TNPSC Thervupettagam

முன்னுதாரணமாகும் டெல்லி கல்வித் திட்டம்!

February 19 , 2020 1793 days 783 0
  • உப்பு சத்தியாகிரகம் தொடர்பாகச் சட்ட மறுப்பு இயக்கத்தை காந்தி தொடங்கியபோது, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அதில் நேரடியாகப் பங்கேற்று பெரு வெற்றிபெறச் செய்தன. 1930-ல் அப்படி இந்தியக் குடும்பங்கள் அதில் ஈடுபட முக்கியக் காரணம், அது அனைவருக்கும் அவசியமான உப்பு தொடர்பானது என்பதுதான்;
  • அன்றைக்கு உப்பு எப்படி முக்கிய இடத்தைப் பிடித்திருந்ததோ இன்றைக்குக் கல்வி அந்த இடத்தைப் பிடித்துவிட்டது. கல்வியை இலவசமாகவும் தரமுள்ளதாகவும் கண்ணியமாகவும் அளித்ததால்தான் ஆஆக டெல்லியில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இனி, எல்லா அரசியல் கட்சிகளும் பின்பற்றியாக வேண்டிய நிர்வாக முறையை ஆஆக அரசு உருவாக்கியிருக்கிறது.
  • நீண்ட காலமாகவே நம் நாட்டில் கல்வி இரண்டு வழிகளில்தான் போதிக்கப்படுகிறது. ஒன்று, மேல்தட்டு வர்க்கத்துக்கு. இன்னொன்று, பெரும்பான்மையாக இருக்கும் ஏழை மக்களுக்கு. இவ்விரண்டுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று ஆஆக தீர்மானித்தது. தரமுள்ள கல்வி என்பது ‘அவசியமானது’; ‘ஆடம்பரமானது’ அல்ல என்று ஆஆக உறுதியாக நம்பியது.
  • எனவே, ஐந்து அம்சம் உள்ளதாக அந்தக் கல்வி முறையை வடிவமைத்தது, அதற்கு டெல்லியின் மொத்தச் செலவில் 25%-ஐ அதற்கு மட்டுமே ஒதுக்கியது. இந்த மாதிரி வெற்றியடைந்து மக்களால் ஏற்கப்பட்டிருப்பதால், அடுத்தகட்டச் சீர்திருத்தங்களுக்கு இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.

முக்கியமான அம்சங்கள்

  • டெல்லி கல்வி மாதிரியின் முதலாவது அம்சம், பள்ளிக்கூடத்தின் அடித்தளக் கட்டமைப்பை அடியோடு மாற்றியமைப்பது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற கட்டிடங்களும் குடிநீர், கழிவறை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாத அரசுப் பள்ளிக்கூட வளாகங்கள் அரசின் அலட்சியத்தை மட்டும் காட்டவில்லை;
  • அங்கு மாணவர்களுக்கு நன்றாகக் கற்பிக்க வேண்டும் என்ற மனநிலையை ஆசிரியர்களிடமும், நன்றாகப் படிக்க வேண்டும் என்ற மனநிலையை மாணவர்களுக்கும் உருவாக்கவில்லை. முதலில் இதை மாற்ற காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள பெரிய வகுப்பறைகளும், வகுப்பறையின் உட்புற வடிவமைப்பு கல்வியை உற்சாகமாகக் கற்கும் மனநிலையையும் ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டன.
  • பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவுக்குப் பல அடுக்குமாடிக் கட்டிடங்களாகக் கட்டப்பட்டன. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அமர தரமான அறைக்கலன்கள் வழங்கப்பட்டன.
  • கணினியுடன் இணைந்த நவீன ஸ்மார்ட் பலகைகள், ஆசிரியர்கள் இளைப்பாறவும், பாடங்களை நடத்தும் உத்திகள் தொடர்பாகத் தங்களுக்குள் விவாதிக்கவும் நல்ல வசதிகள் நிறைந்த அறைகள், கலையரங்கம், ஆய்வுக்கூடங்கள், நூலகம், விளையாட்டுகளுக்கான திடல், குடிநீர், உணவருந்த கூடம் ஆகியவையும் புதிதாக உருவாக்கப்பட்டன.
  • இரண்டாவதாக, ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியர்களுக்கும் திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், சிங்கப்பூரில் உள்ள தேசிய கல்விக்கழகம், அஹமதாபாதில் இந்திய மேலாண்மையியல் கழகம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் தனித்தனிக் குழுக்களாகச் சிறப்புப் பயிற்சி பெற அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், ஆசிரியர்களிடம் கற்பிக்கும் திறன் மேம்பட்டதுடன் தலைமைப் பண்பும் வளர்ந்தது.
  • மூன்றாவதாக, பள்ளி நிர்வாகக் குழுக்களில் மாணவர்களின் பெற்றோர்கள் தீவிரமாகவும் பயனுள்ள வகையிலும் ஈடுபடுத்தப்பட்டனர். எல்லாப் பள்ளிகளிலும் மேலாண்மைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு குழுவுக்கும் ஆண்டுதோறும் ரூ.5-7 லட்சம் வரை ஒதுக்கப்பட்டது.

முன்முயற்சிகள்

  • குறிப்பிட்ட பாடத்துக்கு ஆசிரியர் இல்லையென்றால், படித்தவர்களை வெளியிலிருந்து மாதச் சம்பளத்துக்குத் தற்காலிகமாக அமர்த்திக்கொள்ளக்கூட இந்த நிதி பயன்படுத்தப்பட்டது. பெற்றோர்களை ஆசிரியர்கள் எப்போது, எதற்காக, எப்படி அணுக வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. இந்தக் கூட்டங்களுக்கு வருமாறு பெற்றோரை டெல்லி பண்பலை வானொலி ஒலிபரப்புகள் மூலமும் பத்திரிகைகள், இணையதளங்கள் வழியாகவும் அழைப்புவிடுத்தனர்.
  • நான்காவதாக, மாணவர்களுக்குக் கற்றுத்தரும் பாட முறைகளிலும், மாணவர்கள் பயிலும் பாடத்திட்டங்களிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.
  • 2016-ல் அரசுப் பள்ளிகளில் ஒன்பதாவது வகுப்பு மாணவர்களில் 50% பேர் பள்ளியிறுதித் தேர்வில் தோல்வியடைந்தனர். தொடக்கக் கல்வியில் இருந்த குறைகளால் மாணவர்களுக்கு ஏற்பட்ட அடிப்படைத் திறன் குறைவால்தான் இந்தத் தோல்வி என்பதை டெல்லி அரசு உணர்ந்தது.
  • எல்லாக் குழந்தைகளுமே நன்றாக எழுத்துக்கூட்டி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும், அடிப்படையான கணக்குகளை எளிதாகப் போடவுமான பயிற்சிகளை வழக்கமான பாடங்களுடன் சேர்த்து நடத்துவதற்குச் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டது. நர்சரி வகுப்பு தொடங்கி எட்டாவது வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு ‘மகிழ்ச்சிப் பாடத்திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஒன்பதாவது முதல் பன்னிரண்டாவது வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கென ‘தொழில்முனைவோர் மனநிலைக்கான பாடத்திட்டம்’ உருவாக்கப்பட்டது. இவ்விரண்டுடன் மாணவர்கள் இப்போது பயின்றுவரும் பாடங்களில் மேலதிகக் கவனத்தைச் செலுத்தி பயிற்றுவித்ததால் பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது.
  • ஐந்தாவதாக, அரசுப் பள்ளிக்கூடங்களின் தரம், வளர்ச்சி காரணமாக டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டணங்கள் உயரவில்லை. தனியார் பள்ளிக்கூடங்கள் ஆண்டுதோறும் 8% முதல் 15% வரை கட்டணங்களை உயர்த்திக்கொண்டிருந்தன.
  • தனியார் பள்ளிக்கூடங்களில் தேவைக்கும் அதிகமாக வசூலித்த கட்டணங்களை ஆம் ஆத்மி அரசு தணிக்கைசெய்து நடவடிக்கை எடுத்ததால் மாணவர்களிடமே ரூ.32 கோடி திரும்பத் தரப்பட்டது. தனியார் பள்ளிக்கூடங்கள் கட்டணத்தை உயர்த்த விரும்பினாலும் அரசு நியமித்த தணிக்கையாளர்களால் ஆய்வுசெய்யப்பட்ட பிறகே அனுமதி தரப்பட்டது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தத் தனியார் பள்ளிக்கூடமும் கட்டணத்தை உயர்த்த முடியவில்லை.

இரண்டாவது செயல்திட்டம்

  • கடந்த காலத்தில் கிடைத்த பலன்களை உறுதிசெய்வதுடன் சீர்திருத்தம் தொடர்வதற்கு மூன்று பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதலாவதாக, ஒன்று முதல் எட்டாவது வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மறுபரிசீலிக்கப்படும். கற்றலுக்கான அடிப்படைக் கூறுகள் மீது கவனம் செலுத்தப்படும்.
  • அங்கன்வாடிகள் மூலம் குழந்தைப் பருவத்திலேயே அவர்களுடைய சுகாதாரம், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். எல்லா அரசுப் பள்ளிக்கூடங்களிலும் மழலையர் பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்தப்படும்.
  • இரண்டாவதாக, ‘டெல்லி கல்வி வாரியம்’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். எதையும் நுட்பமாக அலசி ஆராயும் திறன், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், பெற்ற அறிவைப் பிற மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் திறன் ஆகியவை வளர்த்தெடுக்கப்படும்.
  • 21-ம் நூற்றாண்டு விடுக்கும் சவால்களை அவர்கள் துணிவுடன் எதிர்கொள்ளவும், தொழில்முனைவோராக உருவாகவும் பாடத்திட்டங்களும் பயிற்சிகளும் உதவும். டெல்லி பள்ளிகளில் படிப்பை முடித்தவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், கணினி உள்ளிட்டவற்றைக் கையாளும் திறனைக் கற்றுத்தரவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • இது அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற உதவும். மூன்றாவதாக, டெல்லியின் 29 மண்டலங்களில் தலா ஒரு சிறப்புப் பள்ளிக்கூடம் ஏற்படுத்தப்படும். அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், மொழி, நிகழ்த்துக் கலைகள், விளையாட்டு ஆகியவற்றில் மாணவர்களுக்குள்ள ஆர்வத்தையும் திறனையும் இதனால் வளர்க்க முடியும்.
  • நிர்வாகப் பட்டியலில் கல்விக்குத்தான் முன்னுரிமை என்று டெல்லி திட்டவட்டமாக அங்கீகரித்துவிட்டது. எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான, சமத்துவமான, வாய்ப்புகள் நிரம்பிய கல்வி கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தை அரசு பூர்த்திசெய்யும்.

நன்றி: இந்து தமிழ் திசை (19-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்