TNPSC Thervupettagam

மீண்டும் பயங்கரவாதம்?

June 13 , 2022 786 days 491 0
  • அந்நியர்கள் என்று முத்திரை குத்தி தேடிப்பிடித்து அவர்களை சுட்டுக்கொல்லும் கொடூரம் காஷ்மீரில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. காஷ்மீரின் பூர்வகுடிகளான ஹிந்து பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும், வேற்று மாநிலங்களில் இருந்து பணியிட மாற்றத்தாலும், வேலைவாய்ப்பாலும் காஷ்மீரில் குடியேறியவர்களையும் குறிவைத்து சுட்டு வீழ்த்த முற்பட்டிருக்கிறார்கள் பயங்கரவாதிகள்.
  • மே 12-ஆம் தேதி பட்காமில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அங்கே பணியாற்றி வந்த ராகுல் பட் என்பவரை சுட்டுக்கொன்றதிலிருந்து தொடங்கியது இந்த வெறியாட்டம். ஜம்மு, சம்பா பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஆசிரியை ரஜ்னி பாலா, தெற்கு காஷ்மீரில் குல்காமில் உள்ள பள்ளிக்கு அருகில் மே 31-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ராஜஸ்தான் மாநிலம், ஹனுமான்கர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் குமார் (27) என்பவரை குல்காமில் அவர் பணியாற்றும் வங்கிக்குள் ஜூன் 2-ஆம் தேதி பட்டப்பகலில் புகுந்த பயங்கரவாதி சுட்டுக் கொன்றது ரத்தத்தை உறைய வைப்பதாக இருந்தது. விஜய் குமாருக்கு கடந்த பிப்ரவரியில்தான் திருமணம் நடைபெற்றது.
  • விஜய் குமார் கொல்லப்பட்ட சில மணி நேரத்துக்குள் பட்காம் பகுதியில் செங்கல் சூளையில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். தங்களைப் பாதுகாப்பான இடத்துக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று காஷ்மீர் பண்டிட்டுகள் கடந்த சில நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல குடும்பத்தினர் காஷ்மீரை விட்டு வெளியேறத் தொடங்கி உள்ளனர்.
  • ஜம்மு - காஷ்மீரில் கடந்த அக்டோபர் முதல் 2022 மே வரை ஹிந்துக்கள் உள்பட சிறுபான்மையினர் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை அம்ப்ரீன் பட் (35) சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • வெடிகுண்டுகளை வீசுவது, தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவது, பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து கண்ணிவெடிகளை வைப்பது போன்ற செயல்களில் இதற்கு முன்னர் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வந்தனர். சமீப காலமாக நிகழ்த்தப்படும் கொலைச் சம்பவங்களில் பெரும்பாலும் சாதாரண நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டப்பகலில் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
  • வங்கி மேலாளர் விஜய் குமார் கொலைச் சம்பவத்துக்கு அதிகம் அறியப்படாத "காஷ்மீர் ஃபிரீடம் பைட்டர்ஸ்" என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. "காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளூர் இஸ்லாமியர்களைத் தவிர வேறு யாரும் வாழக் கூடாது. வெளியூர் நபர்கள் வந்து குடியேறக் கூடாது. காஷ்மீரில் மக்கள்தொகை விகிதாசாரத்தை மாற்ற முனையும் நபர்களுக்கு இந்தக் கதிதான் ஏற்படும்" என்று அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • பிரதமரின் சிறப்பு மறுகுடியமர்வுத் திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் 3,800-க்கும் அதிகமான பண்டிட்டுகளும், அரசமைப்பு சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் 520 பேரும் காஷ்மீருக்கு திரும்பி அரசுப் பணிகளை ஏற்றுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் 2021 மார்ச்சில் தெரிவித்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள், கட்டமைப்புப் பணிகளுக்காக பஞ்சாப், உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் நான்கு லட்சம் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.
  • காஷ்மீர் பண்டிட்டுகளையும், புலம்பெயர் தொழிலாளர்களையும் அச்சுறுத்தவே இதுபோன்ற ஈவிரக்கமற்ற கொலைகள் நடத்தப்படுகின்றன. அந்தக் கொலைகளை அரங்கேற்ற குற்றப் பின்னணி இல்லாத, சாதாரண குடும்பத்து இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். எந்தவிதத்திலும் காஷ்மீர் தங்களது கட்டுப்பாட்டிலிருந்து நழுவிவிடக் கூடாது என்பதும், மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகள் தொடரக் கூடாது என்பதும்தான் பயங்கரவாதிகளின் நோக்கம்.
  • பிரிவினையின்போதே காஷ்மீரில் பிரச்னை தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியாக இருப்பதாலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதாலும், அப்போதைய சட்ட அமைச்சர் அம்பேத்கர் அரசமைப்பு சட்டப் பிரிவு 370-இன் அடிப்படையில் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதை எதிர்த்தார். அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வற்புறுத்தலால்தான் அரசியல் சாசன சபை சட்டப்பிரிவு 370-இன் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்க முடிவெடுத்தது. அந்த அந்தஸ்து 2019 ஆகஸ்டில் நரேந்திர மோடி அரசால் அகற்றப்பட்டது.
  • காஷ்மீரின் பல பகுதிகள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளன. நமது ஆளுகையின் கீழ் உள்ள 42,241 ச.கி.மீ. பகுதியிலும் அவ்வப்போது பாகிஸ்தானால் தூண்டப்பட்ட பயங்கரவாதம் தலைதூக்கி, 1990-களில் உச்சத்தை அடைந்தது. அப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சுமார் 2.50 லட்சம் பண்டிட்டுகள் தங்கள் தாயகத்திலேயே அகதிகளாக ஆனார்கள், அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். அவர்கள் ஜம்முவிலும் தில்லியிலும் அகதி முகாம்களில் அடைக்கலம் தேடினர். தங்களது தாய் மண்ணைவிட்டு வெளியேற மறுத்த சிறுபான்மை ஹிந்துக்கள் கொல்லப் பட்டனர்.
  • காஷ்மீரில் அமைதி திரும்பிவிடக் கூடாது என்பதிலும், வளர்ச்சிப் பணிகள் மூலம் மக்கள் பயங்கரவாதிகளையும் அடிப்படைவாதிகளையும் புறக்கணித்துவிடக் கூடாது என்பதிலும் பிரிவினைவாத சக்திகள் குறியாக இருக்கின்றன. அவர்களை சாதுர்யமான அரசியல் தீர்வின் மூலம் செயலிழக்கச் செய்வதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும்.

நன்றி: தினமணி (13 – 06– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்