- நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் திட்டமிட்டதைவிட ஆறு நாள்கள் முன்னதாகவே முடிவுக்கு வந்திருக்கிறது. டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் 29-ஆம் தேதி வரை நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து எட்டாவது முறையாக கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிவுக்கு வந்திருக்கிறது. இது ஒரு வழக்கமாகிவிட்டதாகவே தோன்றுகிறது.
- நாடாளுமன்றம் கூடுவது, இரு அவைகளும் பல்வேறு பிரச்னைகளை விவாதிப்பதற்குத்தானே தவிர, அரசு கொண்டுவரும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமல்ல. இன்னென்ன பிரச்னைகள்தான் விவாதிக்கப்பட வேண்டும் என்று ஆளும் தரப்போ, எதிர்க்கட்சிகளோ பிடிவாதம் பிடிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை பிரதிபலிப்பதாக இல்லை.
- அரசு கொண்டுவரும் மசோதாக்களையும், நாட்டில் நிலவும் பிரச்னைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க நரேந்திர மோடி அரசு தங்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை என்பது பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைக்கும் குற்றச்சாட்டு. இந்தமுறை வேடிக்கை என்னவென்றால், மக்களவையின் அலுவல் ஆய்வுக் குழுவில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகள் காரணமாக, கூட்டத்தொடரை விரைவில் முடித்துக்கொள்ள கோரிக்கை வைத்தது எதிர்க்கட்சித் தலைவர்கள் என்பதுதான். அரசும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது.
- நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் 13 அமர்வுகளில் ஏழு மசோதாக்கள் நிறைவேறியிருக்கின்றன. துணை நிலை மானியக் கோரிக்கை மசோதா, பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் - குருவிக்காரர் சமூகத்தைச் சேர்க்கும் மசோதா, கடற்கொள்ளை தடுப்பு மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
- 2020 பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடங்கி, இதுவரை நடைபெற்ற எல்லா கூட்டத்தொடர்களும் திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்பாகவே நிறைவு பெற்றிருக்கின்றன. இப்போது நிறைவடைந்திருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளின் உறுப்பினர்களும் 13 நாள்கள் கூடிக் கலைந்திருக்கிறார்கள். 17-ஆவது மக்களவையின் பதவிக் காலத்தில் மிகக் குறைந்த நாள்கள் நடைபெற்ற கூட்டத்தொடர் என்கிற சாதனை (?) படைத்திருக்கிறது இந்த குளிர்கால கூட்டத்தொடர்.
- இந்தியக் குடியரசின் முதல் மூன்று கூட்டத்தொடர்கள் உருவாக்கித் தந்த முன்னுதாரணங்களும், நடைமுறைச் செயல்பாடுகளும் இப்போது வரலாற்றுப் பதிவுகளாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. விவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் நாடாளுமன்றத்தின் அடிப்படைகளாகக் கருதப்பட்டு, அவற்றின்மூலம் அரசின் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டதுபோய், அவைகள் கூடுவதே அமளியில் மூழ்குவதற்குத்தான் என்கிற வேதனையான நிலைமைக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் தள்ளப்பட்டிருக்கிறது.
- 1967 வரை ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும் நாள்கள் குறைந்தது 120 என்று இருந்ததுபோய், இப்போதெல்லாம் 60 முதல் 70 நாள்களாக சுருங்கிவிட்டது. இந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் வெறும் 56 நாள்கள்தான் கூடியிருக்கிறது.
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் செயல்பாடுகளும் தொலைக்காட்சி மூலம் பொதுமக்களின் பார்வைக்கு உள்ளாகின்றன. நாடாளுமன்ற நடவடிக்கைகளை வாக்களிக்கும் மக்கள் நேரடியாகப் பார்க்கிறார்கள் என்று தெரிந்தும், உறுப்பினர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதில்லை.
- பெரும்பாலான நேரங்களில், அவை விவாதங்களில் பங்குபெறும் உறுப்பினர்கள் மட்டுமே அவையில் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், நாடாளுமன்ற கூட்டத்தொடருக்காக மக்கள் வரிப்பணத்தில் தலைநகர் தில்லிக்குச் செல்வதும் அவையில் அமர்ந்து நடவடிக்கைகளில் பங்கு பெறுவதற்காக என்கிற பொறுப்புணர்வுகூட பெரும்பாலான உறுப்பினர்களுக்கு இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
- ஆளுமைமிக்க கட்சித் தலைவர்களின் செல்வாக்கின் அடிப்படையில்தான் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதனால், வாக்காளர்களின் உணர்வு குறித்து பெரும்பாலான உறுப்பினர்கள் கவலைப்படுவதில்லை. நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயுமான உறுப்பினர்களின் நடவடிக்கை அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதால், நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வது தங்களது கடமை என்கிற உணர்வு அவர்களுக்கு இல்லாமல் இருப்பதாகத் தோன்றுகிறது.
- நடந்துமுடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், அவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் குறித்து விவாதிக்க முற்படாமல், இந்திய எல்லையில் சீனாவுடன் நடக்கும் மோதல் குறித்த விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியது தவறான அணுகுமுறை. கொள்ளை நோய்த்தொற்று, போர்ச்சூழல் போன்ற தேசத்தை எதிர்கொள்ளும் பிரச்னைகளில் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, அரசியல் ஆதாயம் தேட முற்படுவது பொறுப்பற்ற போக்கு.
- சீனாவுடன் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை தோற்கடிக்கும் என்பது போன்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்தும், சீனப் படையினர் இந்திய வீரர்களை விரட்டியடித்தனர் என்பது போன்ற பேச்சும் அவரது தலைமைப் பண்புக்கு ஏற்றதாக இல்லை.
- தேவையானவற்றை விவாதிக்காமல், விவாதிக்கக்கூடாத பிரச்னைகளை வலியுறுத்தும் எதிர்க்கட்சிகளின் போக்கை நரேந்திர மோடி அரசு தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு, நாடாளுமன்றத்தை விவாதமேயில்லாமல் மசோதாக்களை நிறைவேற்றிக்கொள்ளும் இடமாக மாற்றிக்கொள்கிறது. இத்தனைக்குப் பிறகும்கூட நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களே, அதுதான் வியப்பிலும் வியப்பு!
நன்றி: தினமணி (28 – 12 – 2022)