TNPSC Thervupettagam

முன்னுதாரணம் ஆகட்டும் மாதிரிப் பள்ளிகள்

September 6 , 2022 703 days 389 0
  • தமிழ்நாடு எதிர்கொள்ளும் முக்கியமான ஒரு பிரச்சினையை அங்கீகரித்து, அதற்கு முகம் கொடுத்துகிறது அரசு. ஆசிரியர் தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் தொடர்பான  அறிவிப்பானது, நம்முடைய பள்ளிக்கல்வித் துறையில் முக்கியமான ஒரு முன்னெடுப்பு.
  • தமிழகத் தொடக்கக் கல்வி பெரும் சரிவை எதிர்கொண்டிருக்கிறது. இரு தசாப்தங்களாக இது படிப்படியாக நடந்தது. மாநிலத்தின் பெரும் பகுதி மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளுடைய தரம் வீழ்ச்சியடைந்தது இதற்கு முக்கியமான ஒரு காரணம்.
  • அரசுப் பள்ளிகளுக்கே உரித்தான ஆசிரியர்கள் பற்றாகுறை, நிரப்பபடாத காலிப் பணியிடங்கள், ஆசிரியர் வேலைக்கு அப்பாற்பட்டு திணிக்கப்படும்  நிர்வாகப் பணிகள், கற்பித்தல் சாதனங்களின் போதாமை போன்ற கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர் சமூகமும் தங்களுடைய உயிர்ப்புணர்வை இழந்தது. அதாவது, ஒட்டுமொத்தக் கல்வி நீரோட்டத்தில் தாங்களும் முக்கியமான பங்கேற்பாளர்கள் எனும் உணர்வையே அரசுப் பள்ளிகள் பெருமளவில் இழந்தன. தரமான உயர்கல்விக்கான போட்டியிலோ நல்ல வேலைக்கான சந்தையிலோ அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடம் என்ன என்ற கேள்வியையே அவை கேட்டுக்கொள்ளத் தவறின.
  • ஏதோ ரேஷன் கடைக்காரர்கள் ஏழை எளியோருக்கு அரசு மூலமாக வரும் அரிசியை வழங்குவதுபோலத் ஏழைக் குழந்தைகளுக்குத் தேர்ச்சியை வழங்குவதோடு தம் பணி முடிந்தது என்ற நிலைக்குப் பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் வந்துவிட்டனரோ என்று எண்ணத் தோன்றியது.
  • உலகெங்கும் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக மக்கள் நல அரசுகள் செலவிடும் தொகை தொடர்ந்து அதிகரிக்கப்படுவது எப்படி ஒரு சமூகக் கடமையாகப் பார்க்கப்படுகிறதோ அதேபோல, இப்படிச் செலவிடப்படும் தொகைக்கான விளைவுகள் மதிப்பிடப்படுவதும் ஒரு சமூகக் கடமையாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, ஒரு துறையில் எவ்வளவு செலவிடுகிறோம், பலன்களாக எவற்றைப் பெறுகிறோம் எனும் கேள்விக்கு நியாயமான பதிலைப் பெறுவது முக்கியம். நம்முடைய கல்வித் துறையில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டால் கிடைக்கும் பதிலானது  பெரியளவில் ஏமாற்றத்தையும் ஆயாசத்தையுமே தரும்.
     
  • போதாமைகள் நிறைய இருந்தாலும் தமிழ்நாட்டில் அது திமுகவோ, அதிமுகவோ இரு கட்சிகளுமே கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை இயன்ற அளவுக்கு வழங்கிவந்திருக்கின்றன. கால் நூற்றாண்டுக்கு முந்தைய சூழலை ஒப்பிட அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. ஆனால், "எங்கள் ஊருக்கு அரசுப் பள்ளி வேண்டும். எங்கள் ஊர் அரசுப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும்" என்று போராட்டங்கள் நடந்த காலம் போய் போதிய மாணவர்கள் எண்ணிக்கை இல்லாமல் அரசுப் பள்ளிகள் மூடப்படும் / இணைக்கப்படும் சூழல் இன்று உருவாகிவருவது வெளிப்படுத்தும் செய்தி என்ன?
  • அரசுப் பள்ளிகள் தங்கள் செல்வாக்கை இழப்பதற்கு ஏராளமான காரணங்கள். அவற்றில் முக்கியமான ஒன்று, நல்ல உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்துவருவது ஆகும். குறிப்பாக தேசிய அளவில் ஒன்றிய அரசால் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தமிழகத்திலிருந்து செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். சொல்லப்போனால் பள்ளியிறுதித் தேர்வு எழுதி வெளியே வரும் பல லட்சம் மாணவர்களில் சில நூறு பேர்கூட இத்தகு உயர் படிப்புகளுக்கு இங்கே விண்ணப்பிப்பதே இல்லை. காரணம், நம் மாணவர்களின் தகுதியின்மை அல்ல; தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக  அவர்களுக்கு உத்வேகம் தரும் பின்னணியின்மை. 
     
  • தேசிய அளவிலான உயர்கல்வி இடங்களில் தமிழக மாணவர்கள் - குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கல்வியாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவந்தனர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதுமே இந்த விஷயத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டது. தமிழக அளவிலேயேகூட நல்ல உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைச் சென்ற ஆண்டில் முதல்வர் ஒருமுறை குறிப்பிட்டுப் பேசினார்.
  • விளைவாக இந்த அரசு பிரதான கவனம் கொடுக்கும் துறைகளில் பள்ளிக்கல்வித் துறை ஒன்றானது. தலைமையாசிரியர்களை, ஆசிரியர்களை உத்வேகப்படுத்துவதற்கான புத்தாக்கப் பயிற்சிகளில் ஆரம்பித்து கற்பித்தல் முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான யோசனைகள் வரை பல முயற்சிகள் இன்று நம் கல்வித் துறையில் நடக்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே இப்போது 'மாதிரிப் பள்ளிகள்' தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
  • அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடையே உத்வேகத்தை உருவாக்கவும், நன்றாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களைத் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாகத் தயார்படுத்தவும் முன்னதாக 'மாதிரிப் பள்ளிமுறை'யை 10 இடங்களில் பரீட்சார்த்தமுறையில் அரசு முயற்சித்திருக்கிறது. இந்த முயற்சியில் நல்ல பலன் கிடைத்திருப்பதன் விளைவாகவே  ஏற்கெனவே நடத்தப்பட்டுவந்த 10 பள்ளிகளோடு கூடுதலாக 15 பள்ளிகள் சேர்த்து இந்த ஆண்டு முதல் 25 மாதிரிப் பள்ளிகள் நடத்தப்படும் என்று அரசு இப்போது அறிவித்திருக்கிறது.
     
  • தமிழ்நாட்டுக்கு 'மாதிரிப் பள்ளி' எனும் சொல் புதிது இல்லை. இந்தப் பத்து ஆண்டுகளுக்குள் வெற்றிகரமான விளைவுகளை இருவேறு மாவட்டங்களில் ஏற்கெனவே தந்த அமைப்பு இது. தமிழ்நாட்டின் பின்தங்கிய பிராந்தியங்களான ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூரில் இது பெரிய வெற்றிகளைத் தந்தது. இந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், உத்தேசமாகப் பள்ளிக்கு ஒருவர் என்பதுபோல நன்கு படிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கென்று ஒரு பிரத்யேகமான உண்டு உறைவிடப் பள்ளியை உருவாக்கி, நல்லாசிரியர்களைக் கொண்டு தயார்ப்படுத்தும் பணியையே இந்த 'மாதிரிப் பள்ளி'கள் செய்தன.
  • இதற்கு நல்ல பலன் இருந்தது. மருத்துவம், பொறியியல், சட்டம் எனப் பல்வேறு துறைகளிலும் நல்ல உயர்கல்வி வாய்ப்புகளை இங்கு பயின்ற மாணவர்கள் பெற்றார்கள். இந்தப் பள்ளிகளில் கைவரப் பெற்ற அனுபவங்களை இங்குள்ள ஆசிரியர்கள் ஏனைய அரசுப் பள்ளி ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொண்டனர். அது அந்த மாவட்டங்களில் ஒரு தொடர் மாற்றத்துக்கு வித்திட்டது.
  • இப்போது இந்த முறையை முன்னுதாரணமாகக் கொண்டுதான் மாநிலம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு 'மாதிரிப் பள்ளி' என்று அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டுசெல்ல விழைகிறது. அடுத்தடுத்த நிலைகளில் வட்டத்துக்கு ஒரு பள்ளி என்ற அளவுக்குப் பல நூறு பள்ளிகளாக இது விரித்தெடுக்கப்படும் என்கிறார்கள். இந்த 'மாதிரிப் பள்ளி'களிடம் இருந்து புதிய கலாச்சாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் முகமாகத்தான் 'தகைசால் பள்ளிகள்' திட்டமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
     
  • அரசுப் பள்ளிகளில் நல்ல முறையில் செயல்படும் பள்ளிகள் தம்மை மேம்படுத்திக்கொள்ள அவற்றுக்குச் சிறப்பு நிதி வழங்க வழிவகுக்கும் திட்டம் இது. அதாவது, 'தகைசால் பள்ளிகள்' என்று அறிவிக்கப்படும் பள்ளிகள் முழு நிறைவைப் பெறும் வகையில் கூடுதல் நிதியைப் பெறும். அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் மாதிரிப் பள்ளிகளுக்கும் தகைசால் பள்ளிகளுக்கும் இடையில் நடக்கும் பரிவர்த்தனைகள் ஏனைய எல்லாப் பள்ளிகளுக்கும் விஸ்தரிக்கப்படும் என்று தெரிகிறது. 
  • திட்டமிடப்பட்டிருக்கும் விஷயங்கள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தால் நிச்சயமாக முதல்வரின் அறிவிப்பானது தமிழகப் பள்ளிக்கல்வித் துறையில் பெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும். தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எதிர்கொள்ளும் மோசமான தேக்கம் முடிவுக்கு வரும். நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான நல்ல உயர்கல்வி வாய்ப்புகளை, நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். நல்ல திட்டம். கல்வித் துறை அதிகாரிகளும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து இதை வெற்றியடையச் செய்ய வேண்டும்!

நன்றி: அருஞ்சொல் (06 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்