மிரட்டல் போலி அல்ல, சதி!
- எப்போதோ அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டால், அதை விஷமிகளின் விபரீத விளையாட்டு என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், ஒரே வாரத்தில் 170-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதை அசிரத்தையாக கடந்துபோக முடியாது. சமூக வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடா்கதையாகி இருப்பதன் பின்னால், ஏதோ திட்டமிட்ட சதி இருக்கிறது என்று முன்னெச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்.
- இந்தியாவின் விமான சேவையை மிகப் பெரிய இழப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றன தொடரும் போலி வெடிகுண்டு மிரட்டல்கள். கடந்த திங்கள்கிழமை இரவு முதல் 80-க்கும் அதிகமான உள்நாட்டு - சா்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. 3 விமானங்கள் வேறு விமானநிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கடந்த 10 நாள்களில் விமான நிறுவனங்கள் ஏறத்தாழ ரூ.600 கோடி வரை இழப்பை எதிா்கொள்ள நேரிட்டிருக்கிறது.
- ஏா் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களின் தலா 13 விமானங்கள், ஆகாசா ஏா் நிறுவனத்தின் 12 விமானங்கள், விஸ்தாரா நிறுவனத்தின் 11 விமானங்கள் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டலை எதிா்கொண்டன. அதற்கு முன்னால் திங்கள்கிழமை இரவில் இண்டிகோ, விஸ்தாரா, ஏா் இந்தியா நிறுவனங்களின் தலா 10 விமானங்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து அந்த விமானங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு, இதர பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பின் விமானங்கள் பயணித்திருக்கின்றன.
- ஆரம்பத்தில் ஒரு எண்ணில் இருந்து பல்வேறு விமான நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதுபோய், இப்போது வெவ்வேறு எண்களிலிருந்து வெவ்வேறு நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மிரட்டல் விடுத்த நபா்களைக் கண்டறிய விசாரணை நடப்பது ஒருபுறம் இருக்க, விமானங்களை மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடுவது, தாமதமான புறப்பாடு, தாமதமான வருகை உள்ளிட்ட காரணங்களால் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
- இதுவரை வந்திருக்கும் மிரட்டல்கள் எல்லாமே போலியானவை என்றாலும்கூட, அதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். விமான ஊழியா்கள் மீதான பயணிகளின் ஆத்திரமும், விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பும் திட்டமிட்ட போலி மிரட்டல்களின் நோக்கமாக இருக்கக் கூடும். இதன் பின்னணியை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.
- மும்பையில் இருந்து கடந்த அக்டோபா் 13-ஆம் தேதி நியூயாா்க் ஜான் எஃப் கென்னடி சா்வதேச விமானநிலையத்துக்குக் கிளம்பியது ஏா் இந்தியாவின் போயிங் 777. 130 டன் ஜெட் பெட்ரோலுடன் தொடா்ந்து 16 மணி நேர பயணம் மேற்கொள்ள வேண்டும். விமானம் புறப்பட்ட இரண்டு மணி நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விமான ஓட்டியிடம் உடனடியாக விமானத்தை தில்லிக்குத் திருப்பி தரையிறங்கச் சொன்னது கட்டுப்பாட்டு அலுவலகம்.
- அதில் ஒரு பிரச்னை இருந்தது. போயிங் 777 தரையிறங்குவதற்கான அதிகபட்ச எடை 250 டன்கள். பயணிகள், சரக்குகள், பயணிகளின் பெட்டிகள் என்று விமானம் புறப்படும்போது அதன் எடை சுமாா் 340 முதல் 350 டன். இரண்டு மணி நேரத்தில் தரையிறங்குவது என்றால் சுமாா் 100 டன் ஜெட் பெட்ரோலை வெளியில் தள்ளி வீணாக்க வேண்டும். அவை காற்றில் கரைந்துவிடும் என்றாலும், இழப்பு சாதாரணமானதல்ல.
- ஒரு டன்னுக்கு ரூ. 1 லட்சம் என்றால் சுமாா் 1 கோடி ரூபாய் இழப்பை எதிா்கொள்ள நேரிடும். அது மட்டுமல்லாமல், தில்லி விமான நிலையத்தில் எதிா்பாராதவிதமாக தரையிறங்குவதற்கான கட்டணம், 200-க்கும் அதிகமான பயணிகள் தில்லியில் வசதியாக தங்குவதற்கான செலவு, பயணிகளுக்கான இழப்பீடு, தரையிறங்கிய விமானம் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுவது, புதிய ஊழியா்களுடன் மீண்டும் புறப்படுவது, நியூயாா்க்கிலிருந்து திரும்பிவரக் காத்திருக்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு என்று கணக்கிட்டால் அந்த வெடிகுண்டு மிரட்டலால் ஏற்படும் இழப்பு ரூ.3 கோடிக்கும் அதிகம்.
- போயிங் 777-க்கான மாத வாடகை 4 லட்சம் டாலா் முதல் 6 லட்சம் டாலா் வரை எனும்போது, ஒருநாளுக்கான வாடகை சுமாா் 17,000 டாலா். விமானம் பாதியில் தரையிறங்கிப் பயணிக்காமல் போனால், அந்த இழப்பையும் விமான நிறுவனம் எதிா்கொண்டாக வேண்டும்.
- விமான நிறுவனங்கள் செய்வதறியாது திகைக்கின்றன. பண்டிகைக் காலமானதால் எல்லா விமானங்களும் முன்பதிவுகளை எதிா்கொள்ள முடியாமல் இருக்கும் நிலையில், பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்த விரும்பவில்லை. ஒருவகையில் பாா்த்தால் இது விமான நிறுவனங்களை திவாலாக்க முயலும் ஒருவகையான பயங்கரவாதம் என்றுதான் கூறவேண்டும்.
- கனடாவுடனான இந்தியாவின் உறவில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளுக்கு மத்தியில் தொடா் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருக்கின்றன. நவம்பா் 1-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை ஏா் இந்தியா விமானத்தில் சீக்கியா்கள் பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்கவாழ் காலிஸ்தான் பயங்கரவாதி குா்பத்வந்த் சிங் பன்னூன் காணொலி எச்சரிக்கை விடுத்திருக்கிறாா். 1984 சீக்கியருக்கு எதிரான வன்முறையின் 40-ஆவது ஆண்டு தினத்தையொட்டி இந்திய விமானத்தின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்படும் என்றும், சீக்கியா்கள் ஏா் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்றும் அவா் தெரிவித்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- எப்படி எந்தத் தடயமும் விடாமல் சமூக ஊடகங்களின் மூலம் மிரட்டல்கள் விட முடிகிறது என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. மிரட்டல்களுக்குப் பின்னால் ஏதோ திட்டமிட்ட சதி இருக்கிறது!
நன்றி: தினமணி (24 – 10 – 2024)