TNPSC Thervupettagam

மீண்டும் மாநிலம் ஆகட்டும் காஷ்மீர்

August 5 , 2020 1451 days 710 0
  • 2019 ஆகஸ்ட் 5 அன்று எடுக்கப்பட்ட காஷ்மீர் நடவடிக்கை ஓராண்டைக் கடந்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துடன், அதன் மாநில அந்தஸ்தும் நீக்கப்பட்டு, லடாக் தனியே பிரிக்கப்பட்டு இரண்டும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆக்கப்பட்டன.
  • ஜம்மு காஷ்மீரின் பல அரசியலர்கள் சிறைவைக்கப்பட்டனர். அவர்களில் கணிசமானோர் இன்னும் காவலிலேயே இருக்கின்றனர்.
  • முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹ்பூபா முஃப்தியின் சிறைக்காவல் கடந்த வாரம்கூட ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.
  • கடந்த ஆண்டு சிறைவைக்கப்பட்ட தலைவர்களின் பட்டியலையோ எண்ணிக்கையையோ இதுவரை ஜம்மு காஷ்மீர் அரசோ இந்திய அரசோ வெளியிடவில்லை.
  • முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோன் ஆகியோர் விடுவிக்கப்பட்டாலும், இன்னும் பழையபடியான அரசியல் செயல்பாட்டுக்குள் அவர்களால் கால்வைக்க முடியவில்லை.
  • பத்திரிகைச் சுதந்திரம் அழுத்தப்பட்டிருக்கிறது. இணைய சேவையும் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கிடைப்பதாக காஷ்மீரிகள் சொல்கிறார்கள்.
  • கரோனா காலத்தில் நாடு முழுமையும் ஓர் ஊரடங்குச் சூழலை எதிர்கொள்கிறது என்றால், காஷ்மீர் ஊரடங்குக்குள் ஓர் ஊரடங்குச் சூழலை எதிர்கொள்கிறது.
  • இவ்வளவு முரட்டுத்தனமான நடவடிக்கைகள் வழியே இந்திய அரசு சாதித்திருப்பதுதான் என்ன? இந்தியப் பொது நீரோட்டத்துடனான காஷ்மீரிகளின் இணக்கம் மேலும் நாசமாகியிருக்கிறது என்பதே உண்மை.
  • இந்தியக் கூட்டாட்சித்துவத்தின் ஆன்மா பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசுக்கான உண்மையான மதிப்பு இந்தியாவில் என்னவென்பது இந்த ஓராண்டில் காஷ்மீர் வழியே முழுமையாக வெளிப்பட்டுவிட்டது.
  • இந்திய நீதியமைப்பும்கூட காஷ்மீருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளிலிருந்து அதை விடுவிக்கவில்லை. ஏனைய மாநிலங்கள் எல்லாம் சீக்கிரமே காஷ்மீரை மறந்தேபோயின. டெல்லியின் யதேச்சதிகாரப் போக்கை மட்டும் அல்ல; நம்முடைய சகல பலவீனங்களையும் சேர்த்தே இந்த ஓராண்டு வெளிப்படுத்துகிறது.
  • ஒரு ஜனநாயகமாக நாம் ஒட்டுமொத்தமாகச் சரிந்துவருகிறோம். எதற்காக இத்தனையும் என்றால், வெறுமையே சூழ்கிறது.
  • உலகின் பெரிய ஜனநாயகம் என்று இனியும் நாம் கூறிக்கொள்வோம் என்றால், குறைந்தபட்சம் காஷ்மீருக்கு அதன் மாநில அந்தஸ்தையேனும் மீண்டும் அளித்து, பழைய நிலைக்கு அதை மீட்டெடுப்பதன் வழியாகவே இந்தியா அதற்கான தார்மீகத்தை நோக்கி நகர முடியும்.
  • காஷ்மீரிகளின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் சகல குரல்களும் மீண்டும் சுதந்திர வெளியை அடைய வேண்டும். அதற்கு அரசியல் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.
  • ஊடகங்களுக்கான சுதந்திரச் சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். நடந்த தவறிலிருந்து வெளியே வருவோம். காஷ்மீரிகளுடன் பேசவே முடியாத ஒரு பள்ளத்துக்குள் அவர்களைத் தள்ளியிருக்கிறோம்.
  • அங்கிருந்து மேலே அவர்கள் கொண்டுவரப்பட்டால் மட்டுமே காஷ்மீரின் எதிர்காலம் தொடர்பில் நாம் சிந்திக்கவும் உரையாடவும் முடியும்.

நன்றி: தி இந்து (05-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்