TNPSC Thervupettagam

முதல்வரின் அமீரகப் பயணம் புதிய முதலீடுகள் புதிய வேலைவாய்ப்புகள்

March 30 , 2022 860 days 373 0
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி நகரங்களுக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சுற்றுப்பயணமும் அங்குள்ள முன்னணித் தொழில் நிறுவனங்களோடு அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளும் புதிய முதலீடுகளையும் புதிய வேலை வாய்ப்புகளையும் பெற்றுத்தந்திருக்கின்றன.
  • அபுதாபியில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய முதல்வர், இந்தப் பயணத்தில் முதற்கட்டமாக ரூ.6,100 கோடி மதிப்பிலான தொழில்கள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
  • குறிப்பாக, லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் தொடங்கவுள்ள 3 தொழில்கள் 5,000 வேலைகளை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ள நிலையில், அந்நிய நேரடி முதலீடுகளின் வழியாக அதை விரைந்து செய்துமுடிக்க முதல்வர் களத்தில் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது.
  • இந்தியாவின் தொழில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் துபாயில் நடத்தப்படும் தொழில் கண்காட்சிகளில் பங்குபெறுவதிலும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர ஆர்வம் காட்டிவருகின்றன.
  • சமீப காலமாக, தென்னிந்திய மாநிலங்கள் இம்முதலீடுகளை ஈர்ப்பதில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றன.
  • வணிகரீதியாக மட்டுமின்றி, கலாச்சாரரீதியாகவும் தென்னிந்தியாவுக்கும் ஐக்கிய அமீரகத்துக்கும் இடையே ஒரு பிணைப்பு வலுப்பட்டுவருகிறது.
  • ஐந்து மாதங்களுக்கு முன்னால் தொழில் கண்காட்சி தொடங்கியபோது, துபாயின் உலகப் புகழ் பெற்ற புர்ஜ் கலீபா கட்டிடத்தில் நவராத்திரியையொட்டி தெலங்கானாவின் மலர்த் திருவிழா கொண்டாடப்பட்டது.
  • ஏ.ஆர்.ரஹ்மான் தெலுங்கில் இசையமைத்த பாடலும் அப்போது அங்கு ஒலிபரப்பப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில் கண்காட்சியில் பங்கேற்ற ஆந்திரப் பிரதேச மாநிலம் ரூ.10,350 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
  • மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் இக்கண்காட்சியில் பங்கேற்றார்.
  • மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து முதலீடுகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், தமிழ்நாடும் தன்னை இம்முயற்சிகளில் ஈடுபடுத்திக்கொண்டிருப்பது காலத்தே எடுத்த மிகச் சரியான முடிவு.
  • தமிழ்நாடு முதல்வரின் இப்பயணத்தில் உணவு பதப்படுத்துதல், ஜவுளி, உள்கட்டமைப்பு என்று பல்வேறு தொழில்துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டிருந்தாலும் மின்சக்தியால் இயங்கும் வாகன உற்பத்தித் தொழில்துறையில் முதலீடுகள் செய்யுமாறு அவர் விடுத்திருக்கும் அழைப்பு மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்டது.
  • வாகன உற்பத்தித் துறையில் இந்தியாவின் முன்னணித் தொழில் நகரமாக விளங்கிவரும் சென்னை, அடுத்த வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
  • அதிகரித்துவரும் பெட்ரோலிய எரிபொருட்களின் தேவையைக் குறைப்பதற்காக, உலகம் முழுவதுமே மின்சக்தியால் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியில் ஆர்வம் காட்டப் படுகிறது.
  • இந்நிலையில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் அத்தகைய ஒரு தொலைநோக்குத் திட்டத்துக்கு முதல்வரின் இந்த நான்கு நாள் வெளிநாட்டுப் பயணம் வித்திட்டுள்ளது.

நன்றி: தி இந்து (30 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்