TNPSC Thervupettagam

முதல்வரின் முன்னுதாரணம்

March 8 , 2023 514 days 269 0
  • தமிழகத்தில் பிகார் மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் போலியான காட்சிப் பதிவுகள் பரப்பப்பட்டதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. உண்மை நிலையைக் கண்டறிய, பிகாரில் இருந்து அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினர் தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அளவுக்கு நிலைமை தீவிரமானது.
  • இதற்கிடையே, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல, திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டு வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் (37) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு இறக்க, அவர் கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகத்தில் நூற்றுக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் திரண்டனர். பரப்பப்பட்ட வதந்திகளால் ஏற்பட்ட பீதியில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெளியேறத் தயாரானார்கள்.
  • வடமாநிலத் தொழிலாளர்கள் வெளியேறினால் தங்கள் தொழில் முடங்கும் அபாயம் ஏற்படும் என்றும், இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், கட்டுமான சங்கங்கள், பின்னலாடை உற்பத்தி உள்ளிட்ட ஜவுளி தொழில் துறையினர், கோவை உற்பத்தி தொழில் துறையினர் உள்ளிட்ட பலரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சூழலில், இந்த வதந்தியைப் பரப்பியதாக பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை (மார்ச் 6) கைது செய்துள்ளதால் இப்போதைக்கு பதற்றம் குறைந்திருக்கிறது.
  • இதுபோன்ற பிரச்னை திடீரென ஏற்பட்டதல்ல. திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில் தேங்காய் உரிக்க உள்ளூர் தொழிலாளர்கள் ஒரு தேங்காய்க்கு 75 முதல் 80 பைசா பெற்று வந்த நிலையில், வட மாநிலத் தொழிலாளர்கள் 55 பைசாவுக்கு தேங்காய் உரிக்க முன் வந்தனர். இதனால், உள்ளூர் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகையில் ஈடுபடும் அளவு பிரச்னை தீவிரமானது.
  • தமிழ்நாட்டில் சென்னை மட்டுமல்லாமல், கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களிலும் ஒசூர் போன்ற சிறு நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நெடுஞ்சாலைப் பணிகள், மேம்பாலப் பணிகள் உள்ளிட்ட உடலுழைப்பு தேவைப்படும் எந்தப் பணியையும் குறைந்த ஊதியத்தில் அவர்கள் மேற்கொள்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு இடம், சுமாரான ஊதியம், உணவுக்கான ஏற்பாடுகளை நிறுவன உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் தினமும் 12 மணி நேரம்கூட உழைக்க அவர்கள் தயாராக உள்ளனர்.
  • ஓரளவு வளர்ச்சி அடைந்த பகுதிகளை நோக்கி வேலைவாய்ப்புக்காக செல்வது என்பது புதிதல்ல. காலங்காலமாக நடந்துவருவதுதான். பல பத்தாண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மும்பை, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் சென்றனர். இப்போது கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதேபோன்றுதான், பிகார் போன்ற வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களில் இருந்து தமிழகம் நோக்கி தொழிலாளர்கள் வரத் தொடங்கி உள்ளனர்.
  • சில பத்தாண்டுகளுக்கு முன் மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியினர் தமிழர்களைத் தாக்கியதையும், காவிரி பிரச்னை ஏற்படும்போதெல்லாம் கர்நாடகத்தில் மொழிவெறி கொண்ட சில கன்னட அமைப்பினர் தமிழர்களைத் தாக்கியதையும் பார்த்தோம். தமிழகத்திலேயே, "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' கோஷம் எழுந்ததையும், மலையாளிகளுக்கு எதிரான பரப்புரை கடந்த நூற்றாண்டில் நடந்ததையும்கூட சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
  • உலகின் பல நாடுகளிலும் பல இடங்களில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள். கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக உள்ளார். எஸ்.ஆர்.நாதன் சிங்கப்பூர் அதிபராக இருந்துள்ளார். சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) உள்ளார். இவை எடுத்துக்காட்டுகள். தமிழர்களும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் போன்று மற்ற மாநிலங்களைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியர்களும் பல்வேறு நாடுகளிலும் மிகப் பெரிய பொறுப்புகளில் உள்ளனர்.
  • மாறிவரும் உலக சூழலில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு வேலைவாய்ப்பு தேடி செல்வது என்பது தவிர்க்க முடியாதது. மேலும், அரசியலமைப்பு சட்டப்படி, இந்திய குடிமகன் தான் விரும்பும் எந்தப் பகுதியிலும் பணிபுரிவதற்கு உரிமை உள்ளது. இந்த உரிமை காக்கப்பட வேண்டும்.
  • மத்திய பிரதேசம், ஹரியாணா மாநிலங்களைப் போல தமிழகத்தில் யாரும் "மண்ணின் மைந்தர்கள்' கோஷம் எழுப்பவில்லை. முன்பு பெங்களூரிலிருந்தும், மும்பையிலிருந்தும், தில்லியிலிருந்தும் பிகார் மாநிலத்தவர்களும், வடகிழக்கு மாநிலத்தவர்களும் அடித்து விரட்டப்பட்டது போன்ற நிலைமை இங்கே இல்லை.
  • சமூக ஊடகங்களைப் பொறுப்பில்லாமல் கையாள்வதும், பொய்ப்பரப்புரைகளுக்குப் பயன்படுத்துவதும் தயவுதாட்சண்யமில்லாமல் தடுக்கப்பட (தண்டிக்கப்பட) வேண்டும். இந்தப் பிரச்னையில் அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி பிரச்னையை மேலும் தீவிரமாக்கக் கூடாது.
  • உண்மைக்கு மாறாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தமிழக அரசு இந்த பிரச்னையில் எடுத்திருக்கும் துணிவான நடவடிக்கைகளும், நிர்வாக ரீதியிலான முனைப்புகளும் பாராட்டுக்குரியவை மட்டுமல்ல, ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் அமைகின்றன.

நன்றி: தினமணி (08 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்