- தற்போது நடைபெற்றுவரும் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், ஒன்றிய அரசு ஒப்புதல் பெறத் திட்டமிட்டுள்ள 23 மசோதாக்களில் ஒன்றான கடல் மீன்வள (ஒழுங்காற்று) மசோதா (2021) மீனவர்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இம்மசோதா ஏற்கெனவே இருமுறை (2009, 2019) வெளியிடப்பட்டு, மீனவர்களின் பரவலான எதிர்ப்பால் கைவிடப்பட்ட ஒன்று.
- புரத உணவுத் தேவையின் பொருட்டு, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் ஒன்றிய அரசு விசைப்படகு, இழுவைமடித் தொழில்நுட்பங்களை மீனவர்களுக்குக் கொடுத்தது.
- இயந்திரங்களின் உதவியின்றி எளிமையான கலன்களில் சிறு தொலைவுக்குள்ளே மீன்பிடித்துத் திரும்பிய காலங்களில் பெருமுதலீடுகள் தேவைப்படவில்லை; இயக்குச் செலவுகளும் ஏற்படவில்லை.
- முதலீடு/ தொழில்நுட்ப அடிப்படையில் கட்டுமர/ நாட்டுப் படகு, இயந்திர நாட்டுப் படகு/ இயந்திரப் படகு, விசைப் படகு என்னும் மூன்று பிரிவினர் கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
- ஏறத்தாழ 90,000 விசைப் படகுகள் இந்தியக் கடல்களில் இயங்கிவருகின்றன. கரைக்கடலில் குறைவான கடற்பரப்பில், குறைந்துவரும் மீன்வளங்களை அறுவடை செய்வதில் மீனவர்களுக்கிடையில் கடும் போட்டியும் மோதல்களும் எழுகின்றன.
- நவீனத் தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை பெருமுதலீடு, எரிபொருள், பராமரிப்பு உள்ளிட்ட அன்றாடச் செலவினங்கள் புதிய நெருக்கடிகளாகும். முதலீடுகள் அதிகரிக்க அதிகரிக்க, அதிக அறுவடையைக் குறிவைத்து உள்கடலுக்குப் போகும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
- இந்தியாவின் முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பரப்பு 20.2 லட்சம் ச.கி.மீ. கரைக்கடல் பகுதிகளின் மிகை முதலீடும் தொழில் நெரிசலும் ஏற்பட்டிருக்கும் அதே வேளையில், ஆழ்கடலிலுள்ள மீன்வளம் யாரால் அறுவடை செய்யப்பட்டுவருகிறது?
-
- ஒன்றிய அரசு இந்தியக் கடல்களில் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, ஆழ்கடல் மீன்பிடிக் கொள்கை (1977), இந்தியக் கடல் மண்டலங்கள் (வெளிநாட்டுக் கப்பல் மீன்பிடி ஒழுங்காற்றுதல்) சட்டம் (1981), வரன்முறைக் கொள்கை (1986) ஆகியவற்றை வெளியிட்டது. நடைமுறையில் இவையனைத்தும் தோல்வியைத் தழுவின.
- தேசிய மீன்தொழிலாளர் பேரவையின் எதிர்ப்பு காரணமாக, இவ்வரன்முறைக் கொள்கை திரும்பப் பெறப்பட்டது. தொடர்ந்து, தேசிய மீன்வளக் கொள்கையின் கீழ் (1991) கூட்டு மீன்பிடித் திட்டத்தில் நரசிம்ம ராவ் அரசு, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கியது.
முக்கியமான பரிந்துரைகள்
- இதற்கு எதிராக மீனவர்கள் நாடுதழுவிய போராட்டத்தில் இறங்கினர். இந்தப் பின்னணியில் ‘சுதர்சன் குழு’ (1994) முக்கியமான பரிந்துரைகளை வழங்கியது; அவற்றில் சில:
- 1. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
- 2. (கூட்டு) மீன்பிடித் திட்டத்தின் கீழ், 100% வெளிநாட்டு முதலீடு கொண்ட இந்தியக் கப்பல் உள்ளிட்ட அனைத்துக் கப்பல்களிலும் இருப்பிடம் காட்டும் தொழில்நுட்பம் நிறுவப்பட வேண்டும்.
- 3. முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பகுதியில் இயங்கும் மீன்பிடிக் கலன்களுக்கு அறுவடை அறிக்கை முறையைக் கட்டாயமாக்க வேண்டும்.
- 4. பாரம்பரிய/ சிறுதொழில் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் பயிற்சி அளிக்க வேண்டும்; ஆழ்கடல் மீன்பிடித்தலில் இம்மீனவர்கள் இறங்கும் வண்ணம் மீனவர் கூட்டுறவு அமைப்புகளுக்கு உதவ வேண்டும்.
- ‘புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதன் காரணமாக இந்தியக் கடல்களில் மீன் பஞ்சம் நேர்ந்துள்ளது’ என முராரி குழு, அதன் அறிக்கையில் (1996) சுட்டிக்காட்டியது.
- முக்கியமாக, ‘ஒன்றிய அரசு பன்னாட்டுக் கப்பல்களின் மீன்பிடி உரிமங்களைத் திரும்பப் பெற வேண்டும்’ எனப் பரிந்துரைத்தது. ஆனால் சுதர்சன் குழு, முராரி குழு பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தவேயில்லை.
- உயர் அதிகாரக் கடல் மீன்வள நிலைக் குழு (2004) அனுமதிக் கடிதத் திட்டத்தின்படி, இரண்டு நிபந்தனைகளுடன் பன்னாட்டுக் கப்பல்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கியது:
- (அ) கப்பல்கள் கடல் பயண விவரங்களை இந்திய மீன்வள அளவைத் தளத்தில் (மும்பை) முன்கூட்டிச் சமர்ப்பிக்க வேண்டும்.
- (ஆ) காலாண்டுதோறும் அறுவடையை அறிக்கையிட வேண்டும்.
- ஆனால், திட்ட நிபந்தனைகளைக் கப்பல்கள் பின்பற்றவில்லை. இது தொடர்பாக நடுவண் குற்றப் புலனாய்வுக் குழு அளித்த அறிக்கையை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், ‘(இந்தியக் கடல்களில்) எத்தனை (மீன்பிடி) கப்பல்கள் இயங்கின, எந்தக் கப்பல்கள் என்னென்ன முறையில், எவ்வளவு அறுவடை செய்தன, எவ்வளவு அறுவடையை நடுக்கடலில் (தாய்க் கப்பல்களுக்கு) மடைமாற்றின என்கிற தரவுகள் இந்திய அரசிடம் இல்லை’ என்று குறிப்பிட்டது.
- இது குறித்து 03.05.2012 நாளிட்ட ‘தி இந்து’ நாளிதழ் ‘கடலைக் கொள்ளையிட ஓர் அனுமதித் திட்டம்’ என்று தலைப்பிட்டுச் செய்தி வெளியிட்டிருந்தது. ஐயப்பன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசு 2017-ல் அனுமதிக் கடிதத் திட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
- ‘வளரும் நாடுகள் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு வழங்கிவரும் மானியங்களும் சலுகைகளும்தான் ஆழ்கடல் மீன்வளங்களை அவை கொள்ளையிட வழிவகுக்கின்றன; அம்மானியங்களை நிறுத்திவிட வேண்டும்’ என்று உலக வாணிப அமைப்பு கடந்த வாரம் வலியுறுத்தியுள்ளது.
- சீனா, தென்கொரியா, தாய்லாந்து, இந்தோனேசிய மீன்பிடிக் கப்பல்கள் இந்தியக் கடல்களில் ஊடுருவி மீன்பிடிக்கின்றன. தொலைகடல் மீன்பிடிக்கு அனுப்பப்படும் 2,600 சீனக் கப்பல்களில் 500-க்கு மேற்பட்டவை இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியிலுள்ள மீன்வளங்களை அறுவடை செய்துகொண்டு போகின்றன.
- 1960-கள் தொடங்கி, ஒன்றிய அரசு நவீனத் தொழில் நுட்பங்களில் காட்டிவந்துள்ள தாராளவாத அணுகுமுறையும், வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களைக் கையாள்வதில் காட்டி வரும் அலட்சியமும்தான் கடல்மீன்வள வீழ்ச்சிக்கும் மீனவர் வாழ்வாதார இழப்புக்கும் முக்கியமான காரணங்கள் என்பதை இவ்விவரங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். வாழ்வாதார உரிமைக்கான மீனவர்களின் நெடிய போராட்டம் வலி மிகுந்தது.
- காந்தியப் பொருளாதார வல்லுநர் ஜே.சி.குமரப்பா, ‘அரசின் வேளாண் உற்பத்திக் கொள்கை லாபம் சார்ந்ததாய் இருக்காமல், இயற்கையையும் அதைச் சார்ந்த மக்களையும் முன்னிறுத்த வேண்டும்’ என்பார்.
- மீன்வள மேலாண்மையில் உலக நாடுகள் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு முன்னுரிமை தர வேண்டும் என உலக உணவு, வேளாண் அமைப்பின் ஆவணமான ‘பொறுப்பார்ந்த மீன்வள நடத்தை விதிகள்’ (1995) வலியுறுத்துகிறது.
- மீன்வளம் மாநிலப் பட்டியலின்கீழ் அமைந்த துறை. 12 கடல்மைலுக்கு உட்பட்ட கடலில் மிகைமுதலீடு, நாசகார மீன்பிடி போன்ற சீர்கேடுகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு அந்தந்த மாநில அரசினுடையதாகும்.
- ‘மீன்வளம் தொடர்பான சட்டங்களை உருவாக்குவதில் மாநிலங்கள் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்’ என்று கனிமொழி எம்.பி. குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
- நமது சட்டங்கள், நம் கடல்களின் மீன்வளங்களை நம் நாட்டு மக்களுக்குக் கரைசேர்க்கும் வகையில் வடிவம்பெற வேண்டுமேயன்றி, சிறுதொழில் மீனவர்களைக் கடலிலிருந்து வெளியேற்றும் ஆயுதமாகிவிடக் கூடாது. அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (21 - 07 – 2021)