TNPSC Thervupettagam

மீண்டும் மிக் 21 ரக போர் விமான ஒரு விபத்து

May 17 , 2023 604 days 346 0
  • இந்திய விமானப்படை எந்த அளவுக்கு வலிமையாகவும், தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாரானதாகவும் இருக்கிறது என்பது குறித்த கவலையை எழுப்புகின்றன நமது போர் விமானங்களின் விபத்துகள். அதிநவீன ரஃபேல் விமானங்கள் வாங்கப்படுகின்றன என்றாலும் அவை மட்டுமே இந்திய விமானப்படையின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்துவிடாது.
  • ராஜஸ்தான் மாநிலம் ஹனுமான்கர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான "மிக்-21' போர் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் தங்கள் வீட்டிலிருந்த மூன்று பெண்கள் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். கங்கா நகர் மாவட்டத்திலுள்ள சூரத் நகர் விமானப்படைத் தளத்தின் விமானி ஒருவர் கடந்த வாரம் "மிக்-21' போர் விமானத்தில் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த விமானம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. பாராசூட் மூலம் லேசான காயங்களுடன் விமானி தப்பிவிட்டார்.
  • இதே போல கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தில் "மிக்-21 பைசன்' பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானபோது இரண்டு விமானிகளும் உயிர் தப்ப முடியவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட விமான, ஹெலிகாப்டர் விபத்துகளில் விமானப்படையினர் 55 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பெரும்பாலான விபத்துகளுக்கு மிக்-21 விமானம், சீட்டா - சேட்டக் ஹெலிகாப்டர்கள்தான் காரணமாக இருந்திருக்கின்றன.
  • இந்திய விமானப்படையில் முன்பு பெருமையாகப் பேசப்பட்ட மிக்-21 விமானங்கள் இப்போது ஆபத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன. 1960 காலகட்டத்தைச் சேர்ந்த மிக் ரக விமானங்கள் கால் நூற்றாண்டுக்கு முன்பே சேவையிலிருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போதும் மூன்று படைப்பிரிவுகள் (ஸ்குவாட்ரன்கள்) மிக் ரக விமானங்கள் சார்ந்தவையாக இருக்கின்றன.
  • 1962 சீனப் போரைத் தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அன்றைய சோவியத் யூனியனிலிருந்து மிக்-21 ரக விமானங்கள் வாங்கப்பட்டன. சோவியத் யூனியன் உதவியுடன் அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், மிக் ரக விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க முற்பட்டது. அதன் என்ஜினும், முக்கிய உதிரி பாகங்களும் சோவியத் யூனியனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
  • 60 ஆண்டுகளாகியும் மிக்-21 போர் விமானங்கள் இன்னும் பயன்பாட்டில் இருப்பதற்கு ராணுவ அமைச்சகத்தின் மெத்தனப்போக்குதான் காரணம். சிறிய தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் "லைட் காம்பேட் ஏர்கிராஃப்ட்' திட்டம் அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆர். வெங்கட்ராமனால் 1983-இல் தொடங்கப்பட்டது. மிக் ரகத்துக்கு மாற்றாக நவீன சிறு போர் விமானங்களை இந்திய விமானப்படையில் அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். அதற்காக "தேஜஸ்'என்கிற இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் போர் விமானங்களுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது.
  • சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்புத் துறையின் நாடாளுமன்றக் குழு மக்களவையில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. அதன்படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், 40 தேஜஸ் சிறு ரக போர் விமானங்களை வழங்குவதில் மிகுந்த கால தாமதம் ஏற்படுத்தியிருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
  • தேஜஸ் விமானங்களின் தாமதமான உற்பத்திதான் மிக் ரக விமானங்கள் தொடர்ந்து சேவையிலிருப்பதற்கு காரணம். விமானப்படை கோரியிருக்கும் 123 தேஜஸ் போர் விமானங்களில் இதுவரை 40 மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால் உதிரிபாகத் தட்டுப்பாடுகள், நவீனமயமின்மை ஆகியவற்றுடன் வேறுவழியில்லாமல் மிக் ரக விமானங்களை விமானப்படைப் பிரிவினர் பயன்படுத்தி வருகின்றனர். மிக் விமானங்களை "பறக்கும் சவப்பெட்டிகள்' என்று விமானப்படையினர் கேலி செய்யும் நிலை குறித்து அரசுக்கு தெரியாமலும் இல்லை.
  • காலாவதியான சோவியத் யூனியன் கால போர் விமானங்களுடன் 21-ஆம் நூற்றாண்டில் இந்திய விமானப்படை செயல்படுகிறது. ரஷிய போர் விமானங்கள் உக்ரைன் போரில் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதால், அவற்றின் பறக்கும் திறன் குறித்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
  • இந்தியா, மிக்-29, சு-30 ரக விமானங்களை வாங்குவதற்கு ரஷியாவுடன் 2.2 பில்லியன் டாலர் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே உக்ரைன் போரால் உதிரி பாகங்கள் வழங்குவது தடைபட்டிருக்கும் நிலையில், அந்த ஒப்பந்தம் இப்போதைக்கு நடைமுறைக்கு வருவது சந்தேகமே. இந்தப் பின்னணியில் 2025 இலக்குக்குள் நம்மிடம் இருக்கும் மிக்-21 போர் விமானங்களை சேவையிலிருந்து அகற்ற இயலும் என்று தோன்றவில்லை.
  • சீனாவுடன் எப்போது வேண்டுமானாலும் எல்லையில் மோதல் நிகழலாம் என்கிற சூழல் ஒருபுறம். பாகிஸ்தானின் அச்சுறுத்தல் இன்னொரு புறம். வடக்கு எல்லையில் அப்படியென்றால், கடற்கரைப் பகுதிகளின் பாதுகாப்புக்கு விமானப்படை அதைவிட முக்கியம். விமானப் படைக்கு அனுமதிக்கப்பட்ட 43 படைப்பிரிவுகளில் இப்போது 31 விமானப்படைப் பிரிவுகள்தான் இருக்கின்றன. இனியும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை மட்டுமே நம்பி விமானப்படை காத்திருப்பது புத்திசாலித்தனமாகாது.
  • பயன்படுத்தப்படும் மிக்-21 ரக விமானங்கள் தொழில்நுட்ப ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பது முக்கியம். விமான விபத்துகள் ஏற்படும்போது முறையான விசாரணை நடத்தி பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறதா என்பதைத் தெளிவுபடுத்தும் கடமை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உண்டு.

நன்றி: தினமணி (17 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்