மும்மொழிக் கொள்கை அவசியம்!
- சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்பது தமிழர்களின் வாழ்வியல். பாண்டியன் அரசவையில் ரோமானியப் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர்; ரோமானிய அரசவையில் தமிழர்கள் இருந்தனர் என்பதை நெஞ்சு நிமிர்த்திப் பெருமையுடன் ஒவ்வொரு தமிழரும் சொல்லிக் கொள்கிறோம். அதன் உள்ளிருக்கும் பொருள், தமிழ் ரோமானியத்தை ஏற்றது. அதனால் ரோம் வரை தமிழ் சென்றது. இப்படி அரவணைத்து நட்பு பாராட்டி தமிழை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர்கள் நமது மூதாதையர்கள்.
- தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளர்கள் பன்மொழி வித்தகர்கள். சங்க இலக்கியத்தில் கபிலர் பன்மொழிப் புலவர், ஆரிய அரசன் பிரஹத்தனுக்குத் தமிழ் கற்பிக்கவே குறிஞ்சிப் பாட்டைத் தந்தார். கம்பர் தனது பன்மொழிப் புலமையின் ஆற்றலால் தந்த கம்பராமாயணம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது.
- இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்கள் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (தெ.பொ.மீ) பதினெட்டு மொழிகள் அறிந்தவர். கா.அப்பாத்துரையார், தமிழ், மலையாளம், ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் புலமை கொண்டவர். ஜெர்மன், கிரேக்கம் உள்ளிட்ட பத்து மொழிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு உலக இலக்கியங்கள் என்ற நூலை இயற்றியவர்.
- மு.கு.ஜகந்நாத ராஜா இந்திய மொழிகளில் தமிழின் சிறப்பை நிலைநாட்டியவர். தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம், பிராகிருதம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கவிகளை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தவர். திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு ஆகியவற்றை தெலுங்கிலும், முத்தொள்ளாயிரத்தை மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளார். தமிழ்மொழியின் பெருமை வளர வேண்டுமானால் தமிழருக்குப் பன்மொழி அறிவு அவசியம்.
- "ஒரு மொழியின் இலக்கியத்தைச் சிறந்தது எனச் சொல்ல வேண்டுமானால் பிற மொழி இலக்கியங்கள் குறித்த அறிவும் சிறப்பெனக் குறிப்பிடும் இலக்கியத்தின் மொழியில் நுண்மாண் நுழைபுலமும் பெற்றிருக்க வேண்டும்.
- பிறவற்றை அறியாமலோ தன்னுடையதை முழுமையாக உணராமலோ புதிய தடங்களைக் காண முடியாது' என்று தெ.பொ.மீ அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
- தமிழக அரசியலில் பல காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மொழி அரசியல் மேற்சொன்ன செய்திகளைப் பேசுவதில்லை.
- "தமிழகம் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறது. அது தமிழ்நாட்டின் தமிழர்களின் விருப்பம்' என்று சொல்லப்படுகிறது. இதுவே தமிழர் மரபுக்கு எதிரானது. கடலோடிகளான தமிழர்கள் மொழிகளைக் கற்கும், ஏற்கும் ஆர்வம் உடையவர்களாக இருந்தனர்.
- மகாத்மா காந்தியடிகள் ஏற்படுத்திய ஹிந்தி பிரசார சபாவில் தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து ஹிந்தி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. தொழில் நிமித்தம் காரணமாக பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழி, சீன மொழி என உலக மொழிகளைக் கற்பதிலும் ஆர்வம் காட்டுவோரும் இருக்கின்றனர்.
- தேசிய கல்விக்கொள்கையை ஏற்பது தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உண்மைகளை அலசுவது கட்டாயமாகிறது. ஹிந்தி திணிப்பு என்ற சொல்லும் அரசியலும் தமிழகத்துக்குப் புதிதல்ல. ஆனால் தற்போதைய மத்திய அரசு ஹிந்தி என்ற சொல்லைக் கூடப் பயன்படுத்தவில்லை. மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழி ஏதேனும் ஓர் இந்திய மொழி என்கிறது.
- ஹிந்தி திணிப்பு என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டு மொழித்திணிப்பு என்ற சொல் இப்போது களத்திற்கு வந்திருக்கிறது. நமக்கு ஹிந்தி ஆதிக்கம், திணிப்பு என்பதல்ல பிரச்னை. எந்த மொழியையும் ஏற்க மாட்டோம் அல்லது மத்திய அரசு சொல்வது எதுவாயினும் எதிர்ப்போம் என்பதே நிலைப்பாடு. இந்திய மொழிகளில் எதனையும் ஏற்க மாட்டேன் என்பது பிரிவினைவாதத்துக்கான கருத்து. இது தமிழர்களுக்கு எவ்விதத்தில் பயன்படும்?
- தேசிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை என்பதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. முதல் மொழி அவரவர் தாய் மொழி என்கிறது. நம் பிள்ளைகள் நமது தாய் மொழியில் கல்வி கற்பதை நாம் எதிர்க்கிறோமா?
- மூன்றாவது மொழியாக ஏதேனும் ஓர் இந்திய மொழி எனக்குத் தேவையில்லை; அது எங்கள் உரிமை என்று பேசும்போதே ஏனைய இந்திய மாநிலங்களும் நம்மைப் பின்பற்றி தமிழை அப்படிச் சொல்லத் தொடங்கினால் அது நமக்குப் பெருமையாகுமா? நமது நிலைப்பாடு இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரானதாகாதா?
- ஒருவருக்கொருவர் எனது மொழியை ஏற்காதவர் என்ற காழ்ப்புணர்வை வளர்த்துக் கொள்வது சரியா? அல்லது இணக்கத்துடன் நாடு முழுவதும் தமிழும் தமிழ்நாட்டில் பிற இந்திய மொழிகளும் என்று பரிவர்த்தனை செய்துகொள்வது சரியா? தமிழின் தொன்மையை- பெருமையை தேசமெங்கும் கொண்டு சேர்ப்பது நமது கடமை எனில், இந்த மூன்றாவது இந்திய மொழியை ஏற்பது அதற்கான சரியான வழிதானே...ஏன் எதிர்க்க வேண்டும்?
- மூன்றாவது மொழி என்பது மாணவர்களுக்கான சுமையை ஏற்றுவதாகும் என்ற கருத்து மாணவர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, அறிவியலுக்கும் எதிரானது. மூளையின் செயல்பாடு ஆர்வத்துடன் எதனையும் கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது. குழந்தைகள் ஒரு மொழி-இரு மொழி என்றில்லை, ஒரே நேரத்தில் பல மொழிகளை எளிதாகப் புரிந்துகொண்டு கற்கும் திறனுடன் நினைவாற்றலும் கொண்டவர்கள் என்கிறது அறிவியல்.
- தமிழகத்தில் ஒரு மொழியைக் கற்பது சுமை, தேர்வு எழுதுவது சிரமம் என்றெல்லாம் தொடர்ந்து பேசப்படுவது மாணவர்களின் மனதில் பெரிய அளவில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. நமக்கு மொழி கற்பது சிரமம் சுமை என்று தொடர்ந்து சொல்லச் சொல்ல, அதை இன்றைய தலைமுறைக் குழந்தைகள் நம்பவும் தொடங்கிவிட்டனர். விளைவு, தமிழகத்தில் தமிழ் மொழியில்கூடத் தேர்ச்சி பெற முடியாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
- ஒரு மொழியைக் கற்பதன் பயன் பொருளாதாரம், வேலைவாய்ப்பு குறித்தது மட்டுமல்ல. அது மனிதனின் மனவளம், சிந்தனை, ரசனை சார்ந்ததும் ஆகும். வளர்ந்துவரும் மனஅழுத்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் அமையலாம். மொழியும் இலக்கியமும் மனித வரலாற்றின் அற்புதங்கள். அவற்றைத் தேவையில்லை என்று தள்ளுவது அறிவுடைமையாகாது.
- "சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம்' என்ற கோட்பாட்டை நம்பும் நாட்டில், கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும். தாங்கள் விரும்பும் மொழியைப் படிப்பதற்கான சுதந்திரம் வேண்டும். அதன்மூலம் சகோதரத்துவம் போற்றப்பட வேண்டும். வசதி உடையவர்கள் விரும்பியதைக் கற்றுக்கொள்ளலாம். வசதி இல்லாதவர்கள் கற்க உரிமையில்லை என்ற நிலைப்பாடு அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது. அரசியல்வாதிகளின் மகன் விரும்பினால் எந்த மொழியும் கற்றுக்கொள்ள முடிகிறது; ஓர் ஏழை மாணவனுக்கு அது சாத்தியமில்லை என்பது எவ்விதத்தில் சமத்துவம்?
- கற்கும் வாய்ப்புடையவர்களை விமர்சிப்பது நமது நோக்கமல்ல; ஆனால், கடைக்கோடியில் இருக்கும் குழந்தை வரை அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். உருது மொழி கற்றுக் கொடுக்கும் அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. வரவேற்கிறோம். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், சம்ஸ்க்ருதமும், வங்காளமும் என இன்னும் வாய்ப்புகளை விஸ்தரிப்பதில் என்ன தவறு?
- திணிப்பு என்ற சொல்லில் அர்த்தமில்லை. தேசிய கல்விக்கொள்கை மூன்று மொழிகள் குறித்துப் பேசினாலும், மூன்றாவது மொழியை மாணவர்கள் மீது அரசு திணிக்க முடியாது என்பதற்கும் வழிவகை செய்துள்ளது. மாணவர்களின் விருப்பம், பெற்றோர் ஆசிரியர் அமைப்புகள் தரும் விருப்ப முறையீடுகள் என மாணவர்கள் பெருமளவில் விரும்பும் மொழியை மட்டுமே பள்ளியில் வழங்க முடியும். எந்த மொழியையும் அரசு கட்டாயப்படுத்த முடியாது.
- தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதால் நமது மாணவர்களுக்கான கல்வித்தரம் மேம்படுமேயன்றி குறைவுபடாது. ஏற்கெனவே தமிழகத்தில் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகள் பயிற்றுவிக்கப்பட்டு வரும் நிலையில் அதனை அனைவருக்குமாக விரிவுபடுத்துவதில் தவறில்லை.
- மொழிக் கொள்கை என்பது இங்கே கட்சிகளின் சித்தாந்தம் மட்டுமே. மக்களின் நலனுக்காகத்தான் அரசு; கட்சிகளின் சித்தாந்தத்துக்காக அல்ல. மாறிவரும் சூழலில் உலகத் தரத்திற்குக் கல்வியை நாமும் உயர்த்திக் கொள்ள வேண்டும். இன்றைய ஒவ்வொரு மாணவரின், பெற்றோரின் விருப்பங்களை அறிந்துகொள்ள வேண்டிய காலமும் கட்டாயமும் வந்திருக்கிறது. 1960-களில் மேற்கொண்ட மொழிக்கொள்கையை இன்றைக்கும் பிடித்துக் கொண்டு நிற்பது ஏற்புடையதல்ல.
- மாநில அரசுப் பள்ளிகள், மத்திய அரசுப் பள்ளிகள் எனப் பாகுபாடின்றி அனைத்துப் பள்ளிகளும் சமமான தரத்தில் கல்வியை வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதுவே அடுத்த தலைமுறைகளுக்கான நமது கடமை. அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க இணக்கமான போக்கைக் கையாள்வதை விடுத்து அரசியல் செய்வது சரி அல்ல.
நன்றி: தினமணி (20 – 02 – 2025)