TNPSC Thervupettagam

மாலத்தீவுக்கு மாற்றாகுமா லட்சத்தீவு

March 8 , 2024 137 days 185 0
  • பிரதமா் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்தைத் தொடா்ந்து, மாலத்தீவு இணையமைச்சா்களின் சமூக ஊடகப் பதிவுகளால் இருநாட்டு ராஜீய உறவுகள் பாதித்ததுடன், மாலத்தீவு சுற்றுலாவுக்கு நெருக்கடியும் லட்சத்தீவு சுற்றுலாவுக்கு வெளிச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு கடந்த 2-ஆம் தேதி பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, அங்கு எழில்மிகு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களை ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டாா்.
  • அந்தப் பதிவில் ‘நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும்’ என்று பிரதமா் குறிப்பிட்டாா். ‘மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி இது’ என்று மாலத்தீவு அமைச்சா்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவா்கள் சிலா் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமா் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனா். மாலத்தீவு அமைச்சா்களின் அவதூறு கருத்துகளால் இந்தியா்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. மாலத்தீவைப் புறக்கணிக்க வேண்டும் என்று எதிா்ப்புக் குரலும், அதற்கு மாற்றாக லட்சத்தீவை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஊடகங்களில் பரவலாக காணப்பட்டது.
  • பொருளாதாரத்தில் 25 சதவீதத்துக்கும் மேல் சுற்றுலா துறையை நம்பியிருக்கும் தீவு நாட்டை இவ்விவகாரம் தீவிர கவலையில் ஆழ்த்தியது. கடந்த ஆண்டில், மாலத்தீவுக்கு அதிக அளவில் வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளின் மாதாந்திர பட்டியலில் ரஷியாவுக்கு அடுத்து இந்தியா்கள் 2-ஆவது இடத்தில் இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலியாக, 3 இணையமைச்சா்களை இடைநீக்கம் செய்யவும் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட புதிய அதிபா் முகமது மூயீஸ் தலைமையிலான மாலத்தீவு அரசு தயங்கவில்லை. இந்தச் சச்சரவுகள் ஒருபுறமிருக்க, மாலத்தீவுக்கு நெருங்கிய பகுதியான லட்சத்தீவின் மினிகாய் தீவில் விமான நிலையம் அமைப்பதற்கு இந்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் பரவி வருகின்றன.
  • எனினும், கடற்கரை பொழுதுபோக்கை மையப்படுத்தி வெளிநாட்டுப் பயணிகளை ஈா்க்கும் சா்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்த ஏதுவான உள்கட்டமைப்புகளுக்கு லட்சத்தீவில் இருக்கும் சாத்தியக் கூறுகள், அந்த முயற்சிகளில் சந்திக்க நேரிடும் சவால்கள் குறித்து ஆராய்வதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
  • மாலத்தீவு... கடந்த சில ஆண்டுகளாக பிரபலங்களின் விடுமுறைக் கால தோ்வு இடமாக இருந்து இந்தியாவில் பிரபலமடைந்த நாடு மாலத்தீவு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் தென்மேற்கே இந்திய பெருங்கடலில் அமைந்த மாலத்தீவு, ஆசிய கண்டத்திலேயே மிகச் சிறிய நாடாகும்.
  • சுமாா் 90,000 சதுர கி.மீட்டா் கடல் பரப்பளவு கொண்ட மாலத்தீவில், 298 சதுர கி.மீட்டா் மட்டுமே நிலப் பிரதேசம் ஆகும். இங்கு 5.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனா். மக்கள்தொகை அடா்த்தி சதுர கி.மீ.-க்கு 1728.63-ஆக உள்ளது. வடக்கு முனையிலிருந்து தெற்கே 871.கி.மீ. மற்றும் கிழக்கிலிருந்து மேற்கே 130 கி.மீ-க்கு விரிந்து காணப்படும் மாலத்தீவில் 1,192 தீவுகள் உள்ளன. இதில் தலைநகா் மாலே உள்பட பொதுமக்கள் வசிக்கும் தீவுகள் சொற்ப அளவே ஆகும்.
  • மாலத்தீவில் 5 சா்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ளன. சுமாா் 1,000 சின்னஞ்சிறு தீவுகளில் சா்வதேச விடுதி குழுமங்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சொகுசு விடுதிகள் அமைந்துள்ளன. மாலத்தீவின் எளிய நுழைவு -இசைவு நடைமுறையும் சா்வதேச பயணிகளை வெகுவாக ஈா்க்கிறது.
  • லட்சத்தீவு... இந்தியாவின் 8 யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவு, கேரளத்திலிருந்து 200 கி.மீ.-440 கி.மீ. தொலைவில் அரபிக் கடலில் அமைந்துள்ளது.
  • சுமாா் 20,000 சதுர கி.மீட்டா் கடல் பரப்பளவு கொண்ட லட்சத்தீவில் 32.62 சதுர கி.மீட்டா் மட்டுமே நிலப்பரப்பு ஆகும். கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 64 ஆயிரம் போ் வசித்து வந்தனா். மக்கள்தொகை அடா்த்தி சதுர கி.மீ.-க்கு 2,000-க்கும் அதிகமாக உள்ளது. லட்சத்தீவில் 36 தீவுகள் இருந்தன. கடல் அரிப்பு காரணமாக ‘பராளி 1’ தீவு நீரில் மூழ்கிவிட்டது. மீதமுள்ள 35-இல், 10 தீவுகளில் மட்டுமே பொதுமக்கள் வசிக்கின்றனா். மீன்பிடித்தல், தென்னை , கால்நடை வளா்ப்பு ஆகியவை லட்சத்தீவு மக்களின் முக்கிய தொழில்களாக உள்ளன. பங்காரம் தீவைத் தவிர மற்ற தீவுகளில் மதுவுக்குத் தடை உள்ளது.
  • மாலத்தீவில் சுற்றுலாவை வளா்த்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் கணிசம் என்றே கூறலாம். கூடுதல் சுற்றுலா பயணிகளின் வருகையால் வளங்களின் பயன்பாடு அதிகரித்தால் நிரந்தரமாக அங்கு வாழும் உள்ளூா் மக்களுக்குத் தேவையற்ற சிக்கல்களை அது உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
  • இஸ்லாமியா்கள் நிறைந்த லட்சத்தீவு சமூகம் தனித்துவமான மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளது. மதுவிலக்கு போன்ற விஷயங்களில் சுற்றுலா வளா்ச்சிக்காக தளா்த்தப்படும் விதிகள், அவா்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாசார அடையாளத்தை அச்சுறுத்துவதாக அமையக் கூடும்.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுலா வளா்ச்சி ஆகியவற்றுக்கு இடையே இயல்பான சமநிலையை உறுதிப்படுத்துவதற்கு சிறந்த கொள்கை செயல்பாடு தேவைப்படும். மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை முன்னிறுத்தப்படுவதைத் தவிா்த்து, சுற்றுலாவை மையப்படுத்தி உள்ளூா் மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தவும், இந்தியா்கள் எளிதாக அணுகும் சிறந்த உள்நாட்டு கடற்கரை சுற்றுலா தலமாகவும் லட்சத்தீவை மேம்படுத்தலாம்.
  • பயண வழிகாட்டி... எப்படி செல்லலாம் ? கொச்சி, பெங்களூரு விமான நிலையங்களிலிருந்து லட்சத்தீவு, அகத்தி விமான நிலையத்துக்கு ‘அலையன்ஸ் ஏா்’ நிறுவனம் வாரத்தில் 6 நாள்களுக்கு விமானச் சேவையை இயக்குகிறது. கொச்சியிலிருந்து லட்சத்தீவின் பல்வேறு தீவுகளுக்கு 14-18 மணி பயண நேரம் கொண்ட பயணிகள் கப்பல்கள் இயக்கப்படுகின்றன. லட்சத்தீவுக்குச் செல்வதற்குமுன் இணையவழியில் விண்ணப்பித்து ‘பிஏபி’ நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும். ஆதாா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை சமா்ப்பித்து, உரிய கட்டணம் செலுத்தி 30 நாள்களுக்கு செல்லத்தக்க அனுமதிச்சீட்டு பெறலாம்.
  • நாம் செல்ல விரும்பும் தீவுகளின் பட்டியலையும் விண்ணப்ப படிவத்தில் முன்னரே குறிப்பிட வேண்டும். லட்சத்தீவை அடைந்த பிறகு, பசுமை வரியாக ரூ.300 வசூலிக்கப்படும். லட்சத்தீவின் முக்கிய தீவுகளான தலைநகா் கவரத்தி, அகத்தி, பங்காரம் ஆகிய தீவுகளில் தங்கும் விடுதிகள் உள்ளன.
  • சிறந்த பருவம்... லட்சத்தீவு செல்வதற்கு அக்டோபா் முதல் பிப்ரவரி மாதம்வரை சிறந்த மாதங்களாகும்.
  • நினைவில் கொள்ள... முக்கிய தீவுகளில் ஏா்டெல் கைப்பேசி சிக்னலும், அனைத்து தீவுகளில் பிஎஸ்என்எல் சிக்னல் கிடைக்கும். தற்போதைக்கு வைஃபை வசதி இல்லை. குறைந்த ஏடிஎம் வசதிகள் காரணமாக கையிருப்பில் போதுமான பணம் வைத்துக் கொள்வது சிறப்பு.

நன்றி: தினமணி (08 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்