TNPSC Thervupettagam

மியான்மரில் ராணுவம், எல்லையில் அகதிகள், இக்கட்டில் இந்தியா

April 9 , 2021 1208 days 488 0
  • மியான்மர், பிப்ரவரி 1 அதிகாலை. தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி (என்.எல்.டி) பதவியேற்கச் சில மணி நேரங்களே இருந்தன.
  • அப்போது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது. என்.எல்.டியின் தலைவர் ஆங் சான் சூச்சியும் கட்சியின் முன்னணியினரும் சிறை வைக்கப்பட்டார்கள்.
  • கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மக்கள் தெருவில் இறங்கிப் போராடிவருகிறார்கள். ராணுவத்தின் கரங்கள் சொந்த நாட்டு மக்களின் குருதியில் நனைந்திருக்கின்றன.
  • பல ஆண்டுகளாகவே மியான்மர் ராணுவத்தோடு இந்தியா அனுசரணையாக இருந்துவருகிறது. பிப்ரவரி மாதம்கூடத் தனது கவலையைப் பதிவுசெய்ததோடு நிறுத்திக்கொண்டது. ஆனால், மனிதநேய ஆர்வலர்கள் இந்தியாவிடம் இன்னும் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் போராட்டம்

  • ராணுவத்துக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் நீர்த்துப்போகுமென்று தளபதிகள் கருதினார்கள். அதற்குப் பல காரணங்கள். 1962-ல் ராணுவம் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
  • ஆட்சிக்கு எதிரான பெரிய போராட்டம் 1988-ல் தான் நடந்தது. அப்போது உயர்ந்துவந்த நட்சத்திரம்தான் சூச்சி. போராட்டம் ஒடுக்கப்பட்டது. சூச்சி சிறை வைக்கப்பட்டார்.
  • அடுத்து 2007-ல் புத்த பிக்குகள் ராணுவத்துக்கு எதிராகத் திரண்டனர். அந்த எழுச்சியும் ஒடுக்கப்பட்டது. 2011-ல் ஜனநாயகக் கீற்றுகள் தோன்றலாயின. 2012-ல் என்.எல்.டி எதிர்க்கட்சி ஆகியது; 2015-ல் ஆளுங்கட்சியாக உயர்ந்தது. எனினும் ராணுவம் ஆட்சியிலும் பங்கு வகித்தது.
  • சூச்சி ராணுவத்துக்கு வெகு இணக்கமாக நடந்துகொண்டார். இதனால், உலக நாடுகளின் நன்மதிப்பை இழந்தார். ஆனால், பெரும்பான்மை பாமா இனத்தவர் அவரைக் கொண்டாடவே செய்தனர். 2020-ல் நடந்த தேர்தலில் என்.எல்.டி இரண்டாவது முறையாக அமோக வெற்றிபெற்றது.
  • சூச்சிக்கு வெகுமக்கள் அளித்துவரும் ஆதரவு ராணுவத்தை அச்சுறுத்தியது. சூச்சி சர்வதேச ஆதரவை இழந்துவிட்டார் என்று ராணுவம் கணக்கிட்டது. மேலும், ராணுவ நுகத்தடிக்கு மியான்மர் மக்கள் பழக்கமானவர்கள்தானே என்றும் அது கருதியது.
  • ராணுவ ஆட்சியைக் கொண்டுவந்தது. ஆனால், அதன் கணக்கு பிசகிவிட்டது. கடந்த பத்தாண்டுகளாக வீசும் அரசியல் - பொருளாதாரச் சுதந்திரக் காற்றை, அது எவ்வளவு குறைவாக இருந்தாலும், இழப்பதற்கு மக்கள் சித்தமாக இல்லை. அவர்கள் போராடிவருகிறார்கள்.
  • இதுவரை 550-க்கும் மேற்பட்ட குடிமக்கள் தெருக்களில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • மேற்குலக நாடுகள், சூச்சியின் மீது விமர்சனங்கள் இருந்தபோதும், ஒரு ஜனநாயகப் படுகொலையை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. அவை மியான்மரின் மீது பொருளாதரத் தடைகளை விதிக்கின்றன.

அண்டை நாடுகளின் ஆதரவு

  • இந்தத் தடைகளை மியான்மர் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், அதற்கு அண்டை நாடுகளின் ஆதரவு இருக்கிறது. மார்ச் 27 அன்று தளபதிகள் வருடாந்திர ராணுவ தின அணிவகுப்பை நடத்தினார்கள்.
  • இதில் இந்தியப் பிரதிநிதி கலந்து கொண்டார். வேறு சில நாடுகளும் பங்கேற்றன. அவை: பாகிஸ்தான், வியட்நாம், ரஷ்யா, சீனா, வங்கதேசம், லாவோஸ், தாய்லாந்து.
  • இவற்றுள் கடைசி நான்கு நாடுகளும் இந்தியாவும், மியான்மரின் எல்லையைப் பகிர்ந்துகொள்பவை. அணிவகுப்பு நடந்த அதே நாளில் மியான்மரின் பல்வேறு இடங்களில் ஏழு குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிராயுதபாணிகள் கொல்லப்பட்டனர்.
  • உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டதைப் பல நாடுகள் விமர்சித்தன. இந்தியா, உள்நாட்டிலும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிவந்தது.

எல்லையில் அகதிகள்

  • மியான்மரில் மூன்றில் ஒருவர் சிறுபான்மையினர். ஷான், கரீன், ரக்கைன், சின், கச்சின், ரோஹிங்கியா முதலான இனத்தவர்கள். இவர்கள் மிகுதியும் மியான்மரின் எல்லைப்புற மாநிலங்களில் வசிக்கிறார்கள்.
  • இவர்களில் ரோஹிங்கியா இனத்தவர் 13 லட்சம் பேர் வங்கதேசத்தில் அகதிகளாக வாழ்கிறார்கள். இப்போதைய ராணுவ ஆட்சிக்குப் பிறகு மியான்மரின் எல்லைப்புற மாநிலங்களின் சிறுபான்மையினர் தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் அடைக்கலம் தேடி அகதிகளாக வருகின்றனர்.
  • இந்திய-மியான்மர் எல்லையோரம் அமைந்திருப்பவை மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்கள். மியான்மரிலிருந்து வரும் அகதிகளை நல்ல வார்த்தை சொல்லித் திருப்பி அனுப்பி வைத்துவிடுமாறு ஒன்றிய அரசு இந்த அண்டை மாநிலங்களைக் கேட்டுக்கொண்டது.
  • இதை ஏற்பதில் மிசோரம் அரசுக்குத் தயக்கம் இருந்தது. மியான்மரிலிருந்து அகதிகளாக வரும் சின் இனத்தவர்களும் மிசோரம் மக்களும் திபெத்-பர்மீய வம்சாவளியினர். 1938-ல் பர்மா தனி நாடாகும் வரை ஒரே பிரிட்டிஷ்-இந்தியக் குடையின் கீழ் வசித்தவர்கள்.
  • இப்போதும் மண உறவுகளாலும் வணிக உறவுகளாலும் பிணைக்கப்பட்டவர்கள். ஆகவே, அவர்களுக்குப் புகலிடம் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று மிசோரம் வலியுறுத்தியது. இதுவரை மிசோரமுக்கு 1,000 அகதிகள் வந்திருப்பார்கள்.
  • மணிப்பூர் அரசு மார்ச் 26 அன்று அகதிகளை அனுமதிக்க மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மார்ச் 29 அன்று அதைப் பின்வாங்கிக் கொண்டது.

இந்தியாவின் கவலைகள்

  • 1988-ல் மாணவர் போராட்டம் நடந்தபோது இந்தியா ஜனநாயக சக்திகளுக்குத்தான் ஆதரவாக இருந்தது. எனில், 1991-ல் நரசிம்ம ராவ் அரசு மியான்மரின் ராணுவத் தலைமையோடு நட்பு பாராட்டியது.
  • அப்போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கிய பயங்கரவாதக் குழுக்கள் மியான்மரில் மறைந்துகொள்வதைத் தடுக்க அந்நாட்டு ராணுவ அரசின் ஒத்துழைப்பு அவசியமாக இருந்தது.
  • அடுத்து, மியான்மரில் சீனா பெற்றுவந்த அபரிமிதமான செல்வாக்கை மட்டுப்படுத்துவது. மியான்மரில் சீனச் செல்வாக்கு இப்போது அதிகமாகியிருக்கிறது. ஆனால், நமது வடகிழக்கில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை. ஆகவே, அகதிகளுக்குப் புகலிடம் வழங்க வேண்டுமென்பது எல்லைப்புற மாநிலங்களின் நிலைப்பாடாக இருக்கிறது.
  • இந்தச் சூழலில், மார்ச் 31-ல் கூடிய ஐநா அரங்கில் மியான்மர் ராணுவ அரசை இந்தியா கண்டித்தது; உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்தது; தலைவர்களை விடுவிக்கக் கோரியது; மியான்மர் ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கோரியது.
  • மியான்மர் அரசுடன் நல்லுறவைப் பேணிக்கொண்டே, இந்தியா அகதிகளுக்குப் புகலிடம் வழங்க வேண்டும்.
  • அடுத்த வீட்டில் ஜனநாயகம் கழுத்து நெரிக்கப்படும்போது, அதைக் கண்மூடிக் கடந்துபோவது எவ்வகையில் நியாயம்? ராஜீய வழிகளில் உள்ள எல்லாச் சாத்தியங்களையும் இந்தியா முயற்சிக்க வேண்டும். அது சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பையும் கூட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்