மீண்டும் வருமா பழைய ஓய்வூதியத் திட்டம்?
- அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு காலமாக நீடிக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகத் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். அது எப்போது என்பதுதான் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கேள்வி.
பழைய ஓய்வூதியத் திட்டம்:
- பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓர் ஊழியர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% ஓய்வூதியமாகத் தரப்படுகிறது. அதில் 40% தொகை 12 ஆண்டுகளுக்குக் குறிப்பிட்ட வட்டி சதவீதத்துடன் கணக்கிடப்பட்டு, ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ரொக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
- எனவே, 12 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் அவர்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும். மேலும், ரூ.10 ஆயிரம் என்கிற மொத்த ஓய்வூதியத்துக்கான அகவிலைப்படி விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. மேலும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவேளை ஓய்வூதியர் இறந்துவிட்டால், அவரது கணவர் / மனைவிக்கு அல்லது அவரும் இறந்துவிட்டால் திருமணமாகாத / கணவரை இழந்த / விவகாரத்து ஆன அவர்களது மகள் அல்லது உடல்நலம் குன்றிய மகனுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
- இந்நிலையில், தமிழ்நாட்டில் ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்’ என்கிற திட்டம் 2003ஆம் ஆண்டு முதல் அமலாகிவருகிறது. இந்தத் திட்டத்தில் ஊழியர் ஓய்வு பெறும்போது ஒரு தொகை வழங்கப்படுகிறது. மாதந்தோறும் ஓய்வூதியம் என்பதே கிடையாது.
- ஊழியர் பணியில் இருக்கும்போது அவரது சம்பளத்தில் இருந்து 10%, அரசுப் பங்களிப்பாக 10%, மேலும் இந்தத் தொகைக்கான வட்டி 7.8% ஓய்வூதியத் தொகையாகச் சேகரிக்கப்படுகிறது. அது அரசு கஜானாவிலும், காப்பீட்டு நிறுவனத்திலும் முதலீடு செய்யப்படுகிறது. ஊழியர் ஓய்வு பெறும்போது இந்தத் தொகை அப்படியே திருப்பி வழங்கப்படுகிறது.
- 2003இல் இந்தத் திட்டம் அமலானபோது, ‘வேலையில் இருந்தவர்கள் ஓய்வுபெறும் காலம் என்பது 2037 முதல் 2050 வரை ஆகும். இத்தனை ஆண்டு காலம் ஊழியர்கள் பணத்தைச் சேகரித்து வைத்து என்ன செய்யப்போகிறார்கள்?’ என்னும் கேள்விகள் எழுந்தன.
- இப்படிப் பணத்தை எங்கும் முதலீடு செய்யாமல், ஓய்வூதியமும் தராமல் இருப்பதால் ரூ.1,500 கோடியை அரசு வீணாக்குகிறது என்று மத்தியத் தணிக்கை அறிக்கை கூறியுள்ளது. அதேவேளை, புதிய ஓய்வூதியத் திட்டம் முதலீட்டை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
- புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அடிப்படைச் சம்பளத்தில் 10%, ஊழியர் பங்களிப்பில் 10%, அரசுப் பங்களிப்பு, அதற்கான வட்டி ஆகியவை ஓய்வூதியச் செல்வம் (pension wealth) என்ற பெயரில் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் தொகையில் 15% ‘ஈக்விட்டி’ பங்குகளிலும், 55% அரசுப் பத்திரங்களிலும், 25% தனியார் பத்திரங்களிலும், 5% கடன் பத்திரங்களிலும் அரசு முதலீடு செய்கிறது. ஆனால், சட்டப்படி இந்த முதலீட்டின் மூலம் பணம் கிடைக்கும் என்கிற எவ்வித நேரடி அல்லது மறைமுக உத்தரவாதமும் இல்லை.
- போட்ட முதல் பணம் உள்பட அனைத்து முதலீடுகளையும் இழக்கும் ஆபத்து உள்ளது என்று ‘செபி’ (Securities and Exchange Board of India) கூறுகிறது. ஓய்வூதியர் உயிரிழந்தால் கணவர் அல்லது மனைவிக்கு மட்டுமே ஓய்வூதியம்; பிள்ளைகளுக்குக் கிடையாது என்கிற பிரச்சினைகளும் உள்ளன.
நடைமுறைச் சிக்கல்கள்:
- புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் சேகரிக்கப்படும் தொகையை, மாநில அரசுகள், மத்திய அரசின்கீழ் ஓய்வூதிய நிதி மேலாண்மை - வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற வேண்டும் என்று நினைத்தால், ஒப்படைத்த பணத்தைத் திருப்பித் தர முடியாது என மத்திய அரசு கூறுகிறது.
- இதில் சிறப்பு வழக்காகத் தமிழ்நாடு இந்தத் திட்டத்தில் கையெழுத்திடவில்லை. எனவே, இந்தத் தொகை தமிழக அரசிடமேதான் உள்ளது. அதனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழ்நாட்டுக்குச் சிக்கல் இல்லை. ஆந்திர மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையான திட்டத்தை மாநில அரசே நடத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2035 முதல் 2037ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணக்கிடப்படுகிறது. ஆகவே, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவதால், அரசின் செலவினங்கள் அதிகரிக்கக்கூடும் என்று மாநில நிதித் துறை அமைச்சகம் கருதுகிறது.
- மேலும், அரசின் வருவாய்ச் செலவினங்கள் அதிகரிக்கும். ஜிஎஸ்டி உள்ளிட்ட சில சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்கள் தங்கள் வருவாயை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. ஏற்கெனவே, அரசு திருப்பிச் செலுத்த வேண்டிய கடனும், அரசின் தொடர் செலவுகளும் சுமையாக இருக்கின்றன.
- புதிய ஓய்வூதியத் திட்டமும் சிக்கலாக இருக்கிறது. ஓய்வூதியதாரர்களுக்கே பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் மத்திய அரசின் பங்கு என்ன என்பதில் தெளிவு இல்லை. கர்நாடகம் அறிவித்துள்ள திட்டமும் தெளிவாக இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
- ஆக, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் வழங்கப்பட்டதைப் போல, கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% என்பதற்குப் பதிலாக 40% அல்லது அதற்கும் குறைவாகவோ முடிவுசெய்யலாம் என்று நிதித் துறை வட்டாரங்கள் ஆலோசித்துவருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இழுபறி நிலையே நீடிக்கிறது. இந்தச் சூழலில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்:
- 2004இல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசாங்கம், பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, புதிய ஓய்வூதிய முறைக்கு மாறியபோது, நிலையான ஓய்வூதியம் வழங்குவது கைவிடப்பட்டது. இத்தோடு ஊழியர்களின் பங்களிப்பு கட்டாயமாக்கப்பட்டதோடு, ஊழியரும் அரசாங்கமும் சமமாக 10% பங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
- 2019இல் இந்தப் பங்களிப்பு அடிப்படைச் சம்பளம் அகவிலைப்பட்டியின் 14%ஆக உயர்த்தப்பட்டது. புதிய விதியின்படி, ஓய்வுக்குப் பிறகு பணியாளர் ஓய்வூதியத்தின் மொத்தத் தொகையில் 60%ஐ எடுக்கலாம். மீதம் உள்ள 40%ஐப் பொதுத் துறை / தனியார் நிறுவனங்களில் ஊக்குவிக்கப்படும் ஓய்வூதிய நிதி மேலாளர்களின் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வது கட்டாயமாக்கப்பட்டது.
- தேசிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டபோது, அது பழைய ஓய்வூதியத் திட்டத்தைவிடச் சிறந்தது எனக் கூறப்பட்டது. ஆனால், 2004க்குப் பின் பணியமர்த்தப்பட்டு, ஓய்வு பெற்றவர்களுக்கு பெயரளவுக்குத்தான் ஓய்வூதியம் கிடைப்பதாக அது அமைந்திருந்தது. இதைத் தவிர, ஊழியர்களும் தங்களது சொந்தப் பங்களிப்பில் செலுத்த வேண்டியதாக இருந்தது.
- அதே வேளை, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் முற்றிலும் அரசாங்கத்தால், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தையே சார்ந்ததாக அமைந்திருந்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்புத் தொகையைத் திரும்பப் பெறுவது குறித்துத் தெளிவான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
- ஓய்வூதியத்துக்கான பணப் பற்றாக்குறை ஏற்பட்டால், அதை அரசே ஈடுசெய்யும். இது குறித்து ஒவ்வோர் ஆண்டும் மதிப்பீடு செய்வது அவசியமாகிறது. அரசின் ஓய்வூதியத் திட்டத்தில், மத்திய அரசிடம் ஓய்வூதிய நிதிகள் இல்லை. இருப்பினும், புதிய அமைப்பில் மத்திய அரசு ஒரு நிதியை உருவாக்குகிறது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களுக்காக ஒரு நிதியை உருவாக்குவதுபோல, ஒவ்வோர் ஆண்டும் இந்த நிதியில் பணம் முதலீடு செய்யப்படுகிறது.
- உலக நாடுகளின் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்தும், ஆந்திர அரசு செய்த மாற்றங்கள் குறித்தும் சோமநாதன் குழு ஆய்வு செய்துவருகிறது. ஓய்வூதியத்தில் குறிப்பிட்ட தொகைக்கு அரசு உத்தரவாதம் அளித்தால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் இந்தக் குழு ஆய்வுசெய்கிறது.
- 40 முதல் 45% ஓய்வூதியத்துக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க முடியும் என்று தனது ஆய்வறிக்கையில் இக்குழு தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால், 25 முதல் 30 ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊழியர்களின் கவலையை இது நீக்கிவிடாது என்ற கருத்தும் நிலவுகிறது.
- மீண்டும் 50% உத்தரவாதம் தரலாமா என்று மத்திய அரசு பரிசீலித்துவரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஓய்வூதியதாரர்களுக்கு முழுமையான பலன் அளிக்குமா என்பதும், ஓய்வூதியர் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் போகப்போகத்தான் தெரியவரும்!
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 08 – 2024)