- மீனவர்களின் பங்களிப்பு இல்லாமல், மீனவர்களின் வாழ்க்கை மற்றும் மீன்பிடி முறைகள் பற்றிய எந்தவித அறிதல்களும் இல்லாதவர்களால்தான் இதுவரை கடல்சார் சட்டங்கள் இயற்றப்பட்டுவந்தன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் ‘கடல் மீன் வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) மசோதாவும் முந்தைய சட்டத்தை நகலெடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
கடல் வளம்
- பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் கடல் வளத்தைப் பாதுகாப்பது, மீன் வளத்தை நீண்டகால நோக்கில் பயன்படுத்துவது, கடற்பரப்பைக் கண்காணித்து மேற்பார்வையிடுவது உள்ளிட்ட பல அம்சங்கள் இச்சட்ட முன்வடிவில் வரையறுக்கப்பட்டுள்ளன.
- இந்தியக் கடல் பிராந்தியத்தை மூன்றாகப் பிரிக்கலாம். இந்திய நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் வரையிலான அண்மைக்கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரையிலான பிரத்யேகப் பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் இருக்கும் பன்னாட்டுக் கடல்.
- தற்போது நிறைவேற்றப்படவிருக்கும் கடல் மீன் வள மசோதா, 12 கடல் மைல் தொலைவிலிருந்து 200 கடல் மைல்கள் வரையிலான பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்துக்கானது. ஆனால், தென்மேற்குக் கடற்கரை ஆழ்கடல் விசைப் படகுகள் அநேகமும் பன்னாட்டுக் கடல்வெளியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
விசைப்படகு கப்பலாகுமா?
- இந்த மசோதா, இதற்கு முன்பிருந்த சட்டங்களிலிருந்து விலகி, இயந்திரங்கள் கொண்டு இயங்கும் எல்லாக் கலங்களுமே கப்பல் என வரையறுக்கிறது. கடலில் மீன் பிடிக்கும் அனைத்து விசைப்படகுகளும் அரசிடம் பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. இது பேரிடர்க் காலங்களில் உதவி, மேலாண்மை செய்ய வசதியாக இருக்கும்.
- ஆனால், அதற்கான சரியான வரைமுறைகள் புதிய மசோதாவில் குறிப்பிடப்பட வேண்டும். சிறு மீனவர்களின் தொழில் அலகும், பெரும் வணிகக் கப்பல்களின் அலகும் வெவ்வேறானவை. எனவே, இரண்டையும் ஒன்றாக வரையறுப்பது தவறு.
- இந்த மசோதாவின் பிரிவு 3(3)ன்படி, வெளிப்பொருத்து இயந்திரம் பயன்படுத்தப்படும் வள்ளம் மற்றும் கட்டுமரங்களும் கப்பல்களாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, ‘வணிகக் கப்பல் சட்டம், 1958’-ன் கீழ் பதிவுசெய்யப்பட்டால் மட்டுமே மீன்பிடி உரிமங்கள் கொடுக்கப்படும் என்று சொல்கிறது. இது கத்தரிக்காய், வெண்டைக்காய் பயிரிடும் விவசாயிகள், கம்பெனிகள் சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவுசெய்ய வேண்டும் என்று சொல்வதற்குச் சமம். அரசு உரிமங்களைப் பெற அரசு அதிகாரிகள் பின்னால் அலைய வைக்கிறது இந்த மசோதா.
- இது பெரும் லஞ்ச ஊழலுக்கு வழிவகுக்கும். அதுபோல், கடலில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கும், பேரிடர்க் காலங்களில் ஏற்படும் இழப்புக்கும், சிறு/குறு மீனவர்களுக்குக் கிடைக்கும் அரசு இழப்பீடு கிடைக்காமல் செய்துவிடும் வாய்ப்பும் இருக்கிறது.
கட்டுப்பாடற்ற அதிகாரம்
- இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக, பதிவுசெய்யாமல் கட்டுப்பாடற்ற முறையில் மீன் பிடிப்பதைத் தடைசெய்வதாக இந்த மசோதா சொல்கிறது. ஆனால், மீன் வளத்தைப் பாதிக்கும் செயல்பாடுகளுக்கு, குறிப்பாகக் கடலாழத்தில் கனிம வள ஆய்வுகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு எந்தவித வரைமுறைகளும், அவர்களுக்கான தண்டனைகளும் குறிப்பிடப்படவில்லை. எனவே, புதிய மசோதாவை மீனவர்களுக்கு எதிரானதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
- மசோதாவின் 8(1) முதல் 8(5) வரையிலான உட்பிரிவுகள் அரசு அதிகாரிகளுக்குக் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை அளித்து, சகலவிதமான பலத்துடன் மீனவர்களை அடக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க அனுமதியளிக்கிறது. அதுபோல், 15(1) மற்றும் 15(2) பிரிவுகள் தவறிழைக்கும் அதிகாரிகளுக்குத் தண்டனை கொடுப்பதிலிருந்து விலக்களிக்கிறது. இது மனித உரிமைக்கு முற்றிலும் எதிரானது. எனவே, இந்தக் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை மறுபரிசீலிக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
- பழைய சட்டத்தை நகலெடுப்பதற்குப் பதிலாக மீனவர்கள் மற்றும் மீனவ அமைப்புகளை உள்ளடக்கிய அரசுக் குழுக்களைக் கொண்டு புதிதாகக் கடல்வள மசோதாவை உருவாக்க வேண்டும். மீனவர்களுக்கு நாடாளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க வகையில் எந்தவிதப் பிரதிநிதித்துவமும் இல்லை என்பதால், மீன்வள மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு குறைந்தபட்சம் மீனவர்கள் அமைப்புகளிடமிருந்து கருத்துகளைக் கேட்டுப்பெற்று, அவற்றைக் கவனத்தில் கொண்டு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
- மசோதாவின் பிரிவு 3(4) வெளிநாட்டுக் கப்பல்களுக்கு இந்தியப் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் மீன்பிடிக்கும் அனுமதியை மறுக்கிறது. ஆனால், பிரிவு 3(9) அறிவிப்பாணை வழியாக அரசு எந்த நிறுவனங்களுக்கும், எந்த வகையிலான கப்பல்களுக்கும் உரிமம் வழங்க முடியும். இந்த முரணைக் களைந்து, வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு இந்தியப் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தினுள் நிரந்தரமான தடையை உறுதிசெய்ய வேண்டும்.
- கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி மீனவர்களுக்கு என்று தனியாக அமைச்சகம் உருவாக்கப்படுமென வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றுவதோடு, கடல் சார்ந்த சட்டங்கள் அனைத்தும் மீனவர்களுக்கான தனி அமைச்சகம் வழியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.
- ஆய்வுக் கப்பல்களையும் இந்தச் சட்டத்தினுள் கொண்டுவர வேண்டும். விதிமுறைகளை மீறும்பட்சத்தில் அவர்களைத் தண்டிப்பதற்கான வகைமுறைகளும் சேர்க்கப்பட வேண்டும். கடல்வெளியில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடற்ற ஆய்வுகள் கடலின் சுற்றுச்சூழலைப் பாதிப்பதோடு கடல்வளத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. 8(1) முதல் 8(5) உட்பிரிவுகளைத் தவறாகக் கையாளும் அரசு அதிகாரிகளைத் தண்டிப்பதற்கான வகைமுறைகளும் சேர்க்கப்பட வேண்டும்.
தேவை மறுவரையறை
- வெளிப்பொருத்து இயந்திரம் பயன்படுத்தும் பிளைவுட் படகு, வள்ளம், கட்டுமரங்களுக்குப் புதிய எல்லைகள் வகுக்க வேண்டும். எந்தெந்த எல்லைகளுக்குள் ஆழ்கடல் விசைப் படகுகள் எந்தவிதமான மீன்களைப் பிடிக்க வேண்டும் என்பதையும், எந்தவிதமான மீன்பிடிச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மறுவரையறுக்க வேண்டும். குறிப்பாக, அண்மைக்கடல் பகுதியின் எல்லையை அதிகரித்து இழுவை மடிகளையும் செயற்கை விளக்கொளியைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதையும் தடைசெய்ய வேண்டும். இந்த எல்லையைக் குறைந்தபட்சம் 50 கடல் மைல்களாக விரிவாக்கலாம்.
- புதிதாக மறுவரையறுக்கும் எல்லைக்குள் மீன்பிடி மற்றும் போக்குவரத்துக் கப்பல்களை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். ஏற்கெனவே நமது படகுகளின் மீது வெளிநாட்டுக் கப்பல்கள் இடித்துவிட்டுத் தப்பிச்செல்வதைத் தடுப்பதற்குத் தீர்வுகள் எட்டப்படவில்லை. அதுபோல், 50 கடல் மைல்களுக்கு வெளியில் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் இருப்பதையும் அரசு உறுதிசெய்ய வேண்டும்.
- புதிய மசோதாவின் பிரிவு 20(2)(வி), மீனவர்களுக்குப் பாதுகாப்பு வலைகள் கொடுக்கப்படும் என்று சொல்கிறது. உண்மையில், மீனவர்களுக்குத் தேவையானது தொலைத்தொடர்புச் சாதனங்கள். ஆழ்கடல் மீனவர்களுக்கான பாதுகாப்பில் அரசு மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். அனைத்து ஆழ்கடல் விசைப்படகுகளுக்கும் செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான தானியங்கி அடையாளம் காணும் கருவிகள் இலவசமாகக் கொடுக்கப்பட வேண்டும். இது ஒக்கி புயலின்போது ஏற்பட்ட பேராபத்துகள் போன்றவற்றைத் தவிர்க்கும்.
- தொலைத்தொடர்புச் சாதனங்கள், மீனவர்கள் தொலைதூரம் சென்று, பன்னாட்டுப் பெருங்கடலில் பாதுகாப்பாக மீன் பிடிக்க உதவும். இதனால், மீன் அறுவடை அதிகரிக்கும். ஏற்றுமதி பெருகி, அந்நியச் செலாவணியைப் பன்மடங்கு அதிகரிக்கச்செய்யும். செயற்கைக்கோள் தொலைபேசியை மத்திய, மாநில அரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீனவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், அதை உடனடியாக அனைத்து மீனவர்களுக்கும் கிடைக்கச்செய்ய வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (28-01-2020)