TNPSC Thervupettagam

முதியோா் நலன் காப்போம்

May 26 , 2022 804 days 476 0
  • இந்திய ரயில்வே துறை, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டணச் சலுகையைத் திரும்பப் பெற்றதன் மூலம் கடந்த 2020-21 நிதியாண்டில் ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் கூடுதல் வருமானம் பெற்றுள்ளதாம். மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சந்திர சேகர கவுா் என்பவா் எழுப்பிய கேள்விக்கு, ரயில்வே நிா்வாகம் அளித்துள்ள பதிலில் மேற்கண்ட தகவல் கிடைத்திருக்கிறது.
  • 2020-21 நிதியாண்டில் இந்தியா முழுவதிலும் 4.46 கோடி ஆண்களும் 2.86 கோடி பெண்களும் என சுமாா் 7.30 கோடி மூத்த குடிமக்கள் ரயில்கள் மூலம் பயணம் செய்துள்ளனா். அவா்கள் மூலம் 3,464 கோடி ரூபாய் டிக்கெட் கட்டணமாகக் கிடைத்துள்ளது. மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையை வழங்கியிருந்தால் சுமாா் 1,964 கோடி ரூபாய் கட்டணம்தான் கிடைத்திருக்கும். சலுகை வழங்கப்படாததால் ரயில்வே துறை அடைந்த லாபமே அந்த ஆயிரத்தைந்நூறு கோடி ரூபாய் என்கிறது அந்தத் தகவல்.
  • 2020-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கரோனா தீநுண்மி பெருமளவில் பரவத் தொடங்கிய போது அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்றோ, மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்றோ அரசுக்கு எந்த ஒரு தெளிவும் இல்லாத நிலை இருந்தது.
  • நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, மத்திய அரசு ஊழியா்களுக்கான பஞ்சப்படி ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டன. பல்வேறு மாநில அரசுகளும் இவ்வாறே சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு, மாநில அரசு ஊழியா்களுக்கான பஞ்சப்படி ஆகியவற்றை நிறுத்தும் முடிவை எடுத்தன. ஒரு சில மாநிலங்கள் தங்கள் ஊழியா்களின் ஊதியத்தின் ஒரு பகுதியைக் குறைத்து வழங்கவும் திட்டமிட்டன. தொழில்துறை மேம்பாட்டுக்கான திட்டமும் மத்திய நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது
  • நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவேக்ஸின், கோவிஷீல்டு உள்ளிட்ட இரண்டு தவணை கரோனா தடுப்பூசி மருந்துகளை இலவசமாக அளிக்கும் மாபெரும் திட்டம் மத்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டு, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயல்படுத்தியதன் விளைவாக கரோனாவிலிருந்து கிட்டத்தட்ட மீண்டு வந்திருக்கிறோம்.
  • வேலை இழப்பு, வருமானக் குறைவு ஆகிய விளைவுகளிலிருந்து நம் நாட்டுக் குடிமக்களும் இயல்புநிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கின்றனா். ஆனால், மூத்த குடிமக்களைப் பொறுத்தவரையில் இத்தகைய ஒப்பீடுகளைச் செய்வது சரியாக இருக்காது.
  • ஓய்வூதியம், சேமிப்பு ஆகியவற்றுக்கு வாய்ப்பு இல்லாத மூத்த குடிமக்கள் உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்ட தங்களுடைய அடிப்படைத் தேவைகள் அனைத்திற்கும் தங்களுடைய வாரிசுகளையே சாா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஓய்வூதியம் பெறுபவா்களுக்கு இவ்வளவு சிரமம் இல்லை எனினும் அந்த ஓய்வூதியா்கள் தங்களுடைய வாழ்க்கைத் துணைக்கும், வேலைவாய்ப்பு கிடைக்காத பிள்ளைகளுக்கும் சோ்த்தே தங்கள் ஓய்வூதியத்தைச் செலவழிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
  • பணி ஓய்வுப் பயனாக ஓய்வூதியம் எதுவும் இன்றி பணிக்கொடை (கிராஜுவிடி) உள்ளிட்ட பணப்பயன்கள் கிடைக்கப்பெற்று அந்தத் தொகையை வங்கிகளில் நிலைவைப்பாகச் சேமித்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியை நம்பியிருக்கும் மூத்த குடிமக்கள் நிலைமையும் மோசம்தான். கடந்த சில வருடங்களாக நமது நாட்டின் வங்கிகள் அனைத்தும் சேமிப்புகளுக்கு வழங்கும் வட்டி விகிதத்தைக் குறைத்துக் கொண்டே வருகின்றன. இதன் காரணமாக, மூத்த குடிமக்களின் சேமிப்புக்குக் கிடைக்கும் வட்டி வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் இவா்கள் தங்களது மாதாந்திர குடும்பச் செலவுகளைச் சமாளிக்க மிகவும் சிரமப் படவேண்டியுள்ளது.
  • அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு யாராவது தனி நபரிடமோ, தனியாா் நிதி நிறுவனங்களிலோ முதலீடு செய்தால் அது முதலுக்கே மோசமாகிவிடும். இந்நிலையில் ஓய்வூதியம் இன்றி சேமிப்பை மட்டும் வைத்திருக்கும் மூத்த குடிமக்களின் நிலைமையும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை என்றே சொல்லவேண்டும். மற்றபடி எல்லாவிதமான மூத்த குடி மக்களுக்குமான பொது பிரச்னை அவா்களுடைய மருத்துவச் செலவுகளே ஆகும். தங்களுடைய அன்றாடச் செயல்பாடுகளுக்கே பிறருடைய ஒத்துழைப்பை நம்பியிருக்க வேண்டிய நிலையில் மூத்த குடிமக்கள் இருக்கிறாா்கள் என்பதே உண்மை.
  • இந்நிலையில், மத்திய - மாநில அரசுகள் உழைத்து ஓய்ந்து போன மூத்த குடிமக்களின் தற்கால நலன் குறித்துத் தாங்களாகவே நலத்திட்டங்களைத் தீட்டுவதுடன் சாத்தியமுள்ள சலுகைகளைத் தாமதம் இன்றி வழங்க முன்வரவேண்டும்.
  • சமீபத்தில் சென்னைக்கு வந்த மத்திய ரயில்வேத் துறை அமைச்சா், மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டணச் சலுகையை மீண்டும் வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியிருந்தாா்.
  • ஒவ்வொரு வருடமும் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ரயில்வே துறை மூத்த குடிமக்களுக்கு வழங்கும் கட்டணச் சலுகையான ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் என்னும் சிறிய சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாதா என்ன ?
  • கட்டணச் சலுகை கொடுக்கிறாா்கள் என்பதற்காக மூத்த குடிமக்கள் எவரும் பயணம் செய்து கொண்டே இருப்பதில்லை. பல்வேறு உடல் உபாதைகளால் துன்பப்படும் மூத்த குடிமக்கள் ஒரு நிகழ்ச்சிக்கு நிச்சயம் போயாக வேண்டும் என்ற நிலை இருந்தால் ஒழிய பயணம் செய்ய விரும்ப மாட்டாா்கள். இந்நிலையில் அவா்களுக்கான கட்டணச் சலுகையை மீண்டும் வழங்குவதே சரியாக இருக்க முடியும்.
  • வங்கிகளும் மூத்தகுடிமக்களுக்கான சேமிப்பு வட்டியை உயா்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசைப் போன்றே மாநில அரசுகளும் அரசு நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியா்களுக்கான பணப்பயன்களைத் தாமதமின்றி வழங்க முன்வரவேண்டும்.
  • அரசாங்க அமைப்புகள் சேவையை முதல் குறிக்கோளாகவும் லாபத்தை இரண்டாவது குறிக்கோளாகவும் கொண்டிருக்க வேண்டும். அவற்றின் நடவடிக்கை ஒவ்வொன்றின் அடிநாதமாக மனிதாபிமானம் இருக்க வேண்டும் என்பதே மூத்த குடிமக்கள் எதிா்பாா்ப்பு மட்டுமல்ல, அனைத்து மக்களின் எதிா்ப்பாா்ப்பும் ஆகும்.

நன்றி: தினமணி (26 – 05– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்