TNPSC Thervupettagam

முதல் பொது வேலை நிறுத்தப் போராட்டம்

May 7 , 2023 567 days 389 0
  • விடுதலை இயக்க வீரரும் சிறந்த சொற்பொழிவாளருமான சுப்பிரமணிய சிவா, 1908 பிப்ரவரி முதல் வாரம் தூத்துக்குடி வந்துசேர்ந்தார். வ.உ.சி.யின் இல்லத்திலேயே தங்கியிருந்து தூத்துக்குடியின் பல பகுதிகளிலும் கனல்தெறிக்கும் சொற்பொழிவுகளை ஆற்றினார்.
  • பாபநாச மலையின் அடிவாரத்தில் 1885இல் நெசவு ஆலையைத் தொடங்கிய ஹார்வி நிறுவனம், தூத்துக்குடி நகரிலும் ‘கோரல் மில்’ என்கிற ஆலை ஒன்றை நிறுவியது. குறைந்த ஊதியம் அளித்து கடுமையான வேலை வாங்குவதில் நிர்வாகம் கைதேர்ந்திருந்தது. இதன் பங்குதாரர்களுக்கு 60% லாபப் பங்கு கிடைத்தது. ஆனால், தொழிலாளர் நிலையோ வருந்தத்தக்கதாக இருந்தது. பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவர்களும் ஆலையில் பணிபுரிந்தனர். உணவு உண்ணப் போதிய இடைவேளை கொடுக்கப்படவில்லை. ஊதியம் மிகக்குறைவு. விடுப்பு எடுத்தால் ஊதியம் கிடையாது. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டும். தொழிலாளர் செய்யும் சிறு தவறுக்கும் பிரம்படி உண்டு.

வேலைநிறுத்தம்

  • தொழிலாளர்களின் இத்தகைய அவலநிலையைக் கண்ணுற்ற வ.உ.சி., அதைப் போக்க முன்வந்தார். சுப்பிரமணிய சிவாவும் பத்மநாப அய்யங்காரும் வ.உ.சி.க்குத் துணைநின்றனர்.
  • ‘..... அதிகக் கூலி கேட்டுத் தொழிலாளர்கள் வெளியில் நின்றால் இந்தியாவிலுள்ள ஐரோப்பிய ஆலைகள் இங்கு நீடிக்க இயலாது. ஆலை முதலாளிகளை முடக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது. மற்றொன்று, வேலைநிறுத்தம் செய்வது. இவ்விரு வழிகளையும் கையாண்டு ஆலையை முடக்கத் தொழிலாளர்களைத் துண்டினர். 1908 பிப்ரவரி 26 அன்று வ.உ.சி.யும் சிவாவும் பேசிய இக்கூட்டத்துக்கு மூவாயிரம் பேர் கூடியிருந்தனர்...’ என்கிறது ஆங்கிலேய அரசின் உளவுத் துறை அறிக்கை.
  • ஊதிய உயர்வு, வார விடுமுறை, இதர விடுமுறை ஆகியவற்றை முக்கியக் கோரிக்கைகளாக வைத்து பிப்ரவரி 27 அன்று வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.
  • தூத்துக்குடி டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். ‘கோரல் மில்’ தண்ணீர் பம்புகள் பழுதாக்கப்பட்டன. ஆலையின் மீது கற்கள் வீசப்பட்டன. வெள்ளையர் சென்ற கார்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. வேலைநிறுத்தத்தை முறியடிப்பதில் ஆலை நிர்வாகத்துக்கு உறுதுணையாக ஆங்கிலேய அரசு நின்றது. தொழிலாளர்கள் விரைவில் மன உறுதியிழந்து வேலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்று அரசு நினைத்தது. ஆனால், வேலைநிறுத்தத்தைத் தொடரும்படி தொழிலாளர்களை வ.உ.சி. ஊக்குவித்தது மட்டுமின்றித் தனிநபர்களின் நன்கொடை மூலம் தொழிலாளர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் உணவு வழங்கி அவர்கள் மன உறுதியுடன் இருக்கச் செய்தார்.
  • தூத்துக்குடி வேலைநிறுத்தம் என்கிற தலைப்பின்கீழ், ‘....இதுவரையும் அங்கும் இங்கும் சேராமல் அரை மனதாய் நின்ற சில வேலையாட்களும் இப்போது ஒரே மொத்தமாய் வேலைநிறுத்தக் கட்சியாளருடன் வந்து கூடிக்கொண்டார்கள். தொழிற்சாலை வேலை அப்படியே ஸ்தம்பித்தது’ என்று ‘சுதேசமித்திரன்’ நாளேடு (03.03.1908) தலையங்கம் எழுதியது. இச்செய்தி தமிழகம் மட்டுமின்றி இந்தியா எங்கும் பரவியது.

தீவிரமடைந்த எதிர்ப்பு

  • ஆலை வேலைநிறுத்தத்தை முறியடிப்பதில் தூத்துக்குடி சப் கலெக்டர் ஆஷ் முன்நின்றார். தன்னை வந்து பார்க்கும்படி வ.உ.சி.க்குச் செய்தி அனுப்பினார். வ.உ.சி. எவ்வித அச்சமும் இன்றி டி.ஆர்.மகாதேவய்யர் என்னும் வழக்கறிஞருடன் சென்று ஆஷைச் சந்தித்தார். வ.உ.சி.யை ஆஷ் அச்சுறுத்தினார். ஆயினும், வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது.
  • வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்ட மக்கள், வெள்ளையர்களுக்கு உணவுப்பொருள்களை விற்கவும் வேலைசெய்யவும் மறுத்தனர். வெள்ளையரைக் கண்டால் அவர்களைச் சூழ்ந்துகொண்டு ‘வந்தே மாதரம்’ என்று, சொல்லக் கட்டாயப்படுத்தினர். தூத்துக்குடியில் வாழ்ந்த ஐரோப்பியர்கள் இரவில் தங்களுடைய தங்கும் விடுதிகளில் தங்குவதற்குப் பயந்து ‘பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’யின் அலுவலகத்தில் தங்கினர். தூத்துக்குடியின் பலதரப்பட்ட மக்களுக்கு வெள்ளையர் மீதுள்ள வெறுப்பைக் காட்டும் துணிச்சலை இப்போராட்டம் அளித்தது.
  • வெள்ளையர் ஆதரவாளரான ரெங்கசாமி அய்யங்காருக்குச் சவரம் செய்ய நாவிதர் மறுத்துவிட்டார்; மற்ற நாவிதர்களும் மறுத்துவிட்டனர். குதிரை வண்டிக்காரர், வண்டி ஓட்ட மறுத்துவிட்டார். உணவுப்பொருள் விற்பவர்களும் அவருக்கு விற்க மறுத்துவிட்டனர். சலவைத் தொழிலாளி சலவைசெய்ய மறுத்தது மட்டுமின்றி, ஏற்கெனவே எடுத்துச்சென்ற துணிகளையும் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார் என்னும் செய்தி, ‘தி இந்து’ நாளேட்டில் வெளியானது.

முதல் போராட்டம் வெற்றி

  • ஆலை நிர்வாகம் தொழிலாளர் கோரிக்கைகளை மார்ச் 6 அன்று ஏற்றது. தொழிலாளர்கள் மார்ச் 7 அன்று வேலைக்குத் திரும்பினர். இப்போராட்டத்தின் வெற்றி இந்தியா முழுக்க எதிரொலித்தது.
  • ‘... அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப் பட்டன. நிபந்தனையற்ற சரணாகதி என்கிற அவமானத்திற்கு ஆங்கில முதலாளித்துவம் ஆளாயிற்று. இந்தியத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வெற்றி தேசிய இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி’ என்று புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த அரவிந்தர் தமது ‘வந்தே மாதரம்’ இதழில் (13.03.1908) தலையங்கம் எழுதினார்.
  • இவ்வேலைநிறுத்தத்தின் விளைவாக, தூத்துக்குடி நகரிலிருந்த பல்வேறு தொழிலாளர்களும் பயனடைந்தார்கள். ரயில்வே கம்பெனியும் மற்ற ஐரோப்பிய நிறுவனங்களும் தங்களிடம் பணியாற்றிய ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தியதுடன், அவர்களை மரியாதையுடனும் நடத்தத் தொடங்கின. (‘தி இந்து’, 05.03.1908).
  • வ.உ.சி. பொருளாதாரப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக உருமாற்றம் செய்ததால்தான் இப்போராட்டம் வெற்றி பெற்றது. ‘கோரல் மில்’ தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இந்தியாவின் முதல் பொது அரசியல் வேலைநிறுத்தப் போராட்டமாக வரலாற்றில் பதிவானது!

நன்றி: தி இந்து (07 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்