TNPSC Thervupettagam

முதல்வர் அதிகாரத்தின் மீது ஆசையா

November 28 , 2022 708 days 465 0
  • இந்தியாவில் 28 மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி, டெல்லி ஆகியவை ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிக்குள்பட்ட, ஆனால் சட்டப்பேரவைகளைக் கொண்ட மாநிலங்கள். ஜம்மு - காஷ்மீரம் (லடாக்) மூன்று ஒன்றிய ஆட்சிப் பிரதேசங்களாக பிரிக்கப்படும்வரை ஒரே மாநிலமாக இருந்தது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு ஆளுநர், ‘சம்பிரதாயமான தலைவராக’ பதவி வகிக்கிறார்.
  • மாநிலச் சட்டப்பேரவைகளுக்குப் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. மாநிலச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அதிக உறுப்பினர்கள் வென்றுள்ள கட்சியின் தலைவர் ஆட்சி அமைக்குமாறு அழைக்கப்படுவார். அவரே முதல்வர். முதல்வர் என்பவர் அந்தந்த மாநிலத்தின் – தேர்ந்தெடுக்கப்படும் - மக்கள் தலைவர். முதல்வரின் ஆலோசனைப்படியே மாநில அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். இதை பிரிட்டனின் ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ நாடாளுமன்ற ஜனநாயக மாதிரி என்று அழைக்கிறார்கள். இந்த நிர்வாக ஆட்சிமுறையைத்தான் இந்தியா  கடைப்பிடித்துவருகிறது. அங்குமிங்குமாக சில பிறழ்வுகள் நடந்தாலும் அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன.

ஒரே அரசு

  • இந்த ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ முறையை விரும்பாதவர்களும் உண்டு. இன்னும் விரிவுபடுத்திச் சொல்வதானால் - அவர்களுக்கு மாநிலங்கள் என்ற நிர்வாக அமைப்புகூட பிடிப்பதில்லை; தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகளைக்கூட அவர்கள் விரும்புவதில்லை; முதல்வர்களையும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால், அவர்களுக்கு மாநிலங்களில் தனி அரசுகள் இருப்பதே பிடிக்கவில்லை, எனவே அவற்றையெல்லாம் ஒழித்துவிட வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
  • 142.60 கோடி மக்களைக் கொண்ட சீனத்தை ஒரேயொரு அரசு ஆள முடியும் என்றால், 141.20 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவையும் ஏன் ஒரே அரசு ஆளக் கூடாது என்றே நினைக்கிறார்கள்; ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ மாதிரியை விரும்பாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அவர்களில் சிலர், மாநில ஆளுநர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர்.
  • மாநில ஆளுநர் என்பவர் மாநில அரசுகளுக்கு (சம்பிரதாயமான) ‘அடையாளத் தலைவர்’ மட்டுமே; பிரிட்டனில் ‘பேரரசர்’ அரசுக்குத் தலைவராக இருப்பதைப் போல. மாநில ஆளுநர்களின் வரம்புகளையும், அதிகாரங்களையும் அரசமைப்புச் சட்டத்தின் 163வது கூறு பின்வருமாறு விளக்குகிறது:
  • “மாநிலங்களில் அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை இருக்கும். அதன் தலைவராக முதல்வர் செயல்படுவார். ஆளுநர், நிறைவேற்ற வேண்டிய தன்னுடைய கடமைகளை மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படியே நிறைவேற்ற வேண்டும். அரசமைப்புச் சட்டப்படியான கடமைகளை மட்டுமே அவர் செய்ய வேண்டும். அந்தச் சட்டம் அளிக்கும் விருப்புரிமைகள்படி செயல்பட வேண்டும்.” 
  • அரசமைப்புச் சட்டம் மிகவும் நேரடியாகவும் எளிமையாகவும் இதைச் சொல்லிவிட்டது. நாம் ஏற்றுக்கொண்ட ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ முறைப்படி – அரசமைப்புச் சட்டத்தின் 163வது கூறும் தெரிவிக்கிறபடி, பிரிட்டனின் பேரரசரைப் போலவே ஆளுநர் என்பவருக்கும் உண்மையில் அதிகாரம் கிடையாது. அரசமைப்புச் சட்டம் எதிர்பார்க்கிற தருணங்களில் மட்டும்தான் - அவர் தனது விருப்புரிமையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இதிலும் சந்தேகப்பட்டு விளக்கம் கேட்போர் பலர் இருப்பார்கள். அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் ‘சம்ஷேர் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு’ வழக்கில் நீதிபதி கிருஷ்ண ஐயர்  தீர்ப்பளித்திருக்கிறார்:
  • “விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர்த்து, குடியரசுத் தலைவரும் மாநில ஆளுநரும் தங்களுடைய அரசமைப்புச் சட்டப்படியான அதிகாரத்தை, மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படியே மேற்கொள்ள வேண்டியவர்கள் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் இந்த சட்டப்பிரிவு கூறுகிறது என்று தெளிவுபட அறிவிக்கிறோம்.”

வரம்புகளை மீறி

  • இருந்தும், மாநில முதல்வர்களைத் தனக்குக் கீழானவர்களாகக் கருதி அவர்களை அதிகாரம் செய்ய விரும்பும் ஆளுநர்களும் நம்மிடையே இருக்கின்றனர். அவர்கள் ‘முதல்வரைப் போல’ மாநில நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்த விரும்புகின்றனர்.
  • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா, சட்டமாக ஆளுநரின் ஒப்புதல் வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவு, ‘ஆளுநர் தன்னுடைய ஒப்புதலைத் தரலாம், அல்லது ஒப்புதல் தராமல் நிறுத்திவைக்கலாம், அல்லது குடியரசுத் தலைவர் பரிசீலனை செய்யட்டும் என்று அனுப்பிவிடலாம்’ என்கிறது. ‘மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர விரும்பாவிட்டால் மசோதாவை சட்டப்பேரவையின் மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்பிவிட வேண்டும்.
  • அதே மசோதா திருத்தங்களுடனோ அல்லது திருத்தங்கள் இல்லாமல் அதே பழைய வடிவிலோ மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் - ஆளுநர் தன்னுடைய ஒப்புதலைத் தந்தாக வேண்டும்’ என்கிறது அரசமைப்புச் சட்டம்.
  • பல ஆளுநர்கள், தங்களுடைய கையெழுத்துக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமலே சும்மா இருந்துவிடுகிறார்கள். அதற்குச் சொல்லும் காரணம், ’மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருக்கிறது’ என்பது. மேலோட்டமாகப் பார்த்தால் இது சரி, ஆனால் உள்நோக்கம் என்னவோ தவறானது. ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் தருவதா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க ஆளுநர் எத்தனை முறை படித்துப் பார்ப்பார்? மசோதாவில் என்ன இருக்கிறது என்று படித்துப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாவிட்டால், ஆளுநர் பதவியிலிருந்தே அவர் விலகிவிட வேண்டும்.
  • ஆளுநர்கள் மாநில அரசுகளின் கருத்துகளுக்கு முரண்பட்ட கருத்துளை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையையும், அதன் மும்மொழிக் கொள்கையையும் ஒரு மாநில அரசு எதிர்க்கிறது. அந்த மாநில ஆளுநர் மாநில அரசின் இந்தக் கருத்துக்கு முரணான கருத்துகளைத் தெரிவிக்கிறார், இதில் மட்டுமல்ல, வேறு பல விவகாரங்களிலும் மாநில அரசின் கருத்துக்கு எதிராகவே கருத்து தெரிவிக்கிறார். அந்த மாநில ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டுமென்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மாநில அரசின் ஆதரவோடு - கோரிக்கை மனு தயாரித்து அதைக் குடியரசுத் தலைவரிடமே அளிக்கின்றனர்.
  • ஆளுநர்கள் மாநில மக்களின் உணர்வுகளுக்குப் புறம்பான கருத்துகளை, அவர்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டிவிடும் வகையில் தெரிவிக்கின்றனர். ‘சத்ரபதி சிவாஜி, கடந்த காலத்தில் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட செல்வாக்கான வரலாற்று நாயகர்’ என்று ஒரு ஆளுநர் கூறுகிறார். இதைக் கேட்டு அந்த மாநிலம் முழுவதும் கொதித்தெழுகிறது. ஆளுநருக்கும் - ஒன்றிய அரசுக்கும் ஆதரவுப் போக்குள்ள அந்த மாநிலத்து ஆளுங்கட்சிகூட, ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்கிறது.
  • ஆளுநர்கள் விரும்பத்தகாத கருத்துகளையும் வெளியிடுகின்றனர். “தன்னுடைய உறவினருக்குப் பதவி தருமாறு முதல்வரின் அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர், துணை வேந்தருக்கு நெருக்குதல் தந்ததுகூடத் தெரியாது என்றால், அந்த முதல்வர் எந்த அளவுக்குத் திறமையற்றவர் என்பது வெளிப்படுகிறது; தெரியும் என்றால் அந்தக் குற்றத்துக்கு அவரும் உடந்தை” என்று ஆளுநர் பேசுகிறார். அதே ஆளுநர் முன்னர் தெரிவித்திருந்த ஒரு கருத்தும் ரசனைக் குறைவானது; “முதல்வரின் கடந்தகால அரசியல் குறித்து நான் நன்கறிவேன்; ஒருமுறை அவருடைய ஆடையை (சிறுநீர் கழித்துவிட்டதால்) மாற்ற வேண்டியாகிவிட்டது” என்று நினைவுகூர்ந்து பேசியிருக்கிறார்.
  • மாநில முதல்வர்களை ‘எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை’ இன்முகத்தோடு வரவேற்பதால் ஆளுநர்கள் பாராட்டப்படுகிறார்கள், ‘பாதுகாவலர்’ என்ற பட்டப்பெயரும் அவர்களுக்கு சூட்டப்படுகிறது. அதேவேளையில் அரசமைப்புச் சட்டப்படி நியாயமாக நடக்கும் ஆளுநர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

அதிகார அரிப்பு!

  • முதல்வர்களைப் போலவே அதிகாரம் செய்ய வேண்டும் என்று ஆளுநர்கள் ஏன் இப்படித் துடிக்கிறார்கள்? இதை மிகச் சிறந்த பொருளாதார நிபுணரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான டாக்டர் சி.ரங்கராஜன் சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள ‘ஃபோர்க்ஸ் இன் த ரோட்’ (Forks in the Road) என்ற தன் புத்தகத்தில் விளக்கியுள்ளார்.
  • “அரசியல் துறையிலிருந்தவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டால் – தாங்கள் முன்னர் இருந்த அரசியல் கட்சியைச் சேராத முதல்வர்களை எதிர்கொள்ளும்போது அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் இந்த முதல்வர்களுக்குத் தொடர்ந்து ஏதாவது குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். (அதன் விளைவுதான் இத்தகைய மோதல்கள்).
  • இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு மாநிலத்துக்கு இரண்டு அதிகார மையங்களை நியமிப்பது குறித்துச் சிந்திக்கக்கூட இல்லை; மேலும், ஆளுநர்களாக நியமிக்கப்படுவோரில் பலர் அதற்கும் முன்னதாக பொறுப்புமிக்கப் பதவிகளை வகித்தவர்கள் – எனவே, அதிகாரம் செய்து பழக்கப்பட்டவர்கள். எனவே, யாரையாவது – எதற்காகவாவது அதிகாரம் செய்ய வேண்டும் என்ற அரிப்பு அவர்களுக்கு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த அரிப்பு சில தருணங்களில் மிகவும் வெளிப்படையாகவே தெரிந்துவிடுகிறது, இந்தப் போக்கைக் கட்டுப்படுத்திக்கொள்ள அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார் ரங்கராஜன்.
  • அவர் சொல்கிறபடியெல்லாம் நடக்கப் போவதில்லை, காரணம் ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ முறையை எதிர்ப்போர் எண்ணிக்கை, அதாவது முதல்வரின் அதிகாரத்தைச் செலுத்த விரும்பும் ஆளுநர்களின் எண்ணிக்கை, வளர்ந்துகொண்டே வருகிறது. 

நன்றி: அருஞ்சொல் (28-11-2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்