TNPSC Thervupettagam

முதலீட்டுக்கு நல்ல தருணம்

March 6 , 2022 883 days 410 0
  • தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை  திடீரென உயரத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இது அனைத்து நாடுகளுக்கும் பெரும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதனால், ஆளும் அரசுகள் பெரும் கவலையை எதிர்நோக்குகின்றன.
  • ஆனால், உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. அதே நேரத்தில், பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வோர் உற்சாகம் பெற்றுள்ளனர். இவை எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். 
  • உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் நடவடிக்கை. உக்ரைன் - ரஷியா இடையேயான போர் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தைக் கண்டிப்பாகப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், நிதிச் சந்தைகள் திடீரென சரிவைச் சந்தித்து, முதலீடுகளை மேற்கொள்வதற்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல தருணமாகவும் இருக்கும் என்கின்றனர்.
  • கடந்த இரண்டு வாரங்களாக மோசமடைந்து வரும் உக்ரைனின்  நிலை, மேலும் அதிகரித்து வருகிறது. அதன் நெருக்கடி உலகளாவிய பங்குச் சந்தைகளை நிலையற்ற தன்மைக்கு தள்ளியுள்ளது. ஏற்கெனவே பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் உயர்வு, உலக அளவில் பங்குச் சந்தைக்கு கவலைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளன. எரிபொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது. 2014-க்குப் பிறகு முதல் முறையாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் 100 டாலரை நெருங்கியது.
  • முன்பேர வர்த்தகத்தில் ஜனவரி 28 அன்று 1,791 டாலராக (சுமார் ரூ.1,34,460) இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம், உக்ரைன் மீதான  போர் பதற்றத்தால் பிப்ரவரி 23 அன்று 1,907 டாலராக (சுமார் ரூ.1,43,168) உயர்ந்தது. இந்தியாவைப் பொருத்தவரை, பிப்ரவரி 17-இல் ரூ.49,970-ஆக இருந்த 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை, ஒரே வாரத்தில் அதாவது, பிப்ரவரி 24 அன்று ரூ.51,550-ஆக உயர்ந்தது.
  • ஒருபுறம் புவிசார் அரசியல், பதற்றம் மற்றும் பணவீக்க அபாயத்தை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் உலகளாவிய பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கத்துக்கு வழிவகுத்துள்ளது.  மறுபுறம் உயர்ந்த புவிசார் அரசியல், பதற்றங்கள் மற்றும்  அவற்றின் சாத்தியமான தாக்கம் உலகளாவிய வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் அபாயம் தோன்றியுள்ளது.
  • இந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ரஷியா மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. இவை அனைத்தும் நிதிச் சந்தைக்கு தற்போது ஆறுதல் அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் உலக அளவில் ரஷியா - உக்ரைன் போர் நெருக்கடி பற்றிய செய்தி ஓட்டத்தை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். 
  • இதற்கிடையே, மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவையானது, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 7%-லிருந்து 9.5%-ஆக உயர்த்தியுள்ளது. கரோனாவால் 2020-இல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம், எதிர்பார்ப்பையும்விட வேகமாகவும், வலுவாகவும் மீட்சி பெறும் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.
  • ஆனால், உக்ரைன் மீதான ரஷியப் போரைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இதன் தாக்கம் பங்குச் சந்தை, நிதிச் சந்தைகளில் நேரடியாக எதிரொலிக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், நீண்ட கால அடிப்படையில் முதலீடுகளை மேற்கோள்வோர் குறைவான விலையில் நல்ல வலுவான அடிப்படைகளைக் கொண்ட பங்குகளை வாங்குவதற்கும், மியூச்சுவல் பண்ட், கடன்பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடுகளை மேற்கொள்ளவும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
  • போர்ச் சூழல், அரசியல் தாக்கம், பொருளாதாரப் பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் இந்திய பங்குச் சந்தைகள் சராசரியாக 16.5% வரை சரிவைச் சந்தித்துள்ளன. அதே சமயம், அதற்குப் பிறகு மூன்று மாத காலங்களில் 23%, 6 மாதங்களில் 34%-மும் ஏற்றம் கண்டுள்ளன.
  • இதேபோன்று அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் வரலாற்றை எடுத்துப் பார்த்தாலும் இதைத்தான் காண முடியும். 2011 தாக்குதலின்போது டோவ் ஜோன்ஸ் 16% சரிந்தது. ஆனால், அடுத்த மூன்று மாதங்களில் 25%, 6 மாதங்களில் 30% உயர்ந்தது. இதன் அடிப்படையில்தான் இந்தத் தருணம் முதலீட்டுக்கு உகந்ததாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
  • உக்ரைன் மீதான ரஷியப் போர் தொடரும் நிலையில், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்துக்கு அதிக மவுசு ஏற்படும். அதே சமயம் எரிபொருள்கள், தானியங்கள் மற்றும் உலோகங்கள் விலை நிலையற்ற தன்மையில் இருப்பதற்கு அதிக வாய்ப்பும் உள்ளது. ஆனால், முதலீடுகளை மேற்கொள்வோருக்கு ஒரு பொற்காலமாக அமையும் வாய்ப்பும் உள்ளது.
  • எவ்வாறாயினும், உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை, முதலீட்டாளர்களுக்கு முதலீடுகளை வேகமாகவும், விரைவாகவும் செய்வதற்கான ஒரு நல்ல தருணமாகும்...!

நன்றி: தினமணி (06 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்