- இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது முதியோர் நலன். அரசியல் சாசனப் பிரிவு 41 உட்பட பல்வேறு சட்டப் பாதுகாப்புகள் இந்தியாவில் இல்லாமல் இல்லை. சமூகப் பாதுகாப்பு வழங்கும் 80 உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும்கூட, அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கான வசதியையும், பாதுகாப்பையும், பராமரிப்பையும் உறுதிப்படுத்துவது பிரச்னையாக இருக்கப் போகிறது.
- உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் இந்தியாவில் இருக்கிறார்கள். உலக ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இருக்கும் நாடும் இந்தியாதான். உலகிலுள்ள முதியோரில் எட்டில் ஒரு பகுதியினர் இங்கேதான் இருக்கிறார்கள்.
- அவர்களில் பெரும்பாலோர் அமைப்புசாராப் பணிகளில் ஈடுபட்டு, ஓய்வூதியமோ, முதுமைப் பாதுகாப்போ இல்லாமல் தங்கள் பிள்ளைகளை மட்டுமே நம்பி இறுதிக்காலத்தைக் கழிப்பவர்கள்.
- கூட்டுக்குடும்ப முறையும், சமயம் சார்ந்த வாழ்க்கை முறையும் இருந்தவரை, எந்தவித பிரச்னையும் இல்லாமல் முதியோர் நலன் பேணப்பட்டது. ஆங்காங்கே சில பிரச்னைகள் இருந்தாலும், சமூக அவமதிப்புக்கு பயந்து, பிள்ளைகள் தங்கள் பெற்றோரை முதுமையில் ஆதரித்து வந்தனர். நகர்மயமாதலும், சிறு குடும்பங்கள் உருவாகத் தொடங்கியதும் "முதியோர் பேணல்' என்கிற நமது பாரம்பரியப் பண்பாட்டை சிதைத்துவிட்டன.
- இந்தியாவிலுள்ள சுமார் 7.5 கோடி முதியோர், அதாவது அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களில் இரண்டில் ஒருவர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட ஏதாவது ஒருவகை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள். 40% பேர் மூட்டு வலி, பார்வைக் குறைவு, கேட்கும் திறனின்மை உள்ளிட்ட பாதிப்புடன் வாழும் முதியவர்கள். 20% பேர் மன நோயாளிகளாகவோ, மன அழுத்தத்துக்கு ஆளானவர்களாகவோ இருக்கிறார்கள். இதுதான் இன்றைய இந்திய முதியோரின் நிலைமை.
- முன்புபோல, நிரந்தரப் பணிகள் இல்லாமல் இருப்பதும், அரசுப் பணிகள் குறைந்து விட்டதும் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பு மிக அதிகம். பணி ஓய்வு பெறும்போது, பெரும்பாலானோருக்கு பணிக்கொடை (கிராஜுவிடி), ஓய்வூதியம் (பென்ஷன்), வருங்கால வைப்பு நிதி (பிராவிடன்ட் ஃபண்ட்) உள்ளிட்டவை இப்போது கிடைப்பதில்லை.
- தங்களது பணிக்கால சேமிப்புகளை நம்பித்தான் பணி ஓய்வு பெற்ற பிறகு நடுத்தர வர்க்க முதியவர்கள் வாழ்ந்தாக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அப்படியே, பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி போன்றவை இருந்தாலும், அவற்றுக்கான வங்கி வட்டி மிகவும் குறைந்துவிட்டது. அது அவர்களுக்கு மருந்துகள் வாங்குவதற்குக்கூட போதவில்லை.
- பணி ஓய்வுபெற்ற நிலையில், தங்களது பிள்ளைகளுடன் வாழ்வதற்காக புலம்பெயர்ந்து, அந்த சூழலில் வாழ முடியாமல் தவிப்பவர்கள் பலர். கிராமத்து வீட்டையும், நிலபுலன்களையும் விற்றுவிட்ட நிலையில், முதுமையும் தனிமையுமாகப் பலர் முதியோர் இல்லங்களில் அடைக்கலம் தேடும் அவலநிலைக்கு ஆளாகிறார்கள். முதியோர் தனித்து வாழ முடியாத சூழல் உருவாகி இருக்கிறது.
- தங்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் நல்ல நிலையில் இருந்தாலோ, வசதியான பின்னணி உடையவர்களாக இருந்தாலோ அவர்களுக்குப் பல நவீன முதியோர் குடியிருப்புகள் இருக்கின்றன. வறுமையின் பிடியில் சிக்கி, வேறு வழியின்றி அநாதை வாழ்க்கைக்குத் தள்ளப்படுபவர்களுக்கு அரசு முதியோர் காப்பகங்கள் இடமளிக்கின்றன. இவை இரண்டிற்கும் இடையே, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, அடிப்படை வசதியை எதிர்பார்க்கும் முதியோரின் நிலைமைதான் மிகவும் பரிதாபகரமானது.
- மத்திய அரசின் உதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் 551 முதியோர் இல்லங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் 66 முதியோர் இல்லங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன. அவை அல்லாமல், பல தனியார் முதியோர் இல்லங்கள் அரசின் அங்கீ
- காரம் பெறாமலும் நடத்தப்படுகின்றன. "பெற்றோரின் பராமரிப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் 2007', மாநில அரசுகள் முதியோர் காப்பகங்கள் அமைப்பதை வலியுறுத்துகிறது. ஆனால், தனியார் முதியோர் காப்பகங்கள் குறித்து எதுவும் கூறவில்லை.
- தனியார் முதியோர் காப்பகங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் விதத்தில் 2016 நவம்பர் 23-ஆம் தேதி தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, முதியோர் இல்ல நிர்வாகத்தில், நிதியுதவி அளிப்பவர்களும் இடம்பெற வேண்டும் என்றும், நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதை அரசின் அநாவசியத் தலையீடு என்று கூறி வழக்குத் தொடுத்தனர் தனியார் முதியோர் காப்பகம் நடத்துபவர்கள்.
- சமீபத்தில், நீதிபதிகள் அரங்க. மகாதேவன், ஜே. சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு, 2016 அரசாணையை அங்கீகரித்திருப்பதுடன், முதியோர் இல்லங்களைக் கண்காணிக்க மாநில அரசுக்குப் பல வழிகாட்டுதல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது. அரசு அங்கீகாரம் பெறாத முதியோர் இல்லங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
- முதியோர் நலன் பேணல் என்பது இந்தியாவின் மரபணுவில் ஊறிய பண்பு. முதியோர் இல்லங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சரியான நேரத்தில் வழங்கப்பட்டிருக்கும் சரியான தீர்ப்பு, சரியான பாதையில் நம்மை இட்டுச் செல்ல வழிகோலும் என்று எதிர்பார்க்கலாம்!.
நன்றி: தினமணி (13 – 07– 2022)