TNPSC Thervupettagam

மாஸ்க்வா – மிரியா: பெருமிதங்களின் அழிவு

April 26 , 2022 833 days 445 0
  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதலில் உக்ரைன் பெரும் அழிவுக்கு உள்ளாகியிருப்பதையும், பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பேரிடருக்கு உள்ளாகியிருப்பதையும் நாம் அறிவோம்.
  • எல்லாப் போர்களிலும் எதிர்த் தரப்பின் சில முக்கியமான இலக்குகளைக் குறிவைப்பதுபோலவே இந்தப் போரிலும் சில இலக்குகள் குறிவைத்துத் தகர்க்கப் பட்டிருக்கின்றன.
  • அப்படி இரு நாடுகளும் தங்கள் பெருமிதங்களாகக் கருதிவந்த இரு வாகனங்களின் அழிவு இரு நாடுகளிலும் பெரும் பேச்சை உருவாக்கியிருக்கிறது. மாஸ்க்வா - மிரியா எனும் அந்த இரு வாகனங்களின் கதையை இங்கே பார்ப்போம்!

கருங்கடல் மோஸ்க்வா

  • ரஷ்யாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று ‘மாஸ்க்வா’ (Moskva). மிகப் பிரம்மாண்டமான போர்க் கப்பல் இது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது.
  • அப்போது உக்ரைன் மீதான கடல் வழித் தாக்குதலை மாஸ்க்வாதான் முன்னின்று  நடத்தியது. இந்நிலையில் மாஸ்க்வா கப்பல் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று கருங்கடலில் மூழ்கியது.
  • ‘தீ விபத்து ஏற்பட்டதால், கப்பல் மூழ்கியது’ என ரஷ்யா தெரிவித்தது. ‘நாங்கள்தான் ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்தோம்’ என அறிவித்தது உக்ரைன்.
  • பெரும் படை பலம் கொண்ட ரஷ்யாவின் பெருமைக்குரிய ஒரு போர்க் கப்பல், படை பலம் அற்ற, பெரும் அழிவுக்குள்ளான உக்ரைனால் தகர்க்கப்பட்டது என்கிற செய்தி உடனே சர்வதேச கவனம் பெற்றது.
  • ரஷ்யா இந்த நிகழ்வைத் தனக்கு நேர்ந்த பெரும் அவமானமாகக் கருதியது. ரஷ்ய ஊடகம் ஒன்று ‘மாஸ்க்வா மூழ்கியதன் மூலம் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது’ என அறிவித்தது என்றால், ரஷ்யர்கள் மாஸ்க்வாவை என்னவாகப் பார்க்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
  • ரஷ்யா எவ்வளவு பலம் கொண்டு உக்ரைனைத் தாக்கியபோதிலும், மாஸ்க்வாவின் இழப்பு உளவியல் ரீதியாக ரஷ்யாவைத் தடுமாறச்செய்துள்ளது.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யா சந்திக்கும் பெரும் இழப்பாக மாஸ்க்வா அழிப்பு பார்க்கப்படுகிறது. சமீபத்திய போரில் ரஷ்யா இழக்கும் இரண்டாவது போர் கப்பல் இது. முதல் போர்க் கப்பலான  ‘சாரடோவ்’ மார்ச்சில் உக்ரைனால் தாக்கப்பட்டது.

மாஸ்க்வாவின் தனிச் சிறப்பு

  • இன்று உக்ரைனால் வீழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் கப்பல், 1970களின் மத்தியில், அதாவது சோவியத் ஒன்றியக் காலகட்டத்தில் உக்ரைன் பிராந்தியத்தில் வைத்துதான் உருவாக்கப் பட்டது.
  • அமெரிக்காவுக்கு நிகராக தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும் நோக்கில் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட இக்கப்பல், 1980களின் மத்தியில் பயன்பாட்டுக்கு வந்தது.
  • அதிலிருந்து ரஷ்யாவின் படை பலத்தின் அடையாளங்களில் ஒன்றாக மாஸ்க்வா பார்க்கப் பட்டது.
  • அப்போது அதன் பெயர் ‘ஸ்லாவா’. சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பிறகு, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவைக் குறிக்கும் வகையில், அது மாஸ்க்வா எனப் பெயர் மாற்றப் பட்டது.
  • மாஸ்க்வா கப்பல் 610 அடி நீளம் கொண்டது. அதாவது இரண்டு கால்பந்தாட்ட மைதானத்தின் நீளத்துக்குச் சமமானது.
  • இதன் எடை 12,490 டன். எதிரிக் கப்பலை தாக்குவதற்கென்று 16 வல்கன் ஏவுகணைகள் இந்தக் கப்பலில் இருந்தன. 
  • தொலைதூர இலக்குகளையும் அருகமை இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் எஸ்-300எஃப், ஓஎஸ்ஏ - எம்ஏ ஏவுகணைகளும், ஒரு நிமிடத்தில் 5000 குண்டுகளை வெடிக்கும் துப்பாக்கிகளும் இதில் இருந்தன.  உலகின் பலம் மிக்க போர்க் கப்பல்களின் ஒன்றாக மாஸ்க்வா பார்க்கப்பட்டது.
  • 2008ஆம் ஆண்டு ஜார்ஜியாவுடனான மோதலில், 2014ஆம் ஆண்டு கிரைமியாவுடானான மோதலில், 2015இல் சிரியாவுடனான மோதலில் மாஸ்க்வாதான் முன்னின்றது.
  • 2014இல் கிரைமியாவை ரஷ்யா பலவந்தமாக இணைத்துக்கொண்டபோதே, உக்ரைன் சுதாரித்து விட்டது. அப்போதுதான் மோஸ்க்வாவை அழிக்கும் வகையில் ஏவுகணையை உருவாக்க உக்ரைன் முடிவுசெய்தது.
  • அந்த ஏவுகணையின் பெயர் ‘நெப்டியூன் - 2’. இந்த ஏவுகணையைப் பயன்படுத்திதான் தற்போது மாஸ்க்வாவை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
  • இந்தக் கப்பலில் வீரர்கள், அதிகாரிகள் என 400க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகக் கூறப் படுகிறது. இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் மாயமாகி உள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
  • இறந்தது அந்தக் கப்பலின் கேப்டன்தான் என்கிறது உக்ரைன். ஆனால், கப்பல் தாக்குதலில் இறந்தவர்கள் குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

கனவு விமானம்

  • ரஷ்யாவின் பெருமைமிகு வாகனங்களில் ஒன்றான கப்பலை இந்தப் போரில் இழந்தது என்றால்,  உக்ரைன் தன்னுடைய  பெருமிதங்களில் ஒன்றாகக் கருதிய பெரும் விமானத்தை இழந்திருக்கிறது.
  • உக்ரைனின் தன்னுடைய பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாகக் கருதிய சரக்கு விமானம் மிரியா (Mriya) என்று அழைக்கப்படும் அன்டோனோவ் ஏஎன் 225 (Antonov AN-225).
  • அடிப்படையில் இது ஒரு சரக்கு விமானம். ஆனால், உலகிலேயே பெரும் சரக்கு விமானம். பிப்ரவரி 27ஆம் தேதி ரஷ்யாவால் இது  உருக்குலைக்கப்பட்டது.
  • கீவ் நகரத்தில் உள்ள விமானத் தளத்தில் அவ்விமானம் நிறுத்தப்பட்டிருந்தபோது இந்தத் தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டது.
  • சோவியத் ஒன்றியம் 1960, 1970களில் விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்திவந்தது. அமெரிக்காவுக்குப் போட்டியாக செயல்பட்டுவந்த சோவியத் யூனியன், நவீன ரக செயற்கைக் கோள்கள், ராக்கெட்டுகள் உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது.
  • செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் பாகங்கள் ஓரிடத்தில் தயாரிக்கப்படும். பிறகு அவை மற்றோர் இடத்துக்குக் கொண்டுவந்து பொருத்தப்படும்.
  • அந்தப் பாகங்கள் எடை மிகுந்தவை. அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு கொண்டு செல்வது அவ்வளவு எளிதானதாக இல்லை.
  • இத்தகைய எடை மிகுந்த பாகங்களை ஏற்றிச் செல்வதற்கென்று தனியே ஒரு விமானத்தை உருவாக்க சோவியத் ஒன்றியம் திட்டமிட்டது.
  • உக்ரைன் நகரான கீவ்வைத் தலைமையிடமாகக் கொண்ட அன்டோனோவ் நிறுவனம் இந்த விமானத்தை உருவாக்கும் பணியில் இறங்கியது. அப்படியாக உருவானதுதான் மிரியா.
  • மிரியா என்றால் ‘கனவு’ என்று அர்த்தம். 1988ஆம் ஆண்டு மிரியா செயல்பாட்டுக்கு வந்தது.
  • வீழ்த்தப்படும் வரை  உலகின் எடை மிக்க விமானமாக மிரியாதான் அடையாளப்பட்டு வந்தது. 290 மீட்டர் நீளம் கொண்ட இவ்விமானம் 250 டன் வரையில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன்கொண்டது.
  • மணிக்கு 800 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. மிரியா போலவே கூடுதலாக இரண்டு விமானங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது.
  • அதற்கான பணிகள் தொடங்கிய சமயத்தில்தான், சோவியத் ஒன்றியம் உடைந்தது (1991). அதையெடுத்து இந்த விமானம் உக்ரைன் வசம் வந்தது.
  • அப்படியாக உக்ரைனின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக இவ்விமானம் மாறியது. இப்படித் தனிச்சிறப்பு மிக்க விமானத்தைத்தான் ரஷ்யா தாக்கி அழித்தது.
  • உள்ளபடி சரக்கு விமானத்தை வீழ்த்துவதற்கான தேவை என்று ஏதும் ரஷ்யாவுக்கு இல்லை. ஆனால், உளவியல்ரீதியாக உக்ரைனைப் பலவீனப்படுத்த மிரியாவைப் பயன்படுத்திக் கொண்டது ரஷ்யா. ‘எங்கள் கனவு விமானத்தை ரஷ்யா அழித்திருக்கலாம்.
  • ஆனால் வலிமையான, சுதந்திரமான உக்ரைன் எனும் எங்கள் கனவை ரஷ்யாவால் அழிக்க முடியாது’ என இதற்கு உக்ரைன் எதிர்வினையாற்றினாலும் எல்லா சோகங்களுக்கு மத்தியிலும் இந்தச் சோகமும் அதனைச் சூழ்ந்துகொண்டது உண்மை. ரஷ்யாவும் மாஸ்க்வாவின் அழிவால் அதே விதமான சோகத்துக்குள்ளானது.

நன்றி: அருஞ்சொல் (26 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்