TNPSC Thervupettagam

மின்சாரத்தை சேமிப்போம்

December 1 , 2023 231 days 172 0
  • மின்சாரம் இல்லாத உலகை இன்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு 1.5 சதவீதம். மக்கள்தொகை பெருக்கம், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, தொழிற்சாலை கட்டமைப்புகள், மருத்துவ வசதிகள் அதிகரித்தல் முதலிய காரணங்களால் இன்று மின்சாரப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • உலக அளவில் மின்சாரம் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கைத்தொழிலிலிருந்து, பெரிய தொழிற்சாலை வரை அனைத்தும் மின்சாரத்தையே நம்பியே இயங்கி வருகின்றன.
  • இந்தியாவில் நிலக்கரி, நீர், அணு,  காற்று, சூரிய சக்தி ஆகிய வளங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டில் 1950 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை,  நாட்டின் மின் உற்பத்தியில்  44 சதவீதத்தை பயன்படுத்திக் கொண்டது. அதைத் தொடர்ந்து தொழில், விவசாயத் துறைக்கு மின்சாரத்தின் தேவை அதிகரித்தது. வாக்குவங்கி அரசியலில், தேர்தல் காலங்களில் மின்சாரம் முக்கிய இடத்தைப் பிடித்து மக்களைக் கவரும்.
  • இவ்வாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை நம் நாட்டின் மின் நுகர்வு சுமார் 98,439 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்போது இந்தியாவின் மின்நுகர்வு 89,995 கோடி யூனிட்டுகளாக இருந்தது. 
  • அதே சமயத்தில், ஒரு நாள் அதிகபட்ச மின்விநியோகம், கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மின்விநியோகம் 215.88 ஜிகா வாட்டாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 241 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. இது நம் நாட்டின் மின்சார உற்பத்தி தன்னிறைவை எட்டியுள்ளதைக் காட்டுகிறது.
  • கோடை காலத்தில், நாட்டின் ஒரு நாள் அதிகபட்ச மின்தேவை 229 ஜிகா வாட்டாக இருக்குமென மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் மதிப்பிட்டிருந்தது. எனினும்,  கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 223.29 ஜிகாவாட்டாக இருந்த மின் நுகர்வு, ஜூலையில் 208.95 ஜிகாவாட்டாக இருந்து,  ஆகஸ்ட்  1-ஆம் தேதி ஒரு நாள் அதிகபட்ச மின் நுகர்வு 239.97 ஜிகாவாட்  என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
  • 2022 அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மின்நுகர்வு 11,394 கோடியாக இருந்த நிலையில், இவ்வாண்டின் இதே மாதத்தில் 13,894 கோடி யூனிட் (22 சதவீதம்) அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த அக்டோபர் மாத மின்நுகர்வு, தீநுண்மிப் பரவலுக்கு முந்தைய 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்த 11,279 கோடி யூனிட்டுகளை விட அதிகமாக பதிவாகியுள்ளது.
  • பரவலாக மழை பெய்ததன் காரணமாக நடப்பாண்டில் மார்ச் முதல் ஜூன் வரை நாட்டின் மின்நுகர்வு பாதிக்கப்பட்டிருந்தது. தொடர் பண்டிகைக் காலம் என்பதாலும், தொழில் நடவடிக்கைகள் அதிகரித்ததாலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாலும் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்  நம் நாட்டில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.
  • மேலும், கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் 174.44 ஜிகாவாட்டாக இருந்த மின்விநியோகம், 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் 186.90 ஜிகாவாட்டாகவும், இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் 221.62 ஜிகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.
  • இது நாட்டின் மின் தேவை, வருங்காலங்களில் அதிகரித்து நாட்டில் மின் பற்றாக்குறையை உருவாக்குமோ என்று அஞ்சப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் நம் நாட்டின் மின் நுகர்வு 13,894 கோடி யூனிட்டுகளாக உயர்ந்தது இதனை உறுதிப்படுத்துவது போலுள்ளது.
  • இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும்,  மதசார்பற்ற ஜனதாதள மாநில தலைவருமான குமாரசாமி, தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி   பெங்களூரிலுள்ள தன் வீட்டினை, அருகிலிருந்த மின்கம்பத்திலிருந்து சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளது தொடர்பாக அவர் மீது பெங்களூர் நகர மின்விநியோக நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு இந்திய மின்சார சட்டத்தின் பிரிவு 135-இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
  • அனுமதியின்றி 71 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியதாக பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் விதித்த அபராதத் தொகையான ரூ.68,526/-ஐ குமாரசாமி செலுத்தி விட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ள  குமாரசாமி அலங்கார பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனம் செய்த தவறு இது என்று தெரிவித்துள்ளார்.
  • இந்தியாவில் மின்சாரம் திருடுவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • மின்சாரச் சட்டம் 2003-இன் பிரிவு 135-இன்படி, ஒருவர் மின்சார கம்பிகளிலிருந்து மின்சாரத்தை திருடினாலோ,  மின்சார அளவீடு அல்லது மின்மாற்றிகளை சேதப்படுத்தினாலோ, மின்சார அளவீடு போன்ற உபகரணங்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய சாதனங்களை சேதப்படுத்தினாலோ, அங்கீகரிக்கப்படாத நோக்கங்களுக்காக மின்சாரத்தை பயன்படுத்தினாலோ அது மின்சார திருட்டு என வகைப்படுத்தப்பட்டு அது குற்றத் தண்டனையாக கருதப்படும்.
  • மின்சாரம் திருடுவதை தடுக்க ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவது ஒரே வழி. ஸ்மார்ட் மீட்டர் மின்சாரத் திருட்டை தடுக்க உதவும் முக்கிய சாதனமாகக் கருதப்படுகிறது. இது மின்பயன்பாட்டைத் துல்லியமாகக் கண்டறிந்து, மின் பயன்பாட்டு சந்தைக்கேற்ப விலையை நிர்ணயிக்கும் என்றும், மின்பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • வருங்காலத்தில் உலகம் சுற்றுச்சூழல் மாசாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும்  பாதிக்கப்படுவதை விட மின்சார தட்டுப்பாட்டால் அதிகம் பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய மின்பற்றாக்குறையைத் தவிர்க்க இப்போதே நாம் மின்சாரப் பயன்பாட்டை குறைப்போம்.

நன்றி: தினமணி (01 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்