TNPSC Thervupettagam

மீன் பிடிக்க கற்றுத் தரும் சுவீடன் கல்வி முறை: தமிழ்நாட்டின் புதிய இலக்கு

June 4 , 2024 221 days 170 0
  • குழந்தைகளை மையப்படுத்திய கொண்டாட்டமான கல்வி அளிப்பதில் சிறந்து விளங்கும் சுவீடன், நார்வே, டென்மார்க், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கல்வி அமைப்பைப் பார்வையிட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த வாரம் சென்றிருந்தார்.
  • அந்நாடுகளின் பள்ளிக்கூட வகுப்பறை செயல்பாடுகள், நூலகங்கள் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாகக் கவனித்தவர் அது தொடர்பான தகவல்களை சமூக ஊடக பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதில், 75 மொழிகள் பேசக்கூடிய மக்கள் வசிக்கும் சுவீடன் நாட்டில் அனைவரின் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருவதை வியப்புடன் பகிர்ந்திருந்தார்.
  • தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது. படிப்புக்குப் பசி ஒருபோதும் தடைக்கல்லாக இருத்தலாகாது என்று அரசு பள்ளிக்கூடத்தில் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்து நாட்டிற்கே வழிகாட்டிய மாநிலம் தமிழ்நாடு.
  • இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தில் அடுத்தடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை சிற்றுண்டித்திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசகல்வி மற்றும் உபகரணங்கள், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட தொழில் கல்வி படிப்புகளில் 7.5 % இட ஒதுக்கீடு, உயர்கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கும் சேர்த்து மாதந்தோறும் ஊக்கத்தொகை, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20% முன்னுரிமை உள்ளிட்ட மேலும் பல நலத்திட்டங்களை அமல்படுத்தியதன் விளைவாக இன்று தேசிய அளவிலான பள்ளிக்கல்வி தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
  • இந்நிலையில், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு பெருமை கொள்வதைக்காட்டிலும் கல்வியில் தலைசிறந்த நாடுகளிடமிருந்து தமிழ்நாடு எதையெல்லாம் கற்றிருந்து செயல்படுத்த வேண்டும் என்கிற இடத்துக்கு தற்போது முன்னேறி உள்ளது பாராட்டத்தக்கது.

பாகுபாட்டுக்கு எதிரான சட்டம்!

  • அதிலும் நோபல் பரிசின் தாய்வீடான சுவீடனிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள அநேகம் இருக்கவே செய்கிறது. நாங்குநேரி சாதி வெறி சம்பவத்திலிருந்து மாணவர் சின்னதுரை மீண்டெழுந்து பிளஸ் 2 தேர்வில் தடம் பதித்திருக்கும் இவ்வேளையில் இனி ஒருபோதும் இத்தகைய அநீதி தமிழ்நாட்டில் நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற சிந்தனை பேசுபொருளாகி இருக்கிறது.
  • இந்த விஷயத்தில் சுவீடன் கல்விச் சட்டம் முன்மாதிரியாகத் திகழ்கிறது. பள்ளி மாணவர்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு மற்றும் அவமதிப்பைக் களைவதில் தீவிரத்தன்மையுடன் ‘பாகுபாட்டுக்கு எதிரான சுவீடன் சட்டம்’ அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சுவீடன் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம்.
  • பள்ளி மாணவர்கள் எவரேனும் அவமதிக்கப்பட்டாலோ, தாழ்வாக நடத்தப்பட்டாலோ அதற்கான பொறுப்பை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இதிலிருந்து ஊக்கம் பெற்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கையில் 2020ஆம் ஆண்டில் சுவீடன் சட்டம் இணைக்கப்பட்டது.

ஜிடிபியின் பெரும்பகுதி கல்விக்கு:

  • அடுத்து, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்புவரை அங்கு அரசாங்கமே முற்றிலும் இலவசமாக வழங்கிவருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டாலும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே அங்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. மிக முக்கியமாக ஜிடிபியில் பெரும்பகுதியைக் கல்விக்கு சுவீடன் செலவிடுகிறது. இச்சமயத்தில் இந்தியாவில் கல்வியின் முக்கியத்துவத்தை முதன்முதலில் அழுத்தமாக உணர்த்திய 1968ஆம் ஆண்டின் கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரை நினைவுகூரத்தக்கது.
  • 14 வயதுவரை கட்டாய இலவச கல்வி, பெண்கல்வி உள்ளிட்ட முற்போக்கான இலக்குகளை வெளிப்படுத்திய கோத்தாரி ஆணையத்தின் பல பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதும் இன்று நாம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு அச்சாணி எனலாம். இருப்பினும் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றாக்குறையால் 55 ஆண்டுகள் கடந்தும் பல இலக்குகள் எட்டப்படாமல் இருக்கின்றன.
  • அதேபோன்று வகுப்பறையில் பாலின சமத்துவம் இன்றியமையாதது என்கிறது சுவீடன் கல்வி அமைப்பு. அனைத்து வகுப்புகளில் பயிலும் மாணவர்களும் மாணவிகளும் சுமுகமாக இணைந்து கற்றல் நடவடிக்கையில் ஈடுபடும் முறை அங்கு பின்பற்றப்படுகிறது. ஆனால், இன்றும் தமிழ்நாட்டில் உள்ள பல இருபாலர் பள்ளிகளில் இடைநிலை வகுப்பைத் தாண்டியவுடன் மாணவனும் மாணவியும் பேசி பழகவோ, இணைந்து அமர்ந்து படிக்கவோ அனுமதிக்கும் முதிர்ச்சி பல ஆசிரியர்களிடம் இல்லை என்பதுதான் கசப்பான நிதர்சனம்.
  • சுவீடன் பள்ளிகளில் சுவீடிஷ் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் என மொத்தம் 16 பாடப்பிரிவுகள் அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கப்படுகின்றன. இதில் கைவினை, விளையாட்டு, இசை, காட்சிக்கலை, வீட்டுப் பொருளியல் (Home Economics) போன்ற பாடங்களும் முதன்மை பாடங்களுக்கு இணையாக பயிற்றுவிக்கப்படுவது கவனிக்கத்தக்கது.
  • வீட்டுப் பொருளியல் என்பது பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது எனும் தத்துவத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட பாடத்திட்டமாகும். அன்றாட வாழ்க்கையில் நாம் செய்து வரும் செயல்கள் இந்த பாடப்பிரிவில் முறைப்படி கற்பிக்கப்படுகிறது. பணித்திறன்களோடு சேர்த்து வாழ்க்கைத்திறன்களையும் நாமும் நமது மாணவர்களுக்குக் கற்பிப்போமா!

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்