முதன்மை பெறுமா முன்வார்த்த கட்டுமானம்?
- பாறைகளைச் செதுக்கி உருவாக்கப்பட்ட தூண்கள், உத்தரங்கள், பலகைகள் போன்ற பாகங்களால் கட்டப்பட்டவைதான் மனிதர்களின் முதல் இருப்பிடங்கள். எகிப்தியப் பிரமிடுகளும் தென்னிந்தியக் கோயில்களும் அதே அடிப்படையில் கட்டமைக்கப்பட்டன. இவற்றை ‘முன்வடித்த கட்டுமானம்’ (Prefabricated Construction) என்று அழைக்கிறோம்.
- நாகரிக வளர்ச்சியில் சிமென்ட்- கான்கிரீட் கண்டுபிடிப்பு ஒரு மைல்கல். களத்தில் சாரம் அமைத்துக் கம்பி கட்டி, கான்கிரீட் வார்த்து உருவாக்கப்படும் முறையைக் களக் கட்டுமானம் (In Situ Construction) என்று அழைக்கிறோம்.
- பிற்காலத்தில், கட்டிடப் பாகங்களைத் தொழிற்சாலைகளில் வார்த்து, பிறகு அவற்றைக் களத்தில் இணைத்துக் கட்டுகின்ற தொழில்நுட்பம் வளர்ந்தது. இது ‘முன்வார்த்த கட்டுமானம்’ (Precast Construction) என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டனில் 1905இல் இக்கட்டுமான முறைக்குக் காப்புரிமை வழங்கப்பட்டது.
- இந்நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி, புதுப்புது சாதனங்கள் என்று அளப்பரிய உச்சியை எட்டியுள்ளோம். இருப்பினும், கான்கிரீட் பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றளவும் புதுமையானதாகவும் புதிராகவும் உள்ளது. கட்டுமான முறைகளை மறுஆய்வு செய்ய வேண்டியது தற்காலச் சூழலின் கட்டாயம்.
கான்கிரீட்டும் சுற்றுச்சூழலும்:
- மாசுபட்ட சுற்றுச்சூழலுக்கு மனிதன் மட்டுமல்ல, கான்கிரீட்டும் பலியாடுதான். கான்கிரீட் என்பது ஒரு சிக்கலான வேதிச் சேர்க்கை; இயற்கை வளங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட செயற்கைக்கல். இது சுற்றுச்சூழலுடன் இணையும்போது முரண்பாடாகி மீட்சியுறு வினை (Reversible reaction) விளைகிறது. மாசுபட்ட சூழலில் இவ்வினை துரிதமாகச் செயல்படுகிறது.
- நேற்றுவரை தரம் என்று சொல்லப்பட்ட கான்கிரீட் இன்று தரமற்றதாக அறிவிக்கப்படுகிறது. சில கட்டிடங்கள் மிகக்குறுகிய காலத்திலேயே பொலிவிழந்துவிடுகிறன. இதற்குத் தற்காலச் சுற்றுச்சூழலும் ஒரு காரணியாக அமைகிறது.
முன்வார்த்த கட்டுமானம்:
- கட்டிடங்களை வடிவமைக்கும் பொறியாளர்கள் கட்டிடப் பொருள்களின் தன்மைக்கேற்ப உரிய பாதுகாப்புக் காரணியைப் (Factor of Safety) பயன்படுத்துவார்கள். இரும்புக் கம்பிகள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவதால் 15 சதவீதமும் கான்கிரீட் களத்தில் தயாரிக்கப்படுவதால் 50 சதவீதமும் காரணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு சர்வதேச நடைமுறை.
- கான்கிரீட் பாகங்களைத் தொழிற்சாலைகளில் தயாரித்தால் தரம் உயரும். ஆகவே, பாதுகாப்புக் காரணி சிறிதாகும்; பொருள்செலவும் குறையும். இரண்டாவதாக, மதிப்புமிக்க கான்கிரீட்டின் தேவை குறைக்கப்படுகிறது. மூன்றாவது, தரமான கட்டிடங்கள் நீண்ட நாள்களுக்குப் பராமரிப்பின்றி உழைக்கும். மேலும் பல சாதகங்கள் இதில் உண்டு.
- வெள்ளநீர் வடிகால் பாலம்:
- கடந்த டிசம்பர் மாத பெருமழைக்குப் பிறகு வெள்ளநீர் வடிகால் பாலம் அமைக்கும் திட்டங்கள் தமிழகத்தில் பரவலாக நடைபெறுகின்றன. இத்திட்டத்தில் சில மாற்றங்கள் அவசியம். முதலாவதாக, வடிகால் பாலத்தின் வெட்டுமுகம் சதுரமாக உள்ளது. மாறாக, வட்ட வடிவில் அமைய வேண்டும். வட்ட வடிவம் சீரிய பொறியியல் பண்புகளைக் கொண்டது. அடியில் படிகின்ற மண்ணை எளிதில் அகற்றிப் பராமரிக்கலாம்.
- களத்தில் பள்ளம் தோண்டி, சாரம் அமைத்து, கம்பி கட்டி, கான்கிரீட் வார்த்து, நீராற்றி, சாரங்களைப் பிரித்து, பள்ளம் நிரப்பி வேலையை முடிப்பதற்குள் மக்களின் அவதி மாதக்கணக்கில் நீள்கிறது. சில இடங்களில் கான்கிரீட்டைக் களத்திலேயே தயாரிக்கிறார்கள். இப்படிப்பட்ட கட்டுமானங்களில் தரத்துக்கு உத்தரவாதம் கிடையாது.
- முன்வார்த்த கட்டுமானம் மேற்சொன்ன அனைத்துக் குறைபாடுகளையும் ஒருசேர நீக்கும். மேலும், தொழிற்சாலைகளில் ஒரு சிறப்புத் தொழில்நுட்ப முறையில் தரமானதாகவும் மிகக்குறைந்த செலவிலும் வட்டக் குழாய்களைத் தயாரிக்க முடியும். களத்தில் குழாய் வடிவக் கால்வாய் அமைக்க இயலாது.
அடுக்குமாடிக் குடியிருப்பு:
- புதுவையில் திறன்நகர் (Smart city) திட்டத்தின் கீழ் அடித்தட்டு மக்களுக்கு முன்வார்த்த கட்டுமான முறையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. கடந்த ஆறு மாத இடைவெளியில் 12 அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது கட்டிடம் வேகமாக வளர்கிறது. இக்கட்டிடங்கள் நகரின் மையப்பகுதியில் இரண்டு முக்கியச் சாலைகளை ஒட்டிக் கட்டப்படுகின்றன.
- அப்படியொரு கட்டுமானம் நடக்கிறது என்பதையே ஐந்து/ஆறு அடுக்குகள் வளர்ந்த பிறகுதான் பொதுமக்கள் உணர்ந்தார்கள். பகல் வேளைகளில் கட்டுமான கனரக வாகனங்கள் ஏதும் மக்களுக்கு இடையூறாக வருவதில்லை. ஜல்லி, மணல் குன்றுகள் சாலையை ஆக்கிரமிப்பதில்லை.
- பின்னிரவில் கட்டிட பாகங்கள் களத்தில் இறக்கப்பட்டு, எல்லைக் கதவுகள் அதிகாலை மூடப்பட்டுவிடும். பகல் வேளைகளில் பாரந்தூக்கி (crane) ஒன்று ஆரவாரமின்றி கட்டிடப் பாகங்களைத் தூக்கி நிலைநிறுத்தும். களத்தில் வேலையாள்களின் நடமாட்டம் தெரியாது. திட்ட வளாகத்திலிருந்து தூசிப்புயல்கள் கிளம்புவதில்லை. இவற்றால் அரசாங்கத்தையும் திட்டப் பொறியாளர்களையும் மக்கள் நிச்சயம் வாழ்த்துவார்கள்.
திட்டமிடல் அவசியம்:
- சில ஆண்டுகளுக்கு முன் சீனாவில் 15 அடுக்கு விடுதியொன்று 48 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டது தொடர்பான காணொளி வைரலானது. அது எப்படிச் சாத்தியமானது? ஆப்ரகாம் லிங்கன் சொன்ன கருத்தை இதில் பொருத்திப் பார்க்கலாம்: “ஒரு மரத்தை வெட்டிச் சாய்க்க எனக்கு 6 மணி நேரம் தாருங்கள்.
- அதில் நான்கு மணி நேரத்தைக் கோடாலியைக் கூராக்குவதில் செலவிடுவேன்.” சீனர்கள் லிங்கனின் வார்த்தைகளை முழுமையாக உள்வாங்கிஉள்ளனர்.
- நம் நாட்டில் திட்டமிடல் என்பது புறக்கணிக்கப்பட்ட ஒன்று. உதாரணத்துக்கு, சாலை விரிவாக்கப் பணிகளை எடுத்துக்கொள்வோம். நில ஆக்கிரமிப்பு, ஆற்றுப் பாலங்கள், கால்வாய்ப் பாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகளை முதலில் முடித்துவிட்டு, இறுதியில் சாலைப் பணியை ஆரம்பிக்க வேண்டும்.
- ஆனால், இறுதியில்தான் செய்ய வேண்டியதை முதலில் தொடங்கிப் பின்னோக்கி நகருகிறோம். முன்வார்த்த கட்டுமான வெற்றியின் ரகசியம் திட்டமிடல் என்கிற பலமான அடித்தளம்தான். ஆகவேதான் நம் நாட்டில் இக்கட்டுமானம் பெரிய அங்கீகாரம் பெறவில்லை.
- முன்வார்த்த கட்டுமானம் எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் கட்டாயமாக்கப்பட வேண்டும். மக்கள் நலத்திட்டங்களில் முன்னோடியான தமிழகம் ‘கலைஞர் கனவு இல்லம்’ என்கின்ற வீடு கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது. பள்ளிகளில் விரிவாக்கப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டிருக்கின்றன.
- இத்திட்டங்களில் இம்முறையைப் புகுத்தினால் அக்கட்டிடங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பெயரையும் முன்வார்த்த கட்டுமான முறையையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும்.
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 08 – 2024)