முதலீடு மட்டுமல்ல, உரிமைகளும் முக்கியம்!
- திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் வேலை செய்ய வேண்டுமா கூடாதா என்ற விவாதத்தையே எழுப்பியிருக்கிறது, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் செயல்பாடு. திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் அதிக விடுப்பு எடுப்பார்கள்; குழந்தைப்பேறு ஒரு பிரச்சினையாக இருக்கும், இந்து திருமண முறைப்படி அணியும் தாலி அல்லது ஆபரணம் உற்பத்தித் தளத்தில் ஆபத்து விளைவிப்பதாக இருக்கும் என்றெல்லாம் காரணங்களை முன்வைத்து, திருமணமான பெண்களுக்கான பணிவாய்ப்பை இந்நிறுவனம் மறுப்பதாக எழுந்த புகார்கள்தான் இந்த விவாதத்தின் பின்னணி.
- ஜூன் 25 இல் சர்வதேசச் செய்தி நிறுவனம் ஒன்று இதுகுறித்து செய்தி வெளியிட்டது. ஓராண்டு காலத்தில் அந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள் 20க்கும் மேற்பட்ட முறை ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்குச் சென்று பார்வையிட்டும், விவரங்கள் சேகரித்தும் இந்தச் செய்திக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.
- உலகின் மிகப் பெரிய கைபேசி உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் பிரமிக்கத்தக்க விடுதி, 17,800 நபர்களுக்கான படுக்கைகள், உணவுக்கூடம், விளையாட்டு வசதிகள் இன்னும் பல வசதிகளைக் கொண்டது. ஆனால், விடுதிகளில் திருமணமாகாத இளம் பெண்கள் மட்டுமே தங்க முடியும் எனக் கூறப்படுகிறது. எனினும், நிறுவனத்தின் தைவான் நாட்டுத் தலைமையகம், திருமணம் செய்வோர் வேலை செய்யத் தடையல்ல என்று தெரிவிக்கிறது. என்னதான் பிரச்சினை?
- சட்டம் சொல்வதென்ன?
- இந்தியாவில் 1961 இல் நிறைவேற்றப்பட்ட சட்டம், 80 நாள்கள் பணி செய்த பெண் ஊழியரும், மகப்பேறு சட்டப் பலன்களை அனுபவிக்க முடியும் எனக் கூறுகிறது. 2017 இல் சட்டத் திருத்தம் மூலம் 26 வாரங்கள் மகப்பேறு விடுப்புப் பலன்களை அனுபவிக்க வழிவகை செய்கிறது. தனியார் நிறுவனங்களுக்கும், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. ஆனால், ஃபாக்ஸ்கான் நிறுவனமோ மகப்பேறு விடுப்பு வழங்குவதற்குப் பதிலாக, திருமணம் செய்துகொண்ட பெண்களை வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டோம் என ஒரு தனி நிபந்தனை விதிக்கிறது.
- தொழில் முதலீடுகளைக் கண்மூடித்தனமாக எதிர்க்க முடியாது. வேலைவாய்ப்புக்காகத்தான் வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறோம், சலுகைகள் வழங்குகிறோம் என்பது, அரசுகள் வெளியிடும் முக்கியமான செய்தி. எனினும், இத்தகைய நிறுவனங்கள், அரசுகளிடம் இருந்து பெறும் சலுகைகளுடன் ஒப்பீடு செய்தால், அவை வழங்கும் வேலைவாய்ப்பு உயர்ந்ததாகவும், மனித உரிமைகளை மதிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
- மாற வேண்டிய பார்வை:
- பெண்கள் குழந்தை பெறும் இயந்திரங்கள் அல்ல என்றும், கருத்தடை செய்துகொள்வது குறித்தும் 1930களிலேயே பெரியார் பேசியுள்ளார். பெரியார் குறிப்பிட்ட பெண் விடுதலை என்பது குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை சார்ந்து பேசுகிறது. சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் இப்படியான பெண் உரிமை குறித்துத் தமிழ்நாட்டு மக்கள் விவாதித்துள்ளனர்.
- இன்று அதைவிடப் பல மடங்கு முன்னேறிய சிந்தனையும் செயல்களும் தேவைப்படுகின்றன. நிறுவனங்கள் பல ஆண் தொழிலாளர்களுக்கு, தந்தைமைப் பேறு விடுப்பு என அனுமதிக்கும் முன்னேற்றத்தை, நமது நாட்டிலும் பெற்றுள்ளோம். எனவே, வேலை செய்யத் திருமணம் தடையல்ல என்பதைத் தனியார் நிறுவனங்களுக்கு நமது அரசுகள் வலியுறுத்த வேண்டும்.
- அரசுகளின் கடமை: ஃபாக்ஸ்கான் தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்கள், தனது நிறுவனம் உருவாக்கியுள்ள விடுதியில் தங்க வலியுறுத்துகிறது. அக்கறை, நலன் போன்ற சொல்லாடல்கள் சார்ந்து, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா அல்லது உற்பத்தி சார்ந்து பின்பற்றப்படுகிறதா என்பதை விவாதிக்க வேண்டியுள்ளது. பெண்களுக்கான தனிப்பட்ட விருப்பங்களும் உரிமைகளும் இதன் மூலம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
- சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, ஐக்கிய நாடுகள் அவையினால் வழிநடத்தப்படுகிறது. அதேபோல் பொருளாதாரம் - வளர்ச்சிக்கான ஒத்துழைப்புக்கான நாடுகளின் அமைப்பு (Organisation for Economically Co Operation and Development) என்ற அமைப்பும் உள்ளது. இரண்டு அமைப்புகளும் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகளை இணைத்து வழிகாட்டுதல்களை அளித்துள்ளன.
- அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இஸ்ரேல் உள்ளிட்ட 38 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பில், இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் இடம்பெறவில்லை. எனினும், இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தொழில் முதலீடுகள், இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, பிரேசில் நாடுகளில் அதிகம் உள்ளன. மனிதவளம், உள்நாட்டுச் சந்தை ஆகியவையும் மேற்படி முதலீடுகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன.
- இதன் காரணமாக 38 நாடுகளுக்கு உள்ளும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வலியுறுத்தப்படுகின்றன. இவற்றில் - மனித உரிமைகள் மீறப்படக் கூடாது; முதலீடு செய்யப்பட்ட நாடுகளின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்பது போன்றவை மிக முக்கியமானவை. இந்த அடிப்படையில் அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனவா, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வலியுறுத்தும் பல்வேறு வகையிலான தொழிலாளர் உரிமைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதையெல்லாம் கண்காணிப்பதும், அமலாக்க வழிவகை செய்வதும் அரசின் கடமை.
- சாதகமும் பாதகங்களும்:
- முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த காலத்தில் அதிமுக அரசும் இதை மேற்கொண்டது. பிரதமர் மோடி தனது ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும், வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும் வகையில் பேசிவருகிறார். இதன் மூலம் இந்தியாவில் முதலீடுகள் குவிந்துவருவதையும், வேலைவாய்ப்பு அதிகரிப்பதையும் மறுக்க முடியாது. மறுபுறம், மனித உரிமைகள் மீறப்படுவது அதிகரிக்கிறது என்பதை ஏராளமான ஆய்வுகள் தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றன.
- தொழிலாளர்களையும் வாழும் இடங்களையும் பாதுகாக்கும் சுற்றுச்சூழல் சார்ந்த சட்ட வரையறைகள் என்ன, அதில் எவ்வாறு மீறல்கள் நடந்துள்ளன, எந்தெந்த நிறுவனங்கள் மீறியுள்ளன என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு, வழக்குகளும் நடந்துள்ளன. தமிழ்நாட்டிலும் உணவு விநியோகிக்கும் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சினைகள் இப்படியான குற்றச்சாட்டுகளில் இடம்பெற்றுள்ளன.
- உரிமைகள் வலுவாக முன்வைக்கப்படும்போது, நிறுவனங்களை வேறு மாநிலங்களுக்குக் கொண்டுசென்றுவிடுவதாக நிர்வாகங்கள் அச்சுறுத்துவது நடைபெறுகிறது. திறன் படைத்த தொழிலாளர்கள் மூலமே தொடர் முன்னேற்றம் சாத்தியம். நீடித்த வளர்ச்சி என்பது உள்நாட்டுச் சந்தை, மக்களின் வாங்கும் சக்தி உயர்வு ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. தமிழ்நாடு இரண்டு வகையிலும் முன்னேறிய மாநிலமாக உள்ளது. எனவே, இடம்பெயர்ந்து விடுவோம் என்ற அச்சுறுத்தலுக்கு அடிபணிந்துவிடக் கூடாது.
- இது போன்ற பேரங்கள் மனித உரிமை மீறலுக்கு உதவுவதாக மாறிவிடும் அபாயம் இருப்பதை உணர வேண்டும். முதலீடுகள் தேவைதான். கூடவே மனித உரிமைகள், தனி மனிதச் சுதந்திரம் போன்ற அடிப்படையான ஜனநாயக மாண்புகளும் மதிக்கப்பட வேண்டும். மற்றொரு புறம் இந்தியாவில், பிளாச்சிமடா உள்ளிட்ட பகுதிகளில் குளிர்பான நிறுவனங்கள் அமைக்கப்பட்டபோது குடிநீர், நிலத்தடி நீர்வளம் ஆகியவை பாதிக்கப்படக் கூடாது என்ற உத்தரவுகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
- இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 21, வாழும் உரிமையையும் தனிமனிதச் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமை என்கிறது சட்டக்கூறு 51(A). இதில் அரசுக்கு முதல் பொறுப்பு இருப்பதை மறந்துவிட முடியாது.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 09 – 2024)