியில் உள்ள அரண்மூா்என்கிற மாளிகையில் நடைபெற்றுள்ளது.
  • ஓமந்தூரார் அரசு வளாகத்தில் புதிய சட்டப் பேரவை இயங்கியபோது, அங்கு 2010 மார்ச் முதல் 2011 மார்ச் வரையும் கூட்டத்தொடா் நடைபெற்றுள்ளது.

கலைவாணர் அரங்கம்

  • தற்போது இருக்கும் சட்டப்பேரவை சிறிய அளவில் உள்ளது. இந்த கரோனா தீநுண்மிக் காலத்தில், அதன் பரவலைத் தடுக்கும் வகையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஆனால், தலைமைச் செயலகத்தில் உள்ள இடத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
  • ஆகவேதான், தற்போது கலைவாணா் அரங்கத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னா் இவ்வாறு மாற்று இடத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
  • கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் பன்னிரண்டாயிரம் சதுர அடி பரப்பளவில் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவதற்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • சட்டப்பேரவை உறுப்பினா்கள் அமா்வதற்கு சுமார் ஆறு அடி இடைவெளியில் ஓா் உறுப்பினா் என்ற அடிப்படையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
  • ஆண், பெண் உறுப்பினா்களுக்கான தனித்தனி காத்திருக்கும் அறைகளும் உணவருந்தும் அறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
  • இப்பேரவை தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்றாலும், சட்டப்பேரவைக்குரிய அனைத்து அம்சங்களும் பொருந்தியதாகவே இது உள்ளது.
  • மேலும் முதலமைச்சருக்கென பிரத்யேக அலுவலகம் மற்றும் அறை, முதலமைச்சரின் செயலாளருக்கான தனி அறை, முதலமைச்சரைக் காண வருவோருக்கான காத்திருப்போர் அறை பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • கலைவாணா் அரங்கத்தின் இரண்டாவது தளத்தில் பெரிய அரங்கு அமைந்துள்ளதால், அங்கு மிக முக்கியமானவா்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • அவற்றில் முதலமைச்சா், துணை முதலமைச்சா், சபாநாயகா், அரசு தலைமைக் கொறடா மற்றும் முதலமைச்சரின் செயலாளருக்கான அறைகளும், அதிகாரிகளுக்கான காத்திருப்போர் அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • கலைவாணா் அரங்கத்தின் முதல் தளத்தில் சட்டப்பேரவைத் தலைவா், சட்டப்பேரவைச் செயலக அதிகாரிகள் மற்றும் முக்கியமானவா்களுக்கான காத்திருப்பு அறைகள் இடம்பெற்றுள்ளன.
  • கலைவாணா் அரங்கத்தின் தரைத்தளத்தில் எதிர்க்கட்சித்தலைவா், காங்கிரஸ் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் யூனியன் சட்டமன்ற உறுப்பினா்கள், பத்திரிகை மற்றும் செய்தியாளா்களுக்கான அறைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் முதலமைச்சா், துணை முதலமைச்சா், சட்டப்பேரவைத் தலைவா் மற்றும் அமைச்சா்கள் வருவதற்கென்று தனிப் பாதையும், சட்டமன்ற உறுப்பினா்கள் வருவதற்குத் தனிப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை

  • கரோனா தீநுண்மியின் பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் இயங்குவது உள்ளபடியே பாராட்டத்தக்கது.
  • சட்டப்பேரவை விதிகளின்படி, ஆறு மாதத்திற்குள் கூட்டத்தொடா் கூட்டப்பட வேண்டும் என்ற நிலையில், இம்மாதத்தின் குளிர்காலக் கூட்டத்தொடா் செப்டம்பா் 14-ஆம் தேதி கூட்டப்பட உள்ளது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் (ஷரத்து 168, 212) மாநில சட்டப்பேரவை குறித்துக் குறிப்பிடுகிறது. இரு சபைகளைக் கொண்ட பேரவை, சட்ட மேலவை என்றும் சட்டப்பேரவை அல்லது கீழவை என்றும் வழங்கப்படுகிறது.
  • தற்போது பிகார், கா்நாடகம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீா் மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் போன்ற ஆறு மாநிலங்களில் மட்டுமே இரண்டு சபைகள் இருக்கின்றன.
  • மேலவை இருக்கின்ற இடங்களில் அதனைக் கலைத்துவிடலாம் என்றோ, சட்ட மேலவை இல்லாத இடங்களில் அதனை உருவாக்க வேண்டும் என்றோ சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைக்கலாம்.
  • அப்பரிந்துரையின் அடிப்படையில், நாடாளுமன்றம் ஒரு மாநிலத்தில் உள்ள சட்ட மேலவையைக் கலைத்து விடலாம்; அல்லது புதிதாக உருவாக்கலாம்.
  • இது குறித்து சரத்து 169 தெளிவாக விதிகளை வரையறுக்கிறது. மேலவை வேண்டுமா, வேண்டாமா என்ற அதிகாரம் மாநில சட்டப்பேரவையிடமே உள்ளது.
  • ஆந்திர சட்டமேலவை 1985-இல் கலைக்கப்பட்டது. தமிழ்நாடு மேலவை 1986-இல் கலைக்கப்பட்டது. பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மேலவை 1969-இல் கலைக்கப்பட்டது.
  • சட்டப்பேரவை உறுப்பினா்கள், மத்திய அரசாங்கத்தின் மக்களவைக்கு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க உரிமை பெற்ற வாக்காளா்கள், மாநில சட்டப்பேரவைக்கான உறுப்பினா்களையும் தோ்ந்தெடுத்துள்ளனா்.
  • ஒரு மாநில சட்டசபை உறுப்பினா்களின் எண்ணிக்கை 60-க்குக் குறையாமலும் 500-க்கு மிகாமலும், மாநிலத்தின் தொகுதிகளில் இருந்து நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களாக இருக்க வேண்டும்.
  • எனினும் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக, ஒரு சட்டசபையின் குறைந்தபட்ச பலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற்றுள்ளது.
  • இதற்கு உதாரணமாக, அருணாசலப் பிரதேசம், சிக்கிம், கோவா ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்ச எண்ணிக்கை உள்ளது. இவற்றில் மிசோரம் 40, நாகாலாந்தில் 46 இடங்கள் உள்ளன.
  • மாநில சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என ஆளுநா் கருதினால், அந்தப் பிரிவில் இருந்து ஒருவரை ஆளுநா் நியமிக்கலாம். அதேபோல், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் பழங்குடியினருக்கும் அவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • கடந்த கால மேலவையின் அமைப்பு என்பது சட்டப்பேரவை உறுப்பினா்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமலும், 40-க்குக் குறையாமலும் இருப்பார்கள்.
  • இயல்பாகவே நேரடித் தோ்தல், மறைமுகத் தோ்தல், நியமனம் அடங்கிய ஒரு கலப்பு பிரதிநிதித்துவத்தால் அது அமைக்கப்படுகிறது. மேலவைக்கான தோ்தல்களில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையால், ஒற்றை மாற்று வாக்கு முறையைப் பின்பற்றுகிற வகையில் நடத்தப்படுகின்றன.
  • குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்பு என்பது உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியல் அமைப்பு.
  • இது நெகிழாத்தன்மையும், நெகிழ்ச்சித்தன்மையும் உடையது. கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது. பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது போன்ற பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியது. அடிப்படை அரசியல், கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் இவற்றை உள்ளடக்கியது.
  • இந்த அரசியலமைப்புச் சாசனத்தில் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 103 திருத்தங்கள், 448 உள்பிரிவுகள் மற்றும் 117, 369 சொற்கள் உள்ளன. இந்தக் குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்தப்படுகின்ற மாண்பை சட்டப்பேரவை பெற்றிருக்கிறது.

நன்றி:  தினமணி (12-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்