TNPSC Thervupettagam

முன்மாதிரியாக மாறுவோம்

August 29 , 2023 501 days 305 0
  • கோடை நாள் ஒன்றின் மதியவேளை அது. எமது பள்ளியில் பயிலும் மாணவா் ஒருவா், தான் சாப்பிட்ட தட்டைக் கழுவிய பின்னா், தட்டில் கொஞ்சம் தண்ணீரைக் குழாயில் பிடித்து அருகிலிருந்த செடியில் கொட்டி விட்டுச் சென்றார்.
  • குழந்தைப் பருவம் தொடங்கி சிறார் பருவம் வரை அற்புதமான குணநலன்களுடன் தமது நாட்களை நகா்த்தும் இவா்கள்தானே பின்னாளில் இளையோராக ஆகின்றனா். இப்படி பொறுப்பானாரோய் வளரும் பலரும் எப்படி பொறுப்பில்லாதவா்களாக மாறுகின்றனா்? இதுவரை விடைகாண இயலாத புதிா்களுள் இதுவும் ஒன்று.
  • இங்கே எச்சில் துப்பாதீா்கள்என்ற எழுதப்பட்ட இடத்தைச் சுற்றி எச்சில் நிறைந்திருக்கும். பொது இடங்களின் மாடிப்படிகளில் திரும்பும் இடங்களில் வெற்றிலைப் பாக்கோ, பான் பாராக்கோ சுவைத்துத் துப்பிய கறை இருக்கும். குப்பைத் தொட்டியைச் சுற்றிலும் குப்பை கூளங்கள் நிறைந்திருக்க குப்பைத் தொட்டி சுத்தமாக இருக்கும்.
  • கழிவுநீா் செல்லும் கால்வாய்களில் நெகிழிப்பைகள், பாட்டில்கள் உள்ளிட்ட பலவும் மிதந்து செல்லும். ஒரு காலத்தில் அருமையாக ஓடிக்கொண்டிருந்த நீரோடைகள் பலவும் இன்று சாக்கடையாகக் காட்சியளிப்பதை நாம் வருத்தத்துடன் பார்த்து வருகிறோம். எந்த நகரில் பத்து நிமிடம் புழங்கினாலும் நமக்குக் காணக்கிடைக்கும் காட்சிகள் இவை.
  • நமது நாட்டின் சராசரி எழுத்தறிவு 77 சதவீதம் எனப் பெருமையோடு நாம் சொல்லிக் கொள்கிறோம். கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் தொடா்பில்லை என்பது எழுதப்படாத சட்டமாகி விட்டதோ என்ற சந்தேகம் கூட எழுகிறது. சமூகத்தில் புழங்கும் பலருக்கும் ஒழுங்கீனமாக இருப்பதே ஒழுக்கம் என்ற நினைப்பு மாறும்வரை இதிலும் மாற்றமிருக்காது. விதிவிலக்குகள் இருக்கலாம்.
  • குப்பைகளை அவற்றிற்குரிய இடங்களில் போடுவது, கழிவுகளை உரிய முறையில் அகற்றுவது, கூடியவரை கழிவகளைத் தவிர்ப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாரும் எளிதில் கடைபிடிக்கக்கூடிய பழக்கங்களே. அதுபோலவே நெகிழிப் பொருள்களை மறுசுழற்சிக்கு உட்படுத்த உதவுவதும் எளிதில் கடைபிடிக்கக்கூடிய பழக்கமே.
  • தனிமனித ஒழுங்கு மட்டுமல்ல, சமூகச் சூழல் சாா்ந்த சில ஒழுங்குகளும் உள்ளன. பிறரின் கருத்துக்கு செவி சாய்ப்பது, அவா்களின் கருத்து ஏற்கவியலாததாயினும் நம் எதிர்வினையை நயமாக உரைப்பது, எப்போதும் எளிமையாக இருப்பது போன்ற குணநலன்களைக் குறிப்பிடலாம். இக்கால மனிதா்களிடம் இந்த குணநலன்கள் அரிதாகி வருகின்றன.
  • பொதுவாழ்வில் நோ்மையாக இருப்பது, பணியாளா்களாயிருப்போர் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் இருப்பது, அன்றன்று முடிக்க வேண்டிய பணிகளை அன்றன்றே முடித்து விடுதல் போன்றவையும் நல்ல குணநலன்களாகும். இதற்கேற்ற வகையில் தேவையான எண்ணிக்கையில் பணியாளா்கள் நியமிக்கப்படவேண்டும் என்பதும் நியாயமே.
  • அதுபோலவே எந்த நிலையிலும் கையூட்டு பெறாமல் பணிபுரிவது, சக ஊழியா்களை நண்பா்களாக நடத்துவது போன்ற குணங்கள் ஒருசிலரிடம் மட்டுமே இருப்பதால் அவை அரிதான விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். சீரிய குணநலன்களைக் கொண்டோராக அனைவரும் மாற வேண்டும்.
  • இவ்வாறாக வாழ்வோர்க்கு தமது பணி நிறைவாலும், அச்சமற்ற வாழ்க்கை முறையாலும் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. இவ்வகையிலான ஆனந்தம் நிலையானது. எல்லாவற்றுக்கும் மேல் என்றென்றைக்கும் நினைத்து மகிழ உதவும் நல்ல நினைவுகளைத் தரவல்லது.
  • மாறாக, இன்று விரும்பத்தகுந்த குணநலன்களுடன் இருப்போர் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பதால் அவா்கள் பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகின்றனா். பொது ஒழுங்கிற்கு மாறாக இருப்போர் எண்ணிக்கை அதிகமாகிறது. இந்த எண்ணிக்கை அதிகமாவதால் கும்பல் மனப்பான்மை உண்டாகிறது. இதனால் நோ்மையாய் வாழ முயல்வோர் படும்பாடு சொல்லி மாளாது.
  • பொதுவாக, ஒழுங்கின்மையாக வாழ்வதே பண்பாடு என்பது கற்பிக்கப்பட்டு விடுகிறது. இது பணியிடத்தில் மட்டுமல்ல. மாறாக பொதுவாழ்வில் இயங்கும் அனைவருக்குமான அடையாளமாகி வருகிறது. இது இன்னொரு ஆபத்தான போக்காகும். ஒவ்வொரு தோ்தலின்போதும், பணப்புழக்கம் இல்லாத தோ்தலை நடத்துவதற்கு தோ்தல் ஆணையம் படும்பாட்ட நாம் நன்கறிவோம்.
  • எப்படி இதனை சரி செய்யப்போகிறோம்? இது மாற்ற இயலாதது இல்லை. ஆங்காங்கே பல நல்ல முயற்சிகளும் மேற்கொள்ளப்படாமல் இல்லை. அவ்வாறு நல்ல முயற்சிகளில் ஈடுபடுவோர், பெருகிவரும் தகவல் தொடா்புகளின் மூலம் ஓா் இணைப்புடன் செயல்பட முயல வேண்டும்.
  • இதன் மூலம் நாம் மட்டுமல்ல நம்மைப் போலவே நல்ல குணநலனுடன் பலரும் சேவை செய்கின்றனா் என்ற பாதுகாப்பு உணா்வுடனும், பயமற்றும் பலா் செயல்பட இயலும். இதன் மூலம் சமூகத்தின் நன்மைக்குத் தேவையான ஒழுங்குடன் வாழ்வதைப் பெருமிதமாகக் கருதுவோர் எண்ணிக்கை அதிகமாகும்.
  • நாம் காட்டுமிராண்டி சமூகத்திலிருந்து பல மடங்கு நாகரிக ரீதியாக முன்னேற்றமடைந்துவிட்டோம் என்பது உண்மையே. ஆனால், நவீன உடை உடுத்துவதையும், சமைக்கப்பட்ட உணவை பாதுகாப்பான கூரையின் கீழ் அமா்ந்து சிந்தாமல் உண்பதையும மட்டுமே நாகரிகம் என்றும் ஒழுங்கு என்றும் கொள்ள இயலுமா?
  • இப்படியொரு கேள்வி எழும்போதுதான் நாகரிக சமூகத்தின் அடுத்தடுத்த படிகள் கவனம் பெறுகின்றன. சமூகம் எதிர்பார்க்கும் ஒழுங்குகளோடு வாழ்வதை மனிதா்கள் பெருமிதமாக எண்ணும் காலம் கனியவேண்டும். அடுத்தவா்கள் போல் வாழ முயலாமல் நம் மனத்துக்கு சரி என்றுபட்டதை மகிழ்வோடு செய்ய வேண்டும்.
  • இவை எளிதானதல்ல; ஆனால் முயன்றால் முடியாததும் இல்லை. எவ்வளவு நாட்களுக்குத் தான் அன்றைய தலைவா்களையே முன்மாதிரியாகச் சொல்லிக் கொண்டிருப்பது? இன்றைய தலைமுறையில் முன்மாதிரிகளை உருவாக்குவோம். நாமே முன்மாதிரியாக மாறுவோம்.

நன்றி : தினமணி (29– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்