- டெல்லியில் ‘லிவ் இன்’ உறவில் இருந்த பெண் ஒருவர், தன் காதலரால் கொல்லப்பட்டார். கொலைக்குப் பிறகு சடலத்தைத் துண்டுகளாக வெட்டி, வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டு அமைதியாக இருந்திருக்கிறார் அப்பெண்ணின் காதலர். வெகு நாட்களுக்குப் பிறகே இது கண்டறியப்பட்டது. இச்சம்பவத்தைக் குறித்து கருத்துகளை உதிர்ப்பதற்கு முன்னால், இதன் பின்னணி குறித்து நாம் அறிய வேண்டியது ஏராளம்.
உறவு துண்டிப்பு எனும் ஆபத்து
- வீட்டார் பார்த்து நடத்திவைத்த திருமண உறவுகளிலும்கூட, புதிய நெருங்கிய உறவினர்களே பெண்களுக்குப் பெரும்பாலும் அதிக துன்பத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆக, இந்தக் கொடூரங்களுக்குக் காரணமாக ‘லிவ் இன்’ உறவை மட்டும் சுட்டக்காட்டிவிட முடியாது. ‘லிவ் இன்’ உறவுக்குப் பெண்களின் துணிச்சல் காரணமா என்றால், இல்லை. துணிச்சல்காரப் பெண்கள், தங்கள் வழியைத் தாங்களே உருவாக்கிக்கொள்கிறார்கள்.
- பெண்கள் தங்கள் பேச்சை மீறினால், கோபித்துக்கொண்டு அவர்களுடனான எல்லா பரிமாற்றங்களையும் பெற்றோர் துண்டித்துக் கொண்டுவிடுகிறார்கள். இதனால் பிரச்சினைகள் ஏற்படும்போது, பெற்றோரின் உதவியைப் பெண்கள் நாட முடிவதில்லை. பெண்களுக்கு அநீதி நடக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோரும், உற்றார் உறவினரும் முதலில் எக்காரணம் கொண்டும் பெண்களுடனான தமது தொடர்புகளை முற்றிலும் துண்டித்துக்கொள்ளக் கூடாது.
- ஆண் - பெண் உறவு முறையில் குழந்தைப் பருவம் முதலே, ‘கணவர் வந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்’ என்கிற அதீத நம்பிக்கை பெண்கள் மனதில் வலிந்து விதைக்கப்படுகிறது. கணவர்=காவலர் என்பது ஒரு மாயை.எனவே, தாமாகத் தேடிய உறவாக இருந்தாலும் பெற்றோர் பார்த்துவைத்த உறவானாலும், எதிர்த்தரப்பில் இருப்பவர் இயல்பானவரா என முதலில் கணிப்பது மிகவும் அவசியம். இதற்கு அடிப்படை மனநலம் தெரிந்திருக்க வேண்டும்.
ஆளுமைக் குறைபாடுகள்
- மனநலக் கோளாறுகளில் பல நூறு வகைகள் உள்ளன. சில கோளாறுகள், நோயுற்ற மனிதரை மட்டும்தான் பாதிக்கும். ஆனால், நார்சிச ஆளுமைக் குறைபாடு (NPD), சமூக விரோத ஆளுமைக் குறைபாடு (ASPD) போன்றவை பிறரையும் ஆபத்துக்கு உள்ளாக்கும். ஒருவரின் மனநிலை எப்படிப்பட்டது என்பதைச் சில காலம் பழகிப் பார்த்துதானே கண்டறிய முடியும்.
- ஆனால், நம்முடைய திருமண முறை அதற்கு வாய்ப்பே அளிப்பதில்லை. பெண்களுக்கு மூளையில் சுரக்கும் ‘ஆக்ஸிடோஸின்’ எனும் தாய்மை ஹார்மோன், ஒருவருடனான பந்தத்தை மிக வலிமையாக-இறுக்கமாகப் பிணைக்கிறது. ஓர் உறவிலிருந்து சட்டென விட்டு விலக முடியாமல், பெண் மனதை இந்த ஹார்மோன் கட்டிப்போடுகிறது. இப்படிப்பட்ட ‘தவறான தகவமைப்பு ஒட்டுறவு’களுக்கு (Maladaptive attachment) உரிய சிகிச்சையின்றிப் பெண்களால் சுயமாய் இந்தச் சூழலில் இருந்து வெளியே வர முடிவதில்லை.
எதில் மாற்றம் தேவை?
- இவை எல்லாவற்றையும்விட, ‘நாலு விதமாகப் பேசும்’ ஆட்களுக்குப் பயந்து, பொருந்தாத உறவிலிருந்து வெட்டிக்கொண்டு வெளியேற முடியாமலும் பெண்கள் போராடுகிறார்கள். ‘என்ன சூழ்நிலையோ, அவ முடிவு... நாம் உறுதுணையாக இருப்போம்’ என்று ஆதரவாக யோசிக்காமல், ‘எப்போது குத்திக்காட்டிச் சிரிக்கலாம்’ என்ற பொது மனநிலைதான் பெண்கள் மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு முதன்மைக் காரணம்.
- ஏறக்குறைய இதே மனநிலைதான், சம்பாத்தியம் எனும் அளவுகோலைக் கொண்டு ஆண்களையும் அளவிடுகிறது. எப்போதும் தம்மை அனைவரும் மதிப்பதுபோல் நடந்துகொள்ள வேண்டுமே என்னும் பதற்றத்திலேயே ஆண்களை வைத்திருக்கிறது. இது ஆண்களை ஆதிக்க விரும்பிகளாக மாற்றிவிடுகிறது. நாம் நம் பண்பாட்டின் கூறுகள்தான். நம்மை அறியாமலேயே நம்மைச் சூழ்ந்திருக்கும் விழுமியங்களை நிறைவேற்றுவதற்காக நாம் தடுமாறிக்கொண்டிருக்கிறோம்.
- இந்த விழுமியங்கள் சரியானவையா, தேவையா என்றெல்லாம் நாம் யோசிப்பதில்லை. இவை ஒட்டுமொத்தமாக மாறினால்தான், இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு முழுமையாகச் சாத்தியப்படும். அந்த அடிப்படைகளை மாற்றாமல் பெண்கள், ‘லிவ் இன்’ உறவுகள் என ஏதாவது ஒன்றின் மீது பழியைத் திருப்பிவிடுவது, நிரந்தரத் தீர்வுக்கு நிச்சயம் வழி வகுக்காது.
நன்றி: தி இந்து (24 – 11 – 2022)