TNPSC Thervupettagam

மாவட்டப் பிரிவினையா, மறுவரையறையா… எது இன்றைய தேவை?

September 19 , 2019 1750 days 1243 0
புதிய வரவுகளும் குரல்களும்

· மாவட்டங்களைச் சிறிதாகப் பிரித்து, அதிகாரத்தையும் நிர்வாகத்தையும் பரவலாக்கியதில் தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலம் – குறிப்பாக, இரு திராவிடக் கட்சிகளுமே இந்தப் பெருமைக்கு உரியவை. ஆனால், பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் எந்த அளவுக்கு மக்களின் அபிப்ராயத்தை ஒட்டி அமைந்திருக்கின்றன?

· இந்த 5 ஆண்டுகளில் 85 புதிய வருவாய் வட்டங்கள், 11 வருவாய்க் கோட்டங்களைப் பிரித்த தமிழ்நாடு அரசு, தற்போது புதிதாக 5 மாவட்டங்களை உருவாக்குவதாக அறிவித்திருக்கிறது.

o விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி,

o திருநெல்வேலியிலிருந்து தென்காசி,

o காஞ்சியிலிருந்து செங்கல்பட்டு,

o வேலூரிலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை

என்று புதிய மாவட்டங்களைப் பிரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர். இதுதொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் முறைப்படி நடக்கவில்லை என்றும், சில அரசியல்வாதிகள் மட்டுமே பங்கேற்றார்கள் என்றும் புகார் சொல்கிறார்கள் மாவட்ட மக்கள்.

· புதிய மாவட்ட உருவாக்கத்தைப் பெரும்பாலானோர் வரவேற்றாலும், இன்னொரு பக்கம் எதிர்க் குரல்களையும் கேட்க முடிந்தது. “யாரைக் கேட்டு எங்க ஊரைப் புது மாவட்டத்துக்குத் தள்ளிவிட்டீங்க?” என்று சிலரும், “ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரிக்கிறபோது, அந்த மாவட்டத் தலைநகருக்கு அடுத்தபடியாக பெரியளவில் வளர்ச்சியடைந்த ஊரையே தலைநகரமாக்குகிறீர்களே... இதுவரையில் புறக்கணிக்கப்பட்ட ஊர்களுக்கு என்ன நியாயம் செய்யப்போகிறீர்கள்?” என்று சிலரும் கேட்டார்கள்.

· பழைய, புதிய மாவட்டத் தலைநகரங்களுக்குச் சமதொலைவில் இருப்பவர்கள், பழைய மாவட்டத்திலேயே தங்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். மதுரையிலிருந்து தேனி மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, உசிலம்பட்டிக்காரர்கள் “மதுரையுடன்தான் இருப்போம்” என்று எப்படிப் போராடினார்களோ, அதேபோன்ற போராட்டம் இப்போது திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன்கோவில் வட்டாரத்தில் தீவிரமடைந்திருக்கிறது. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, கடை வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியதும், “திருநெல்வேலியோடு சேர்க்க முடியாது என்றால் எங்களைத் தனி மாவட்டமாக அறிவித்துவிடுங்கள்” என்று அவர்கள் வலியுறுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

· திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிற ஆலங்குளத்திலிருந்து ஒரு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அதில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிற இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. “நாங்கள் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கிறோம், மாவட்டத்தை மட்டும் ஏன் தென்காசியில் சேர்க்கிறீர்கள்? திருநெல்வேலியில் 32 கல்லூரிகள் இருக்கின்றன. தென்காசியில் இருப்பதோ வெறும் இரண்டே இரண்டு கல்லூரிகள். இப்படி இதுவரையில் புறக்கணிக்கப்பட்ட ஒரு நகரோடு எங்களை ஏன் சேர்க்கிறீர்கள்?”

மாவட்டப் பிரிவினை vs மாவட்ட சீரமைப்பு

· தற்போதைய மாவட்டப் பிரிவினை என்பது நிர்வாகத்துக்கும், மக்களுக்கும் வசதியாகத்தான் அமையும் என்றாலும், இந்தப் பிரிவினைகள் முழுமையானவை அல்ல என்பதையே மக்களின் குரல்கள் எதிரொலிக்கின்றன.

· அதனால்தான் கும்பகோணம், கமுதி, மயிலாடுதுறை, விராலிமலை, ஓசூர், சங்கரன்கோவில் என்று நிறைய ஊர்களிலிருந்து புதிய மாவட்டக் கோரிக்கைகள் புறப்பட்டு வருகின்றன. கட்சிக்காரர்களில் ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காகப் புதிய மாவட்ட அமைப்பை உருவாக்குவதுபோல பொறுப்புள்ள தமிழக அரசு, மாவட்ட வரைபடங்களை இஷ்டத்துக்கு உருவாக்கிவிட முடியாது; கூடாது.

· எனவே, எப்படிப் பார்த்தாலும், மாவட்டப் பிரிவினைகளைவிட, மாவட்டச் சீரமைப்பு அல்லது மறுவரையறையே சரியானதாக இருக்கும். இதன் மூலம்தான் இதுநாள் வரையில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஓரளவுக்கேனும் நியாயம் செய்ய முடியும்.

· ஆதி மதுரை என்று வரலாற்றுபூர்வமாக நிரூபணமாகியும்கூட, நம்முடைய கீழடி சிவகங்கை மாவட்டத்திலேயே இருக்கிறது. தற்கால மதுரை மாவட்ட எல்லையில் இருந்து வெறும் 3 கிமீ தள்ளி உள்ள இந்த ஊரை மாவட்ட மறுவரையால்தான் மதுரைக்குக் கொண்டுவர முடியுமே தவிர, பிரிப்பால் அல்ல.

· தெலங்கானாவில் ஆரம்பத்தில் வெறும் 5 மாவட்டங்களே இருந்தன. அதனை 31 மாவட்டங்களாகப் பிரித்தது அம்மாநில அரசு. அதன் தொடர்ச்சியாக ஆந்திராவில் இருந்த 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாகப் பிரிக்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

· தமிழகத்தின் மக்கள்தொகை 8 கோடியைத் தாண்டிவிட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுமார் 10 முதல் 15 லட்சம் மக்கள் தொகைக்குள் வருகிறபடி 50 மாவட்டங்களாகப் பிரிப்பது நிச்சயம் பலன் தரும்.

கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை

· ஆனால், மறுபடியும் அரசியல், சாதி கண்ணோட்டத்தை முன்னெடுக்காமல் அந்தந்தப் பகுதி மக்களின் கருத்துக்களை முழுமையாகக் கேட்டு, அவர்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்து இதைச் செய்ய வேண்டும்.

· குறிப்பாக, மாவட்டத் தலைநகரை அணுகுவதில் உள்ள தொலைவு, சட்டமன்ற – மக்களவைத் தொகுதி வரையறைகளில் உள்ள ஒற்றுமை ஆகியன முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்; வட்டங்களின் வருவாய் மட்டும் அல்ல.

· தமிழ்நாடு மாவட்டங்களை மறுவரையறை செய்வதற்கென்று ஒரு ஆணையத்தை அமைத்து, அதன்படி மாவட்டங்களை மறுவரையறை செய்வது பலன் தரும்.

· எப்படி புதிய மாநிலங்கள் உருவாகிறபோது மத்திய அரசு, மாநில நிர்மாணத்துக்கென கூடுதல் நிதி ஒதுக்கியதோ அதேபோல, புதிய மாவட்ட உருவாக்கத்தால் பாதிக்கப்படும் மக்களுக்குச் சிறப்புத் திட்டங்களின் மூலம் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டியதும் தமிழக அரசின் கடமை.

· எதையும் ஆக்கபூர்வமாக, மக்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் செய்வது என்றால் இதுதான் சரி. இல்லையென்றால், வாயுள்ள பிள்ளைகள் மட்டுமே இங்கே பிழைக்கும்.

நன்றி : இந்து தமிழ் திசை (19-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்