- நிலாவில் ஆண்கள் இறங்கி சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க விண்வெளி மையமான நாசா, நிலாவில் ஒரு பெண்ணை இறங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்தது. அந்தத் திட்டத்துக்கு ‘ஆர்டெமிஸ்’ என்கிற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரையும் சூட்டியது. ஆர்டெமிஸ் 1 விண்கலம் கடந்த நவம்பர் 16 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
- கென்னடி விண்வெளி ஏவுதளம் ஆர்டெமிஸ் 1 விண்ணில் செலுத்தப்படும் கணத்துக்காகப் பரவசத்துடன் காத்திருந்தது. கவுன்ட் டவுன் முடிந்தது.
- ‘கோ ஃபார் லாஞ்ச்...’ என்கிற பெண் குரலை, கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் உள்ள ஃபயரிங் அறையும் அங்கு கூடியிருந்தவர்களும் முதல் முறை கேட்டனர். ஆம், நாசாவின் வரலாற்றிலேயே ‘ஏவுகணை இயக்குநர்’ (லாஞ்ச் டைரக்டர்) ஆக முதல் முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார்!
- வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த ஆர்டெமிஸ் 1 ஏவுகணையைப் பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார், ஏவுகணை இயக்குநரான சார்லி ப்ளாக்வெல் தாம்சன். ஆர்டெமிஸின் வெற்றி ஒருபுறமும் ஏவுகணை இயக்குநர் பொறுப்பைச் சிறப்பாகச் செயல்படுத்திய திருப்தி இன்னொருபுறமும் சார்லியை நெகிழ வைத்துக்கொண்டிருந்தன.
- “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நாம் எல்லாரும் இந்த இடத்தில் இருப்பதற்கும் வெற்றிகரமாக ஏவுகணை செலுத்தப்பட்டதற்கும் காரணம், நம் அனைவரின் உழைப்பும்தான்! நம் உழைப்பு வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாணவியாக, இந்த கென்னடி ஏவுதளத்துக்கு வந்தேன். இன்று அதே ஏவுதளத்தில் ஏவுகணை இயக்குநராக, ஒரு ஏவுகணைக்கு இறுதி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி. 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பல்லோ 11 நிலாவுக்குச் சென்றபோது, இதே அறையில் 450 பொறியாளர்களில் ஒரே ஒரு பெண் மட்டுமே இருந்தார்! இன்று ஆர்டெமிஸ் திட்டத்தில் 30 சதவீதத்தினர் பெண்களாக இருக்கிறோம். சுமார் 100 பெண்கள் இந்த அறையில் மட்டுமே இருக்கிறார்கள் என்பதில் என் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
- “வரலாற்றில் ‘முதல் முறை’ என்பது அடிக்கடி நிகழ்வதில்லை. தற்போது அது நிகழ்ந்திருக்கிறது. அதுவும் நிலாவுக்கு முதல் முறை ஒரு பெண்ணையும் அடுத்த ஆணையும் அழைத்துச் செல்லும் திட்டத்தில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் திட்டத்தின் பெயரில் மட்டுமல்ல, திட்டத்தின் செயல்பாடுகளிலும் பெண்களின் பங்கு இருப்பதை யாரும் மறுக்க இயலாது” என்று மகிழ்ச்சியாகத் தன் குழுவினரிடம் உரையாற்றினார் சார்லி ப்ளாக்வெல்.
- ஓர் ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தினால், அந்த ஏவுகணை இயக்குநரின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் ‘டை’யை, கத்திரிக்கோலால் வெட்டுவது மரபு. சார்லியின் கழுத்து டையும் வெட்டப்பட்டது.
- 1988ஆம் ஆண்டு கணினிப் பொறியியலில் பட்டம் பெற்ற சார்லி ப்ளாக்வெல், 2004ஆம் ஆண்டு நாசாவில் சேர்ந்தார். 2016ஆம் ஆண்டு ‘ஏவுகணை இயக்குநர்’ பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. கவுன்ட் டவுன் திட்டமிடுதல், பயிற்சி அளித்தல், செயல்முறைகளை மேற்பார்வையிடுதல் போன்ற முக்கியமான பணிகளைச் செய்துவருகிறார்.
நன்றி: தி இந்து (25 – 12 – 2022)