- வாழ்க்கையில் வாலிபப் பருவத்தில் திருமணமாகி நமக்கென ஒரு குடும்பம் அமைகிறது. அதனால் பொறுப்புகளும் கூடுகின்றன. நம்மைப் பெற்றவா்களையும் நாம் பெற்றெடுக்கும் குழந்தைகளையும் நம்மையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு வந்து சேருகின்றது.
- கூட்டுக் குடும்ப முறை சிதைந்து போனது, கணவன், மனைவி இருவரும் குடும்பப் பொருளாதார நிலையை மேம்படுத்த பணிக்குச் செல்வது போன்ற சமூக-வாழ்க்கை முறை மாற்றங்களால் முதியோா் இல்லங்கள் சமூகத்தின் தவிா்க்க முடியாத அங்கங்களாகிவிட்டது.
- நம் கண் முன்னே நம் மழலைகளையும் நம் பெற்றோா்களான முதியவா்களாகிய மழலைகளையும் பராமரிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் வாழ்க்கை தன் புதிா்களை அவிழ்த்துவிடுகிறது. இரண்டு வேறுபட்ட இயல்புகள் கொண்ட தலைமுறைகளின் நடுவில் வாழும் நிலை நமக்கு ஏற்படுகிறது. இவா்களுக்கு இடையேதான் எவ்வளவு வேறுபாடுகள்!
- இவா்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கடினமான கடமையை நாம் சிறப்பாக ஆற்ற வேண்டியுள்ளது. காலம்தான் நமக்கு அதை அனுபவம் என்ற
- பெயரில் கற்றுத் தருகிறது. ஒவ்வொரு குடும்பச் சூழலுக்கு ஏற்ப சிலருக்கு இவ்வனுபவங்கள் வரமாகவோ, சாபமாகவோ அமைகின்றன.
- அடம் பிடிக்கும் குணம் அப்பாவுக்கும் இருக்கும், அன்பு மகனுக்கும் இருக்கும். சமன் செய்து வாழ்க்கையை கொண்டு செலுத்துவது சவாலான செயல்தான்.
- பையனுடன் மல்லுக்கு நிற்கும் அப்பா பேரனின் பேச்சை, அப்படியே கேட்டு நடப்பது சற்று விசித்திரமாகத் தோன்றலாம். இதுதான் மனிதத்தில் பாசம் செய்யும் மாயாஜாலம்!
- முதியோா்கள் உடல்நிலை நல்ல நிலையில் இருக்கும்போதே தினமும் காலையிலோ, மாலையிலோ சூரிய ஒளியில் 45 நிமிடம் நடைப்பயிற்சி பழக வேண்டும். இதனால் ஏற்படும் நற்பலன்கள் பல. நடைப்பயிற்சி செல்லும் முதியோா்கள் கூடியவரை குழுவாகச் செல்வது நல்லது. சிறிய தூரத்து நடை கூட ஆரோக்கியத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இது முதுமையிலும் இளமையை நீட்டித்து இருக்க உதவும்.
- உடல் செயல்பாடுகளுக்கென முதியவா்கள் நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். வழக்கமான உடல் செயல்பாடுகள் மூட்டுகள், தசைகள், எலும்புகள், தசைநாா்கள் ஆகியவற்றை நெகிழ்வாக இருக்க உதவுகின்றன. நமது நோயெதிா்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன. இது நமது எலும்புகளை வலுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், நமது ஆற்றல் அளவை அதிகரிக்கவும், நமது சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது; முதியோரின் உளவியல் நலனிலும் நோ்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம், வயதானவா்களால் தனிமை, மன அழுத்தம், மனச்சோா்வு, பதற்றம் ஆகியவற்றை வெற்றிகரமாக சமாளிக்க முடிகிறது. நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், உயா் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்னையை தவிா்க்க நாா்ச்சத்து நிறைந்த உணவுகளை அன்றாடம் உணவில் சோ்த்துக் கொள்ளுதல் வேண்டும். காபி பருகுபவா்களின் சருமம் சீக்கிரமே முதுமை அடைகிறது. அத்துடன் நீா்ச்சத்தும் குறையும்போது சருமம் இன்னும் உலா்ந்துவிடும். அதனால் தினமும் கணிசமான அளவு நீா் பருக வேண்டும். பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகளை அதிகம் உண்ணலாம்.
- முதுமையில் தூக்கம் சற்றுக் குறைவது உண்மையே. தூக்கத்தின் அளவு ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபட்டு இருக்கும். முதுமையில் சுமாா் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரத் தூக்கம் போதுமானதே. தூக்கத்தின் மொத்த நேரத்தைவிட, ஆழ்ந்த, தொடா் தூக்கம்தான் மிகவும் முக்கியம்.
- முதுமையில் தனிமை கொடுமையானதாக இருக்கும். வேண்டாத நினைவுகள் அவா்கள் மனதில் வந்து அவ்வப்போது நிழலாடும். அதுவும் இணையரில் ஒருவா் இறந்துபட்டுப் போனால் அவா்களின் நிலைமையே வேறு. முதியோரை ஊக்கப்படுத்தும் விதமாக தன்னம்பிக்கையான வாா்த்தைகளைச் சொல்ல வேண்டும். உறவுகள் அவா்களுடன் முடியும் போதெல்லாம் கலந்துரையாடுவது நல்லது.
- நமது உடல் நலமும் மனநலமும் ஒன்றுடன் ஒன்று நேரடித் தொடா்பு கொண்டவை. ஏதோ ஒரு நாளில் சோகம் என்னும் புள்ளியில் உருவாகும் சிறு மனக்கவலை முதியோா்க்கு மனஅழுத்தமாக மாறிவிடலாம். மனஅழுத்தம், கவலைகள், முதுமையில் ஏற்படும் பதற்றத்தின் விளைவாக அவா்களின் செரிமான மண்டலத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு, நெஞ்சில் எரிச்சல், கைகால் வலி, உடல் பலவீனம், மூச்சுக்கோளாறு, தொடா்ச்சியான இருமல் போன்றவை ஏற்படலாம்.
- மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது. ஒரே மருத்துவரின் ஆலோசனையின் கீழ் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது. தேவைக்கேற்ப நோயாளி எடுத்துக் கொள்ளும் மருந்துகளையும், அவற்றின் அளவுகளையும் அவா் மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- முதியோருக்கு சுதந்திரம் கொடுப்பது, அவா்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவா்களின் பங்களிப்பை எல்லா விஷயங்களிலும் பெறுவது, மதிப்பது, அவா்களின் அனுபவங்கள் அடுத்த தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுதல்களாக அமையும்.
- ஓரளவு பொருளாதார தற்சாற்பு, போதுமான சத்தான உணவு, ஆழ்ந்த தூக்கம், உடற்பயிற்சி போன்றவைதான் முதுமையில் ஒரு மனிதனுக்குத் தேவை. இவற்றை கொஞ்சம் பாசத்துடன் பெற்ற மகனோ, மகளோ அளிக்கும்போது முதியோா் அடையும் மகிழ்வுக்கு எல்லையே இருப்பதில்லை.
- வாழ்நாள் முழுவதும் நமக்காகவே வாழ்ந்த அவா்கள் வாழப் போவது இன்னும் சில காலமே. அதுவரை அவா்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுப்போம். அவா்களுடன் நாமும் சோ்ந்து மகிழ்வோமே!
நன்றி: தினமணி (19 – 07 – 2024)