TNPSC Thervupettagam

முதுமை போற்றுதும்

July 28 , 2023 535 days 306 0
  • மாதந்தோறும் ரூ.1,000-ஆக இருந்த முதியோர் ஓய்வூதியத்தை ரூ.1,200-ஆக உயா்த்த முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை எடுத்திருக்கும் முடிவை எத்தனை பாராட்டினாலும் தகும். கூடுதலாக வழங்கப்படும் ரூ.200, எந்தவித வருவாயும் இல்லாமல் வாழும் முதியோர்களின் முகத்தில் ஏற்படுத்தும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.
  • ஓய்வூதியம் இல்லாமல் தங்களின் வயதான காலத்தில் உற்றார் உறவினா்களை அண்டி வாழும் முதியோர்கள் தான் இந்தியாவில் அதிகம். கிராமப்புறங்களில் வாழும் முதியோர்களை பொருத்தவரை அவா்களது அன்றாட மருத்துவச் செலவுகளுக்குக்கூட மற்றவா்களை எதிர்பார்த்து வாழ்வார்கள். அவா்களுக்கு அரசு வழங்கும் சொற்ப ஓய்வூதியம் கருதித்தான், குடும்பத்தினா் அவா்களைப் பராமரிக்கிறார்கள் என்பதுதான் எதார்த்த நிலைமை.
  • மேலை நாடுகளைப்போல, இந்தியாவில் தங்களது முதுமைக் காலத்துக்காக முன்கூட்டியே திட்டமிட்டு சேமித்து வைக்கும் நிலையில் பெரும்பாலானோர் இல்லை. அவா்களது சேமிப்பு, காப்பீடு எல்லாமே குழந்தைகள்தான். ஆனால், மாறிவிட்ட சமூக, பொருளாதார சூழலில், குழந்தைகள் தங்களது பெற்றோரைப் பராமரிப்பது என்பது சுமையாக மாறிவிட்டிருக்கிறது என்பதை நன்றாக யோசித்துப் பாா்த்தால் புரியும். சிறு குடும்பங்கள் என்பது மட்டுமல்லாமல், வாடகை வீட்டிலேயே இருந்தாலும் ஒன்றோ, இரண்டோ படுக்கை அறைகள் என்கிற அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கையில் பெற்றோரை உள்ளடக்குவது பலருக்கும் பிரச்னையாக மாறியிருக்கிறது.
  • கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் சூழலில், குழந்தைகள் சற்று பெரிதாவது வரை அவா்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லவும், பாடம் சொல்லிக் கொடுக்கவும் தேவைப்படும் பெற்றோர்கள், வயோதிகத்தால் தளா்ந்துவிடும்போது சுமையாக மாறிவிடுகிறார்கள். அவா்களது ஓய்வூதியம் குடும்பச் செலவுக்கு உதவியாக இருந்தால் மட்டுமே, பெற்றோர் மதிக்கப்படுகிறார்கள் என்பது பெரும்பாலான முதியோர்களின் அனுபவம்.
  • ஆயுள்கால அதிகரிப்பும், மக்கள்தொகைப் பெருக்கமும் இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கையைத் தொடா்ந்து அதிகரித்து வந்திருக்கின்றன. அறுபது வயதுக்கு மேற்பட்டவா்களின் எண்ணிக்கை 2001-இல் மக்கள்தொகையில் 7.5%-ஆக இருந்தது 2021-இல் 9.7%-ஆக வளா்ந்திருக்கிறது. 2031-இல் 12.1%, 2051-இல் 16.6% என்று அதிகரிக்கும் என்பது கணிப்பு.
  • எழுபது வயதுக்கும் அதிகமான முதியோா்களின் இப்போதைய 5% அடுத்த சில ஆண்டுகளில் இரட்டிப்பாகக்கூடும் என்கிறது ஓா் ஆய்வு. எண்ணிக்கை என்று எடுத்துக் கொண்டால், அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 14 கோடி முதல் 20 கோடி முதியவா்கள் காணப்படுவா் என்கிறது அதே ஆய்வு.
  • முதியோரில் பாதிக்கும் அதிகமானோர் முழுக்க முழுக்க தங்களது அன்றாடத் தேவைகளுக்கும் செலவுகளுக்கும் மற்றவா்களை, பெரும்பாலும் தத்தம் குழந்தைகளைச் சார்ந்திருக்கிறார்கள். 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோரில் 25% போ் ஏதாவது வேலை பார்த்துத்தான் தங்களது வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். அடித்தட்டு முதியோரில் பெரும்பாலோர் இன்னும்கூட ஓய்வூதியம் பெறுவதில்லை என்பதும், ஓய்வூதியத் திட்டத்தில் இணைப்பதற்கு அவா்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் அரசியல் இயக்கங்கள் முனைப்புக் காட்டுவதில்லை என்பதும் மிகப் பெரிய சோகம்.
  • குழந்தைகளுடன் வாழும் முதியோரின் பிரச்னைகள் ஒருவிதமானது என்றால், தனியாகவோ, தம்பதியராகவோ வாழும் முதியோர்களின் பிரச்னை வேறு விதத்திலானவை. தனியாக வாழும் முதியோரில் அதிகமானோர் பெண்கள் என்று கூறப்படுகிறது. அவா்கள் இயன்றவரை ஏதாவது வேலை பார்த்தோ, சில்லறை வியாபாரம் செய்தோ பிழைப்பவா்களாக இருக்கிறாா்கள். வீட்டு வேலை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் ஆயாக்கள் என்று தங்களது வாழ்க்கையை நகா்த்தும் வயதான பெண்மணிகள் பலா்.
  • முதியோரில் 65%-க்கும் அதிகமானவா்கள் முடக்கு வாதம், ரத்த அழுத்தம், சா்க்கரை உள்ளிட்ட ஏதாவது தொற்றா நோயால் பாதிக்கப்பட்டவா்களாக இருக்கிறார்கள். அவா்களில் வெறும் 2% போ் மட்டுமே மருத்துவக் காப்பீடு வைத்திருப்பவா்கள். அதிகரித்துவிட்ட மருந்துகளின் விலையும், மருத்துவமனைக் கட்டணமும் அவா்களிடம் கொஞ்சநஞ்சம் இருக்கும் சேமிப்பையும் உறிஞ்சி விடுகின்றன.
  • நோய்களுடன் போராடும் முதியோரின் நிலைமையைவிடப் பரிதாபமானது, கேட்கும் திறனோ, பாா்வைக் குறைபாடோ உள்ள முதியோர் எதிர்கொள்ளும் சோதனைகள். முதியவா்கள் பலருக்கு நடப்பதற்குத் துணை தேவைப்படுகிறது. உடல் ரீதியிலான பிரச்னைகள் மட்டுமல்லாமல், பாதிக்கும் அதிகமான முதியோர் உளவியல் ரீதியிலான பிரச்னைகளையும் எதிர்கொள்கிறர்கள்.
  • 2007-இல் பெற்றோரின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. 2010-இல் முதியோர் மருத்துவப் பராமரிப்புக்கான தேசியத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அவா்களது உடல் நலம் குறித்த நேரடிக் கண்காணிப்பு, வீட்டிற்கு சென்று கவனிப்பு, மாவட்ட மருத்துவமனைகளில் முதியோர் மருத்துவப் பிரிவு போன்றவை அதில் உறுதிப்படுத்தப்பட்டன.
  • சட்டங்களும், திட்டங்களும் முதியோர் பிரச்னைகளுக்குத் தீா்வாகாது. இளைஞா்கள் முதியோராவது இயற்கையின் நிர்பந்தம் என்பதை சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். காா்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது சமூகக் கடமையாக ஆங்காங்கே முதியோர் இல்லங்களை நிறுவியோ அல்லது அதற்கு உதவி புரிந்தோ முதியோர்கள் பராமரிப்புக்கு உதவ வேண்டும்.
  • முதியோர் இல்லங்கள் அமைவதில் தவறில்லை; அவை முதுமையைப் போற்றும் ஆலயங்களாகுமானால்...

நன்றி: தினமணி (28– 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்